பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புது யுக அரசியல்

கட்சி அரசியல் என்பதில் மக்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்பது பரவலான கருத்து.

Updated On :25 பிப்ரவரி 2018, 8:26 pm

கட்சி அரசியல் என்பதில் மக்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்பது பரவலான கருத்து. அந்தக் கருத்து தொடர்ந்து வலிவு பெற்று வருகின்றது. மக்கள் புதுமையை நாடுகின்றார்கள். கட்சி அரசியலைவிட்டால் வேறு அரசியலே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சியின் ஆட்சியைக் குறைகூறி அரசுக்கட்டிலில் அரியணையேறும் இன்னொரு கட்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்பிருந்த கட்சி பரவாயில்லை என்று எண்ணும் அளவுக்குத்தான் செயல்படுகின்றது. அரசியல் கட்சிகள் தங்களின் இயலாமையை மூடி மறைக்க மக்களை தங்களின் தவறான அணுகுமுறைகளுக்கு உடந்தையாக்கி, பொதுமக்களை குறைகூறும் சூழலுக்கு கொண்டுவந்துவிட்டன.
உலகில் எல்லாத் துறைகளும் மிகவேகமாக வளர்ந்து வருகின்றன. அந்த வளர்ச்சியின் பயன்களை உள்வாங்கி எல்லாத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கான வழிவகை செய்வது என்பது அரசியல், ஆளுகை மற்றும் நிர்வாகம். ஆனால் இந்த மூன்றும்தான் இன்று தேக்க நிலையில் இருக்கின்றன. இந்த தேக்க நிலைதான் புதுயுக அரசியலை உருவாக்குகின்றது. புதுயுக அரசியல் என்றால் என்ன என்பதை சற்று நாம் நிதானமாக புரிந்துகொள்ள வேண்டும். 
இதுவரை அரசியலில் திட்டவட்டமாக எதுவெல்லாம் நடக்காது என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்தோமோ அதெல்லாம் நிச்சயமாக நடக்கும். ஏனென்றால் மக்கள் ஒரு மனநிலைக்கு வந்துவிட்டனர். இன்றைக்கு உள்ள அரசியல் கட்சிகளிடம் புதுமைகள் கிடையாது, ஆற்றல் கிடையாது, மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கிடையாது என்று மக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். மாற்றுத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள், அந்த மாற்றத்தை எது தருமோ அங்கு செல்ல தயாராகிவிட்டார்கள் என்பதை நம் அரசியல் கட்சிகள் இன்னும் உணரவில்லை. 
கேரளத்தில் கிராமப் பஞ்சாயத்திலிருந்து மாவட்டப் பஞ்சாயத்துவரை கட்சி அடிப்படையிலான போட்டிகள்தான் நடைபெறுகிறது. எப்படி கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி என இரு கூட்டணிகள் ஆட்சி மாறி மாறி நடக்கின்றதோ, அதேபோல் பஞ்சாயத்துகளிலும் ஒரு கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
கிழக்கம்பலம் கிராமப் பஞ்சாயத்து, அரசியல் கட்சிகளை வெளியேற்றிவிட்டது. இந்த இரண்டு கூட்டணிகளையும் தோற்கடித்துவிட்டு சுயேச்சைகள் பஞ்சாயத்தைக் கைப்பற்றி பணியாற்றி வருகின்றனர். இந்தச் சுயேச்சைகளும் அரசியல் கட்சிகளிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பார்க்கும்போது, மக்கள் ஏன் அரசியல் கட்சிகளை நிராகரித்துள்ளனர் என்று கேட்கத் தோன்றியது.
இவர்கள் அனைவரும் சுயேச்சையாக நின்றபோதும், அவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டணியாக்கி வைத்திருப்பது ஒரு பெரிய தொழில் நிறுவனம் உருவாக்கிய அறக்கட்டளை என்பது தெரிய வந்தது. அந்த அறக்கட்டளை என்பதற்குப் பெயரே 20-20 என்பதுதான். இந்த 20-20 என்ற அறக்கட்டளை அந்தக் கம்பெனியின் Corporate Social Responsibility (CSR) பணத்தை மக்கள் நல்வாழ்வுக்கான செலவழிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இந்தியாவில் இதுபோல்தான் எல்லா தொழில் நிறுவனங்களும் அறக்கட்டளை ஏற்படுத்தி CSR நிதியைப் பயன்படுத்தி வருகின்றனர். 
கிழக்கம்பலத்தில் இயங்கிவரும் 20-20 அறக்கட்டளை, அதே கிராமப் பஞ்சாயத்தில் செயல்படும் "கிட்டெக்ஸ்' என்ற சிறார்களுக்கு ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அந்தக் கம்பெனியின் நிறுவனர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் மாபெரும் தொழில் நிறுவனத்தை அந்த ஊரில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அவர் தான் பிறந்த ஊரை மாற்ற வேண்டும், அந்தக் கிராமத்தை முன்னுதாரண கிராமமாக மாற்ற வேண்டும், அதற்கு அவர் தொழில் நிறுவனத்திலிருந்து பயன்படுத்தும் CSR நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த 20-20 அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார்.
கேரளத்தில் தொழிற்சாலை நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருந்தபோதிலும் அந்த தொழிலதிபர் தொழிற்சாலையை உலகத் தரத்தில் எல்லா விதிகளையும் கடைப்பிடித்து நடத்தி வருகிறார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இவர் தயார் செய்யும் சிறார்களுக்கான ஆயத்த உடைகள் அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பாவிற்கும் செல்கிறது. அந்த நாடுகளில் இந்தக் கம்பெனி தயாரிக்கும் ஆடைகளை வாங்கி விற்பவர்கள் தொடர்ந்து இந்தத் தொழிற்சாலைக்கு வந்து முறையாக விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, தரமான பொருள்களை உற்பத்தி செய்கிறார்களா என்பதைக் கவனிக்க இங்கு வந்து ஆய்வு செய்கிறார்கள் என்பதும் ஒரு காரணம்.
இவ்வளவு வெற்றிகரமாக தொழில் நடத்துபவர் ஏன் இந்தச் சமூகப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பினை, பஞ்சாயத்து ஆளுகைக்கான தேர்தலில் ஈடுபட வைத்து, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார் என்று கேள்வி கேட்கத் தோன்றியது. இதற்கு ஒட்டுமொத்தமாக பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தரும் பதில், நம் கட்சிகள் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதில் பிரித்து வைத்துக் கொள்கின்றன, பக்குவப்படுத்துவதற்குப்பதில் ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள தயார் செய்கின்றன, மேம்படுத்துவதற்கு பதில் சிறுமைப்படுத்துகின்றன. 
இவற்றை எல்லாம்விட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம், அமைதி என்பதைவிட, கட்சிகளின் வளர்ச்சிதான் பிரதானமாக்கப்படுகின்றன. அரசியல் என்பதே கட்சி வளர்ச்சிக்குத்தான் என்பதான சூழல்தான் எங்களை கட்சிகளிலிருந்து வெகுதூரத்திற்கு அழைத்துவந்து இந்த 20-20 அறக்கட்டளையுடன் இணைத்து மக்களுக்குச் சேவை செய்ய வைத்துள்ளது என்று கூறுகின்றனர். 
பஞ்சாயத்தின் மூலம் இந்த அறக்கட்டளை செய்கின்ற பணிகள் பிரமிக்க வைக்கின்றன. வீடுகள் இல்லா ஏழைகளுக்கு 780 சதுர அடியில் தனிவீடுகள் 11 லட்சத்திலிருந்து 13 லட்சம்வரை செலவு செய்து கட்டித்தருகின்றனர். அரசாங்கம் தரும் பணத்தையும் வாங்கி அதற்குமேல் உள்ள பணத்தை அறக்கட்டளை செலவு செய்கிறது.
விவசாய நிலங்கள், விவசாயம் செய்ய இயலாமல் தரிசாக போடப்பட்ட நிலங்களைப் பயன்படுத்தி, விவசாயம் செய்ய இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, விவசாயத்தை உயிர்ப்பிக்கச் செய்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்களின் அன்றாட அத்தியாவசியமான பொருள்களுக்கு ஒரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து மிகக்குறைந்த விலையில் குடிமைப் பொருள்களை தருவதும் இந்த 20-20 அறக்கட்டளைதான். 
அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்களின் மருத்துவச் செலவுகளை ஏற்பது, ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மீன்வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு என பல்வேறு உதவிகளைச் செய்வது என, இந்த அறக்கட்டளை செயல்படுவது ஒரு வித்தியாசமான வளர்ச்சிப் பாதையாகவே தெரிகிறது. 
கிழக்கம்பலம் கிராமப் பஞ்சாயத்து இந்தியாவிலேயே மிகச்சிறந்த பஞ்சாயத்தாக ஆக்க வேண்டும் என்பதுதான் 20-20 அறக்கட்டளையின் குறிக்கோள். அறக்கட்டளை சார்பில் அந்தப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும்போது ஓர் உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாகத் தந்துள்ளனர். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாயத்தில் பணி செய்கின்றபோது, அந்தப் பணி மக்களுக்கு நிறைவு தரவில்லை என்றால் மூன்றில் இரு பங்கு வாக்காளர்கள் கையெழுத்திட்டு பதவி விலகச் சொன்னால் பதவி விலகிவிடுவோம் என்ற உறுதிமொழிதான். இதுதான் அவர்கள் மக்களுக்குக் கொடுத்த உறுதிமொழி. 
பஞ்சாயத்து உறுப்பினர்களின் செயல்பாடுளைத் தொடர்ந்து கண்காணிக்க ஒரு சிறிய அமைப்பை அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது. 
இவற்றைத் தாண்டி அறக்கட்டளையின் சொந்த நிதியில் வார்டுக்கு ஒரு நல அலுவலரை நியமித்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினருடன் செயல்பட வைத்துள்ளது. இவை அத்தனையும் நமக்குச் சொல்லும் செய்திகள் என்ன என்று பார்க்க வேண்டும்.
கட்சிகளின் அரசியல் மேல் மக்கள் ஆர்வத்தை இழந்துள்ளனர். ஆர்வம் மட்டுமல்ல நம்பிக்கையையும் இழந்து வருகின்றனர். கட்சி அரசியலால் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை அல்லது செய்ய முடியவில்லை என மக்கள் கருதுகின்றனர். சமூகம் மிகப்பெரிய மாறுதலுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கையில் நம் அரசியல் கட்சிகள் அந்த மாற்றங்களை உள்வாங்கி தங்களை சூழலுக்குப் புதுப்பிக்க அல்லது மாற்றிக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் கிழக்கம்பலம் பஞ்சாயத்து தெரிவிக்கும் செய்தி - மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; அதற்கான புது அரசியல் பாதையை தேடிடும் பணியில் இருக்கின்றனர் என்பதுதான்.
அந்த அரசியல் பாதையை, தொழில் நிறுவனங்கள் கொண்டுவந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள முனைகின்றார்கள் என்றால், நம் கட்சி அரசியலில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்று பொருள். இதை அரசியல் கட்சிகள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். வணிக நிறுவனங்கள் எல்லாம் இப்படி அரசியலுக்கு வந்தால் என்ன செய்வது என்று விமர்சனம் செய்வதற்குப் பதில், மக்கள் ஏன் அரசியல் கட்சிகளை நிராகரிக்கத் தயாரானார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
கேரள மக்கள் கட்சி அரசியலில் ஊறிப் போனவர்கள், சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்கள், அவர்கள் எப்படி கட்சிகளிலிருந்து வெளியேறினார்கள் என்பதற்குப் பதில் தேட வேண்டியது கட்சிகளின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.