வர்த்தக எழுச்சியை வரவேற்போம்!

கம்யூனிச நாடாக இருந்த மக்கள் சீனம், இன்று முதலாளித்துவ சீனமாகி விட்டதை உணர்த்துவது போல் உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வல்லமைக்கு சீனா பதிலடி கொடுத்து

கம்யூனிச நாடாக இருந்த மக்கள் சீனம், இன்று முதலாளித்துவ சீனமாகி விட்டதை உணர்த்துவது போல் உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வல்லமைக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது. உலக வர்த்தகப் போர் மூண்டு விட்டது. இதில்தான் எத்தனை முரண்பாடுகள்? முதலாளித்துவம் பேசியவர்கள் சோஷலிசம் பேசுகிறார்கள்! சோஷலிசம் பேசியவர்கள் முதலாளித்துவம் பேசுகிறார்கள்!
இந்த உலக வர்த்தகப் போரில், தன் எல்லை கடந்து முதலில் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்காதான். எதிர் முனையில், சீனாவின் தலைமையில் ஐரோப்பிய யூனியன், கனடா அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்கின்றன. உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிராக, இறக்குமதி வரிகளை விதிப்பதில் நீயா நானா என்று அமெரிக்காவும் சீனாவும் போட்டியிடுகின்றன. டொனால்டு டிரம்ப் வணிக சுதந்திரத்திற்கு எதிராக வணிகக் காப்பீட்டுக்குக் கொடிபிடிக்கிறார். 
உலகமயமாதலுக்கு எதிராக அன்று சோஷலிசம் பேசிய சீனாவும் இந்தியாவும், இன்று வணிக சுதந்திரத்தையும் உலகமயமாதலையும் ஆதரிக்கின்றன. டொனால்டு டிரம்பின் அடாத செயல் உலக அரங்கில் பழையபடி தன் பொருளாதார ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்வது வெளிப்படை. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு முட்டுக்கொடுத்து வளர்ந்த அமெரிக்காவின் இன்றைய தேசியப் போக்கு வளரும் நாடுகளின் வளர்ச்சிக்குப் போடும் முட்டுக்கட்டையாகவே தென்படுகிறது. 
மற்றொரு கோணத்தில் பார்த்தால் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை மாற்றம் சீனாவைச் சீண்டுவதாகவே தோன்றுகிறது. சீனத்து இறக்குமதிகளை அமெரிக்கா நிராகரிப்பது போல் அமெரிக்க இறக்குமதிப் பொருள்களை சீனா நிராகரித்து வருகிறது. 
இன்று மக்கள் சீனத்தின் தலைவர் ஷி ஜின்பிங் யூரேசிய வர்த்தகத்தின் சூப்பர் பவராகிவிட்டார். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு மற்றும் செயற்கை புத்திக் கூர்மை திட்டம் அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. 
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் என்பது வரலாறு அடிப்படையில் சீனாவின் உலக வர்த்தக வழிகளான தரைவழிச்சாலை மற்றும் கடல் வணிகப் போக்குவரத்தைப் புதுப்பித்து அந்நிய நாடுகளில் பழைய வர்த்தக உறவைப் புதுப்பித்தல். இது 2050 வரை நீடிக்கும் ஒரு தொலைநோக்குத் திட்டம். இதற்கு ஐந்து டிரில்லியன் டாலர் (364 லட்சம் கோடி) அளவில் நிதி முதலீடு திரட்டப்பட்டு வருகிறது.
எல்லா ஆசிய நாடுகளையும், முன்பு சோவியத்தின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை அனைத்து ஆசிய நாடுகளும் வரவேற்றுள்ளன. ஆசிய ஒருங்கிணைப்புடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்து தொலைநோக்காக பெல்ட் ரோடு திட்டத்தை சீனா வர்ணிக்கின்றது. உலகவங்கி, அனைத்துலக நிதியம் போன்ற நிதியமைப்புகளைப் போல் அடித்தளக் கட்டமைப்பை சீனா நிறுவும் திட்டமே பெல்ட் ரோடு.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று முதலாளித்துவம். மற்றொன்று கம்யூனிசம். கம்யூனிசத்தை ஆயுதமாகக் கொண்டு இயங்கிய ரஷியா ஹிட்லரின் பிடியிலிருந்து ஹங்கேரி, யூகோஸ்லேவியா, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளைத் தன் பிடியில் வைத்துக்கொண்டு சோவியத் யூனியன் என்று பிரகடனப்படுத்தியது. கம்யூனிஸ்ட் சீனா அன்று சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமான நேரு இந்தியாவை ஒரு சோஷலிச நாடாக அறிவித்தார். 
ஐந்தாண்டுத் திட்டங்களை ரஷியாவின் மாதிரியில் திட்டமிட்டு தொழில் வளர்ச்சிக்கு நேரு அடித்தளமிட்டார். உலக அளவில் முதலாளித்துவத்தில் கைதேர்ந்த அமெரிக்கா ஒரு சூப்பர் பவர் என்றால் அதைக் கட்டுப்படுத்த கம்யூனிசத்தில் கைதேர்ந்த ரஷியா மற்றொரு சூப்பர் பவராகத் திகழ்ந்தது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் சிதறியது. பொது உடமை, தேசியங்கள் எல்லாம் தேங்கிவிட்டன. சோவியத் யூனியன் சிதறியது. ரஷியா சுருங்கியது. தனியார் சொத்துரிமை துளிர்விட்டது. பொதுத்துறை லஞ்ச லாவண்யங்களால் நஷ்டமானது. உலக வர்த்தகம் சுருங்கிப் போனது. 
உள்ளுர்த் தொழில் பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாடும் இறக்குமதி வரிவிதிப்பை வரம்பு மீறி உயர்த்தியதால் உலக வர்த்தகம் சீர்குலைந்தது. எல்லா நாடுகளும் உற்பத்தி செய்து உபரியாக உள்ளதை மற்ற நாடுகளுக்கு அனுப்பத் தயாராயிருந்த சூழ்நிலையில் உலக வர்த்தக அமைப்பு உருவானது. இதற்கு 1983-லிருந்தே காட் அமைப்பின் தலைவராயிருந்த ஆர்தர் டங்கல் என்ற பொருளாதார மேதை பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.
இறுதிச்சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அனைத்துலக நாடுகளும் இறக்குமதி வரிகளை ரத்து செய்தன. உலக வர்த்தக அமைப்பின் உயிர்நாடியாக இருந்த டங்கல் விளைவுதான் உலகமயமாக்கல் என்ற புதிய நிலைப்பாடு.
எல்லா அரசியல் இசங்களும் இதில் கரைந்துவிட்டன. உலக வர்த்தக அமைப்பு உருவானபோதுதான் சீனாவிலும் இந்தியாவிலும் தொழில்வளர்ச்சி சிறந்து விளங்கின. ஆங்கில அகராதியில் ஷாங்காயிடு, பெங்களூரு போன்ற சொற்கள் இடம் பெற்றன. கார்ப்பரேட் எனும் பெருநிறுவனங்கள் இடம் பெயர்ந்தன. உலகமயமாக்கலின் விளைவாக, தேசிய எல்லை கடந்து யாரும் எந்த நாட்டிலும் பணிபுரியலாம் என்று ஆனது. தொழிலும் தொடங்கலாம். எல்லா நாடுகளிலும் அந்நிய முதலீடுகள் விரும்பப்பட்டன. 
ஆனாலும் முதலாளித்துவமா? கம்யூனிசமா? என்ற வேற்றுமை மறந்து வடக்கா? தெற்கா? மேற்கா? கிழக்கா? என்ற திசை வேற்றுமை துளிர்விட்டது. முன்பு மேற்கு, கிழக்கு என்று இருந்த பேச்சு, பின்னர் வடக்கு, தெற்கு என்ற பேச்சாக மாறியது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் வடக்கு நாடுகள் என்றும் பின் தங்கிய நாடுகள் தெற்கு நாடுகள் என்றும் பேசப்பட்டன. வடக்கு நாடுகள் தெற்கு நாடுகளில் தங்கள் பொருள்களுக்கான சந்தைகளை உருவாக்கி, தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவார்ந்த சொத்துரிமைச் சட்டம் மூலம் பாதுகாப்பு தேடின. இந்த அறிவார்ந்த சொத்துரிமைச் சட்டம், வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சிக்கும் விவசாயத்திற்கும் உதவக் கூடியதாக இல்லை. 
முழு மானிய உதவியில் இயங்கும் வடக்கு நாடுகளின் விவசாயத்தோடு அரைகுறைமானிய உதவியில் இயங்கும் வளரும் நாடுகளின் விவசாயம் போட்டி போட முடியவில்லை. எனினும் 1999-இல் சியாட்டில் நகரில் உலக வர்த்தக அமைப்பின் கீழ் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் வளர்ச்சியுற்ற வடக்கு நாடுகளின் பிரதிநிதிகள் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், மென்பொருள் பணியாளர்களின் புதிய குடியேற்றம் தொடர்பாக எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். எனினும், பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. 
வடக்கு நாடுகளில் அடுத்த கட்டமாக மாபெரும் நிதி நெருக்கடி உருவானது. கிரீஸ் நாடு கடனில் முழுகியது. பல வங்கிகள் திவாலாயின. அமெரிக்க டாலர் மதிப்பிழந்தது. இன்று ரூபாய்க்கு வந்த சனி அன்று டாலருக்குப் பிடித்தது. சனி விலகினாலும், நெருக்கடி தீரவில்லை. எனினும் வடக்கு நாடுகளில் நிதி நெருக்கடி காரணமாக வங்கிகள் திவாலானதால் ஏராளமாக வேலை இழப்புகள் தோன்றின. சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரியஅளவில் பிரச்னை ஏற்படாததால் எல்லாம் இங்கு ஒழுங்காக இருப்பதாக அறிவித்தன.
ஆனால், சியாட்டில் இடதுசாரி எதிர்ப்பை டொனால்டு ட்ரம்ப் இப்போது மீண்டும் கையிலெடுத்துக் கொண்டு அந்நிய வர்த்தகக் கட்டுப்பாட்டுக்குக் குரல் எழுப்பும் அதே நேரம், சீனாவும் இந்தியாவும் உலக வர்த்தக அமைப்பின் சுதந்திர வணிகத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர். காலம் மாறுகிறது. காட்சிகள் மாறுகின்றன.
சோஷலிசம் பேசிய நாடுகள் சுதந்திர வணிகத்திற்கு ஓட்டுப் போடுகின்றன. முதலாளித்துவம் பேசிய அமெரிக்கா, இன்று கம்யூனிச தேசியம் பேசி அந்நிய வர்த்தகத்திற்குக் கட்டுப்பாடு வேண்டுமென்கிறது.
இன்றைய சீனத்தில், அமெரிக்க, ஐரோப்பியர்கள் மார்தட்டும் செயற்கை புத்திக் கூர்மை விஷயத்தில், ஐஃபோன் டிராக்டர் ராணுவத் தளவாடங்கள், நியூக்ளியர் மிசைல், ராக்கெட் என்று பலவற்றையும் மலிவு விலையில் வழங்கி சீனர்கள் அமெரிக்காவை நஷ்டப்படுத்துகிறார்கள். சீனத்துப் பொருள்கள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டு உண்டு என்றாலும் அமெரிக்காவை எதிர்க்கும் தைரியம் வந்துள்ளது. சீனாவின் இந்தப் புதிய சக்தி இந்தியாவை சற்று யோசிக்க வைத்து விட்டது. 
இன்று கிழக்காசிய நாடுகள் அனைத்துமே சீன அணியில் உள்ளன. சீன வர்த்தகம் விரிவடைந்து இன்று அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கும் உண்மை நிலையை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். சீன நட்புறவும் இந்தியாவுக்குத் தேவை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், உலக வர்த்தகத்தால் இந்திய விவசாயத்தின் எதிர்காலம் எப்படியாகும் என்ற கருத்தும் கவனம் பெறவேண்டும்.
சீனாவின் புதிய எழுச்சியும் அதற்கு அணைபோடும் அமெரிக்க அணுகுமுறையும் விவசாயிகளையும், வறுமையில் வாழும் மக்களையும் உயர்த்துமா அல்லது கீழே தள்ளி அழுத்துமா என்பதை கணிக்க முடியவில்லை.
உலக வர்த்தக ஒப்பந்தங்கள், வளரும் நாடுகளின் விவசாய மானியங்கள், உணவு மானியங்கள், உணவுக் கொள்முதல் மற்றும் விநியோகத் திட்டங்கள் ஆகியவற்றில் மூக்கை நுழைக்காதவரை அமெரிக்காவுக்கு அணைபோடும் சீனத்தின் வர்த்தக எழுச்சியை நாம் வரவேற்போம்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com