

'உணர்வின் உண்ணும் அமுதத்தின்
சுவையாய் நின்றான்.'
சுவையாய் நின்றவன் ராமன் !
கம்பனின் அமர கவிதை மக்கள் திலகத்திற்கு பொருந்தும்.
மற்ற மாநிலங்களில் பிரபலமான நடிகர்கள் சாதிக்க முடியாததை எம்.ஜி.ஆர். எவ்வாறு சாதித்தார் என்ற கேள்விக்கு எளிதில் பதிலளிக்க முடியாது. அவரைப் பற்றியும் அவரது ஆளுமையின் பரிமாணங்களையும், அவர் மக்களை நேசித்த பாங்கினையும், மக்கள் அவர்மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பையும் உணர்ந்தால்தான் விளக்க முடியும்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டார், திட்டங்கள் வகுத்தார் என்பதை நாடறியும்.
கல்வி பயிலும் ஏழை குழந்தைகளுக்கு மதிய சத்துணவு திட்டம் இந்திய நாட்டிற்கே முன்னோடித் திட்டம். அந்த திட்டம் 35 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால் இப்போதுதான் மற்ற மாநிலங்களில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். உண்மையிலேயே தீர்கதரிசி எம்.ஜி.ஆர்.
கல்வியில் இன்னொரு புரட்சியை செய்தார் . அதுதான் தனியாருக்கு பொறியியல் மற்றும் மருத்துவ உயர் கல்வி மையங்கள் துவங்குவதற்கு அனுமதி அளித்தது. அந்த திட்டத்தால் உயர் கல்வி கட்டமைப்பு வலுப்பெற்றது.
தொண்ணூறுகளில் இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தியபோது தொழில்நுட்ப கல்விக்கும் பயிற்சிக்கும் தமிழகம் தயார் நிலையில் இருந்தது மட்டுமல்ல, ஏனைய மாநில இளைஞர்களுக்கும் உயர் கல்வி பயில அறிவுசார் மையமாக தமிழகம் தொடர்ந்து விளங்குகிறது. உயர் கல்வி சேர்க்கையில் 44% எட்டி இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தமிழகத்தில் 17,254 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராம நிர்வாகிகள் பரம்பரை பரம்பரையாக பதவிவகித்த முறையை பல எதிர்ப்புக்கள் இடையே மாற்றி அமைத்தார். தேர்வாணையம் மூலமாக வி.ஏ.ஓ.க்களை தேர்ந்தெடுக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் பரம்பரை ஜாதிகளின் ஆதிக்கம் முடிவிற்கு வந்தது. தாழ்த்தப்பட்டவர்க்கும் இதர ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு முறையில், தேர்வாணையம் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம நிர்வாகத்தில் வாய்ப்பு பெற வழிவகுத்தது. இது மிகப் பெரிய சமூகப்புரட்சி!
எம்.ஜி.ஆர். அவர்களின் தேர்தல் வாக்குறுதி சாராய ஒழிப்பு. அதை முதலில் அமல்படுத்தினார். சாராயம் ஒழிக்கப்பட்டது. சுற்றியிருக்கும் மாநிலங்கள் தாராளமாக மதுபானங்கள் விற்கும் நிலையில் ஒரு மதுவிலக்கு தீவாக தமிழகம் திகழ பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதை உணர்ந்து உயர் ரக மதுபானங்கள் மட்டும் விற்கலாம், அதுவும் உரிமம் பெற்றவர்க்கு என்ற மதுவிலக்கு தளர்வுக் கொள்கை நடைமுறைக்கு வந்தது .
காவல்துறையை நவீனப்படுத்துவதிலும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அரசியல் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருந்தார். ஒருமுறை வருடாந்திர மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கலந்தாய்வு கூட்டத்தில் சம்பிரதாய கூட்டம் முடிந்த பிறகு வெளிப்படையாக மாவட்ட நிலவரம் பற்றி கருத்துக்களைக் கூற கேட்டுக்கொண்டார். இளம் மாவட்ட அதிகாரிகள் உற்சாகத்துடன் பல கருத்துகள், நடைமுறை சிக்கல்கள், அரசியல் குறுக்கீடுகள் பற்றி பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டனர். இம்மாதிரியான கலந்துரையாடல் அதுவரை நடைபெற்றதே இல்லை. அதன் பிறகு அரசியல் ஆதாயம், சுய லாபம் பார்க்கும் மனிதர்களின் நடவடிக்கை துண்டிக்கப்பட்டது. அநாவசியமாக காவல் நிலையத்திற்கோ, வருவாய் அலுவலகத்துக்கோ கட்சிக்காரர்கள் செல்லக்கூடாதென்ற எழுதப்படாத உத்தரவு நடைமுறைக்கு வந்தது.
கோலிவுட்டானாலும் பாலிவுட்டானாலும் காவல் துறை பற்றிய காட்சிகள் இல்லாமல் திரைப்படங்கள் முடிவதில்லை. குறைந்தபட்சம், கதாநாயகன் எதிரிகளை வென்ற பிறகு சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க போலீஸ் வரும் காட்சி உண்டு!
கதாநாயகன் காவல்துறை அதிகாரியாக வந்தால் காவல்துறையை சிறப்பாக சித்திரிப்பார்கள். முக்கால்வாசி படங்களில் சிறுமைப்படுத்துவதையே ஒரு கொள்கையாக கொண்டு போலீஸை சித்திரிப்பார்கள்.
ஆனால் காவல்துறைக்கு மதிப்பு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவரது படங்களில் காவலரை கண்ணியமான முறையில் காண்பிப்பார்கள். அவரது ரகசிய போலீஸ் 115, கடமை, மறக்க முடியாத படங்கள். அதே மதிப்பும், காவலர் பணிக்கு மரியாதையும் முதலமைச்சர் ஆன பிறகும் அளித்தார்.
குடமுருட்டி - திருச்சி தஞ்சாவூர் பாதையில் உள்ள சிறு கிராமம். வழியில் ஒரு பாலம். 1986-ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் காந்தி தஞ்சாவூர் வருகைக்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த தருணம். அந்த காலகட்டத்தில் நக்சலைட் பயங்கரவாதிகள் பிரச்னை தமிழகத்தில் இருந்தது. சீக்கிய தீவிரவாதிகள், இலங்கை தமிழர்கள் பிரச்னைகள் என்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. பிரதமர் வருகைக்கு சில நாட்களுக்கு முன் குடமுருட்டி பாலத்தின் கீழ் அதிக வீரியம் இல்லாத குண்டு வெடித்தது. சேதம் ஒன்றுமில்லை, ஆனால் பிரதமர் வருகைக்கு அடையாள எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழ் விடுதலைப் போராளிகளின் நாச வேலை என்பது புலனாயிற்று. மத்திய நுண்ணறிவு பிரிவுகள் பிரதமர் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பின. அப்போது தமிழக முதலவர் எம்.ஜி.ஆர். தமிழக காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு அளிக்கும் என்று நம்பிக்கையோடு உறுதியளித்தார். பிரதமரும் வந்தார். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. தமிழக காவல்துறை தலை நிமிர்ந்தது. இத்தகைய முக்கியமான நேர்வுகளில் அரசை வழிநடத்தும் தலைவர்கள் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்தால் துறையின் செயல்பாடு பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை இந்த ஒரு நிகழ்வு பறைசாற்றும்.
'ஒரு போலீஸ் அதிகாரி என்றாலும் அல்லது சாதாரண போலீஸ்காரர் என்று வைத்துக்கொண்டாலும் லஞ்சம் வாங்குவதை என்றுமே அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் பணத்தை விரும்பினால் இப்போது எப்படியெல்லாமோ இருந்திருப்பார்கள். அத்தகைய நேர்மையானவர்கள் லட்சியவாதிகள். அந்த லட்சியத்திறகாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.'
தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய விவாதத்தில் அவர் நேர்மையான காவல்துறையினரை பற்றி மேற்கண்டவாறு கூறியது அவர் காவல்துறையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை காட்டுகிறது.
அவர் நடிகராக இருந்த சமயத்தில் நேர்மையான செங்கல்பட்டு காவல்நிலைய காவலரை சந்தித்தபோது, அவரது நேர்மையை பாராட்டி பரிசளித்தபோது அதை வாங்க மறுத்த அந்த காவலரின் உயர் பண்பை மனதில் கொண்டுதான் லட்சியவாதியாக பல காவலர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று சட்ட சபையில் பெருமிதத்தோடு கூறினார்.
தமிழகத்தில் 80-களில் நக்சலைட் பயங்கரவாதம் முக்கியமாக தர்மபுரி, வேலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவல்துறைக்கு சவாலாக உருவெடுத்தது. அண்டை மாநிலங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறின. ஆனால் தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை , அதே சமயம் தீவிரவாதத்தின் காரணிகளை ஆராய்ந்து பின் தங்கிய இடங்களுக்கு முழுமையான வளர்ச்சிப் பணி என்ற சீரிய ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அதற்கு எம்.ஜி.ஆர். அவர்களின் ஒப்பற்ற தலைமை பண்புதான் காரணம் என்பதை மறுக்கலாகாது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவுகளை பலப்படுத்தி கண்காணிப்பு முறை 'கொளன்ட்டர் இண்டலிஜென்ஸ்' என்ற இரகசிய தகவல் சேகரிப்பு நுணுக்கங்களை மத்திய நுண்ணறிவு பிரிவிற்கு இணையாக உயர்த்தி, மத்திய அதிகாரிகள் தமிழகத்தை முன்உதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு உணர்த்தும் வகையில் தமிழக காவல்துறையை பெருமைப்பட செய்தவர் எம்.ஜி.ஆர்.
காவலர் நலனுக்காக தனியே வீட்டு வசதி வாரியத்தை ஏற்படுத்தி அவர்கள் சொந்த இல்லங்கள் கட்டி வாழ்வதற்கு உதவினார். போக்குவரத்து காவலர்கள் கொட்டும் மழையிலும் பணிசெய்ய வேண்டிய கட்டாயம். அவர்களுக்கு ரெயின் கோட் வழங்க ஆணையிட்டார். அதுமட்டுமல்ல, சிறப்பு விருந்து நட்சத்திர விடுதிகளில் அரசு தரப்பில் ஏற்பாடு செய்கையில் அரசு வாகன ஓட்டுநர்கள், காவல் பணியில் உள்ளவர் எல்லோருக்கும் அதே உணவு அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு விதிகள் இடம் கொடுக்குமா என்று அதிகாரிகள் யோசிக்கையில், அதிக செலவை தானே ஏற்றுக்கொள்வதாக கூறினார். எல்லோருக்கும் சமபந்தி உணவு என்பது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. இவ்வாறு சிறு விஷயங்களிலும் பணியாளர் நலம், மக்கள் நலம் பேணுவதில் தவறியதில்லை மக்கள் திலகம்.
வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களை சரியாக பாதுகாக்க காவல்நிலையங்களில் இடமில்லை என்ற புகார் கவனத்திற்கு வந்தபோது முதலமைச்சரே நேராக மீனம்பாக்கம் தாண்டியுள்ள குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தை ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான். அங்கு நேரே காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பாதுகாப்பு அணியினருக்கும் உதவியாளர்களுக்கும் வெகுமதி அளிப்பதில் அளவு பார்க்காதவர். இதனால்தான் முதல்வர் வாகன அணிவகுப்பு செல்கையில் காவலர்கள் முழு உத்வேகத்துடன் நன்றியோடும் செயல்படுவார்கள். மக்கள் காக்கும் பணியிலும் முனைப்போடு செயல்பட்டார்கள்.
'காவல்துறையைப் பொருத்தவரையில் எனது நீண்ட நாள் ஆசை, எப்படியாவது அதைப் பூர்த்தி செய்து, அந்த இலாகாவை அதிலுள்ள பிரிவுகளை ஒழுங்குபடுத்தி அதனால் இந்த நாட்டுக்கும், தொழிலாளர்களுக்கும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும், எதிர்கட்சிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்து செயல்படுகின்ற தந்தையைப்போன்ற கண்டிப்பையும், தாயைப் போன்ற அன்பையும் காட்டுகின்ற முறையில் அவர்கள் இருக்க வேண்டும். அதற்கேற்ற முறையில் அவர்களை செயல்படுத்த வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கிறேன்.'
என்ன உயர்ந்த எண்ணம்! எவ்வளவு எளிமையாக உணர்ச்சிபூர்வமாக காவல்துறை செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை 1978-79 காவல் மானிய கோரிக்கையில் பதில் அளிக்கையில் தெளிவு படுத்தியுள்ளார்!
கடுமையான நடவடிக்கை எடுக்கையில் காவல்துறை கையை வேகமாக ஓங்கினாலும் விழும் பொழுது மெதுவாகப்பட வேண்டும், அதே சமயத்தில் அரவணைத்து வழிநடத்த வேண்டும். இதைத்தான் வள்ளுவர் 'கடிதோச்சி மெல்ல எறிக' என்றார்போலும்.
புத்தாயிர காவல் பணிக்கு தமிழக காவல்துறைக்கு அஸ்திவாரம் அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
காவலரின் உண்மையான பாதுகாவலர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்! நூறாண்டு என்ன -காலம் காலமாக நெஞ்சில் நிறைந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

