புதிய வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் சமீபத்திய நிதி நிலை அறிக்கையில், தொழில் துறை சார்ந்த வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற குறை பரவலாகப் பேசப்படுகிறது.
Updated on
3 min read

மத்திய அரசின் சமீபத்திய நிதி நிலை அறிக்கையில், தொழில் துறை சார்ந்த வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற குறை பரவலாகப் பேசப்படுகிறது. அறிக்கையை மேலோட்டமாக பார்க்கும்போது அப்படித் தோன்றினாலும், வெளியிடப்பட்டிருக்கும் பல அறிவிப்புகளைக் கூர்ந்து கவனித்தால், அவைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் புதைந்து கிடக்கின்றன என்பதுதான் உண்மை. ஒவ்வொருவரும், தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்வதில்தான் அவர்களின் தனிப்பட்ட திறமை அடங்கியிருக்கிறது. 
எளிய உதாரணமாக, 80 (டி) பிரிவின் கீழ், ஹெல்த் இன்சூரன்ஸ் - மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் - தொகை, 30,000 ரூபாயிலிருந்து, 50,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது, சுய தொழில் செய்யும் இன்சூரன்ஸ் முகவர்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பாகும். அதிக பாலிஸிகளை எடுத்து, முகவர்கள் கூடுதல் கமிஷன் வருமானம் ஈட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
250 கோடி வரை வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு வரித்தொகை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருப்பது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாகும். 
மேலும், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக் கடன் மற்றும் இடர்பாட்டு கடன்களுக்குத் தீர்வு காணும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்ற செய்தி, நிதி தட்டுப்பாடு காரணமாக முடக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குப் புத்துயிர் அளிக்கும்.
நாட்டில், 45 சதவீதத்தினருக்கு மேல் வேலை வாய்ப்புகளை அளிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலனை மையமிட்டிருக்கும் இந்த அறிவுப்புகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. 
தொழில் சார்ந்த தனித் திறமை மற்றும் அம்மாதிரி திறமை இல்லாதவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை அளித்து அரவணைப்பது இத்துறையின் பிரத்தியேக அடையாளமாகும்.
இதேபோல், அரசாங்கத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குடிமக்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை, நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்புதான். 
அரசுத் துறையில் நேரடியாகப் பணி புரிந்தால்தான் கெளரவம் என்று நினைப்பவர்கள், நேரடி அரசுப் பணி கிடைக்காவிட்டால், பெரும்பாலும் விரக்தி நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், அரசுத் துறைகளில் புதிதாக உருவாகும் பணியிடங்கள் வெகு குறைவுதான். 
2016-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை (இராணுவத்தை தவிர) சுமார் 2.15 கோடியாகும். ஒரு லட்சம் பேருக்கு 1600 பேர் என்ற விகிதத்தில்தான் அரசு வேலை வாய்ப்புகள் அமைகின்றன. 
பெரும்பாலான அரசுத் துறைகளில், ஓய்வு பெறும் ஊழியர்களின் பணி இடங்கள் நிரப்பப் படாமலேயே நிர்வாகம் ஓட்டப்படுகின்றது. தேவைக்கு அதிகமான ஊழியர்கள் மற்றும் பணிகள் கணினி மயமாக்கப்படுதல் ஆகிய காரணிகள் இதற்கு காரணமாகும். 
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. மக்களவையில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, 2015-ஆம் ஆண்டில், வேலை வாய்ப்புக்காக பதிவு செய்த 4.48 கோடி பேர்களில், 2.53 லட்சம் பேர்களுக்குத்தான் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். 
இந்தப் புள்ளி விவரத்தின்படி, பதிவு செய்த 500 பேர்களில், 3 பேருக்குத்தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலைமையில் வேலை தேடும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அலுவலங்கள் மூலம் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 
சமீப காலங்களில், 12 லட்சம் புது முகங்கள் பணி வேட்டை சந்தையில் நுழைந்திருக்கின்றனர். ஆனால், 1.23 லட்சம் அளவில்தான் புதிய நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. பொருளாதாரத் தளர்வுகளால், தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் தொய்வுகளையும் இதற்கு ஒரு காரணமாகச் சொல்லலாம். 
பொதுத் துறை வங்கிகளில், வாராக் கடன்களால் ஏற்பட்டிருக்கும் வியாபார முடக்கத்தால், அத்துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. தனியார் வங்கிகளில், குமாஸ்தா பணிக்குக் கூட, எம்.பி.ஏ.க்கள் மற்றும் என்ஜினியரிங் பட்டப் படிப்பு படித்தவர்கள் அமர்த்தப்படுகின்றனர். இது போன்ற கடும் போட்டிகளால், சாதாரண பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மை நிலவரம்.
படிப்பு சார்ந்த பணி அமையாத பல என்ஜினியரிங் பட்டதாரிகள், பொது மற்றும் தனியார் வங்கிகளில் காசோலை காப்பாளர்களாக (cheque passing staff)  பணி புரிவது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும். இது போன்ற பணியாளர்களின் சுய விவரங்களை ஆராய்ந்து, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கடமையாகும். 
படித்தவர்கள் வேலை வாய்ப்பின்றி இருந்தால், அதுவே அவர்கள் விரக்தி நிலைமைக்குத் தள்ளப்படுவதற்கு காரணமாக அமைந்து விடும். அம்மாதிரி விரக்தி நிலைதான், அவர்களில் சிலரை தீவிரவாத இயக்கங்களுக்கு பலி கொடுக்கிறது.
எனவே, தனி நலன் மற்றும் நாட்டு நலனுக்காக, படித்து வேலை தேடுபவர்களுக்காக புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும். ஆனால், அந்தப் பொறுப்பு முழுவதும் அரசு சார்ந்ததல்ல என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இதற்காக, வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்கள், அதற்காக நீண்ட காலம் காத்திருக்காமல், சுய தொழில் வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டும். நம்மில் ஒவ்வொருவருக்குள்ளும் சில தனித் திறமைகள் ஒளிந்துள்ளன. 
அம்மாதிரி திறமைகளை உணர்ந்து, அதற்கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதன் நெளிவு சுளிவுகளை நன்கு கற்றறிந்து, சுய தொழிலை மேற்கொண்டால், வெற்றி நிச்சயம். 
சுய தொழில் செய்வதற்குத் தொழிலதிபர் பரம்பரையைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சுய திறமை அளவீடு, சுய கெளரவம் பாராமை, திட்டமிடுதல், பேச்சுத் திறமை மற்றும் பொறுமை ஆகிய குண நலன்கள்தான் சுய தொழில் துவங்குவதற்கான மூலதனங்களாகும்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் முத்ரா கடன்கள் மூலம், வியாபாரத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தை உறுதி படுத்திக் கொள்ளலாம். 10 லட்சம் ரூபாய் வரை, பிணையம் கோராமல், இம்மாதிரி கடன்கள், தகுதியான தொழில் முனைவோருக்கு, எளிய வழிமுறைகள் மூலம் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.
தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்கள் வாங்குவதற்கு working capital finance மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு term loan ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிக்கு மாறுபட்டு கடன் வாங்கினால், வட்டி செலவு எதிர்பார்த்ததை விட அதிகமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சுய கெளரவம் என்பது ஏன் அழுத்திச் சொல்லப்படுகிறது என்பதற்குக் காரணங்கள் உள்ளன. 'நான் இந்தத் தொழிலைச் செய்தால் மற்றவர்கள் ஏளனம் செய்வார்கள்' என்ற எண்ணம் அறவே நீக்கப்பட்டால்தான் சுய தொழிலில் வெற்றி காண முடியும். 
நான் சமீபத்தில் சந்தித்த சுய தொழில் முனைவோர்களை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். 
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட தொய்வில் வேலை இழந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் சற்றும் மனம் தளராமல், சந்தை ஆராய்ச்சிக்குப் பிறகு, சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயார் செய்து வழங்கும் துறையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, இப்பொழுது புறநகர்ப் பகுதியிலிருந்து, நகரின் முக்கியப் பகுதிகளுக்கு உணவு சப்ளை செய்து, தன் நிறுவனத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். 
'என் நிறுவனத்தில், முப்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது பெரும் மன நிறைவை அளிக்கிறது' என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறார்.
என்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ. பட்டப் படிப்பு படித்த மற்றொரு இளைஞர், தகுந்த வேலை கிடைக்காததால் துவண்டு விடவில்லை. பொழுது போக்கிற்காக கற்ற புகைப்படத் துறையின் நுணுக்கங்களைப் பலரிடம் உதவியாளராகப் பணி புரிந்ததன் மூலம் கற்றறிந்தார். தற்போழுது, அவர் சென்னையில் பிரபலமான ஒரு புகைப்படக் கலைஞராக மலர்ந்து விட்டார். 'எனக்கு நானே முதலாளி' என்று குதூகலிக்கும் அவர் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே, வேலை வாய்ப்பு என்பது அரசாங்கத்தினால் மற்றும் உருவாக்கப்படுவதில்லை. அதை நாமும் உருவாக்கலாம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால், குறை சொல்லும் கூட்டம் குறைந்து, நாட்டில் தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.
நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற சுய தொழில் வாய்ப்புகள் மலிந்து கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தினால், நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com