புதுயுகத்தின் அருட்சுடர்

ஒருமையுடன் இறைவன் திருமலரடி நினைந்து உத்தமர்களோடு உறவு பூண்டு, பெருமைநிறை பணிகள் பல புரிந்து துன்மார்க்கம் போக்கிச் சன்மார்க்கம் தோற்றுவித்த நற்றவ நாயகர் வள்ளலார். இவர் இந்த யுகத்தில் அவதரித்தார்;
Updated on
2 min read

ஒருமையுடன் இறைவன் திருமலரடி நினைந்து உத்தமர்களோடு உறவு பூண்டு, பெருமைநிறை பணிகள் பல புரிந்து துன்மார்க்கம் போக்கிச் சன்மார்க்கம் தோற்றுவித்த நற்றவ நாயகர் வள்ளலார். இவர் இந்த யுகத்தில் அவதரித்தார்; இனிவரும் புதுயுகத்தின் அருட்கதவைத் திறந்துவைத்தார்.
ஐந்து மாதப் பருவத்தில் "சிதம்பர' தரிசனம் கண்டு, "இராமலிங்கம்' எனும் பெயரிடப்பெற்றவர், தன்னை "திருச்சிற்றம்பலமுடையார் செல்வப்பிள்ளை' என்று உணர்ந்து, ஒன்பது வயதில், தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளைத் தமிழ்பாடித் துதிக்கிறார்.

சாதிசமயம் எலாம் தவிர்ந்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப்பொருளே
ஆதிநடுக்கடை காட்டாது அண்ட பகிரண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற்று அனைத்தும் நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச் செய் உறவே
சோதிமயமாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத்தரசேஎன் சொல்லும் அணிந்தருளே

என்று தன் வாக்கு அனைத்தும் அவன் தந்த அருள்வாக்கு என்பதைப் பதிவு 
செய்கிறார். 
பொதுவாழ்வுக்கு, மனு முறை கண்ட வாசகமும், தனி வாழ்வுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கமும், அகவெழுச்சிக்கு, ஆறு திருமுறைகளும் இன்றியமையாத அருள்நூல்கள் எனலாம்.
குறிப்பாக, மனு முறை கண்ட வாசகத்தில் மனுநீதிச்சோழன் தன் அமைச்சர்களோடு கலந்து ஆலோசிக்கும் பகுதி இருக்கிறதே, இன்றைக்கு சட்டக்கல்வி பயில்கிறவர்களுக்கும் அரசியல்துறைக்குள் புகும் அன்பர்களுக்கும் கட்டாயப்பாடம் ஆக்கவேண்டிய கருத்துக்கள் நிரம்பியவை.
நித்திய ஒழுக்கம் எனும்  படைப்பு மருத்துவக் கல்லூரியினருக்குரிய மகத்தான பாடம். "நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்' என்பது உடல்நோயை மட்டும் குறிப்பதன்று. 
உளநோயையும் கடந்து ஆன்மாவைப்பற்றிய பிணிகளையும் அகற்றி வாழ்வதைச் சுட்டுவது.
மரணத்தை எண்ணிக் கலங்குவார்க்கு மரணமற்ற வாழ்வைச் சித்திக்கச் செய்வது. இசைத்தமிழுக்கு அவர் அளித்த கீர்த்தனைகள் அனைத்தும் செவிநுகர் அருட்கனிகள் என்பதை இன்னும் உலகம் நன்கறியவில்லை. இனிவருங்காலங்களில், பள்ளி, கல்லூரி இசைப்போட்டிகளில், பாரதி, பாரதிதாசன் பாடல்களோடு, வள்ளலாரின் கீர்த்தனைகளையும் சேர்ப்பது பயனுள்ளதாகும்.
ஆவலுற்று, வள்ளலாரின் கவியனைத்தும் அச்சிலேற்றக் காதல் கொண்ட சீடர்களின் கருணையினால் தமிழுக்கு வாய்த்த அருட்கொடை, திருவருட்பாக்கள் எனும் அமுதனைய நறுங்கவிகள்.
அதனைப் பெறுவதற்காக ஒருவேளை மட்டும் உணவருந்தி பிறபொழுதுகளில் உண்ணாவிரதமிருந்த இறுக்கம் இரத்தின முதலியாரின் தியாகத்தை என்னென்பது?
""அன்புள்ள என் கண்மணி போன்ற தாம் இனி இதனடியில் எழுதுகின்ற வண்ணம் செய்யப் பிரார்த்திக்கிறேன்.
அதாவது "இந்தப் பாடல்கள் பங்கியில் அனுப்பி என்னிடம் சேர்கிற பரியந்தம் நான் ஒருவேளை போசனந்தான் செய்வேன்' என்று எழுதியதைப் பார்த்தபின்பு சாப்பிடுகிற சாதம் உடம்பில் பொருந்தவில்லை.
பட்டினி கிடந்தவனைப்போல இருக்கின்றேன். ஆதலால், என்னை நிம்மதியுள்ளவனாக்க எண்ணங்கொண்டு, ஒருவேளை போசனங் கொள்ளுகிற நிபந்தனை நீக்கி உடனே தபாலில் எனக்குத் தெரிவித்தாலல்லது நான் ஒருவேளை போசனம் உள்ளவனாகவே இருப்பேன்.
இது சத்தியம். என் மேல் ஆணை'' என்று  சீடருக்குத் திருமுகம் எழுதுகிற வள்ளலாரின் அருள் உள்ளம், இன்றைய ஆசிரியர்களுக்கெல்லாம் வாய்க்க வேண்டும். 
 அருளாளர் மரபில், பின்னால் வந்த மகாத்மா காந்தியும் மகாகவி பாரதியும் பேசுகிற அரசியல், ஆன்மிக நெறிகளுக்கெல்லாம் பலவிதங்களில் முன்னோடியாகிய வள்ளலார், முன்னே வந்த வள்ளுவருக்கு வாய்த்த நல் வாரிசாகவும் விளங்குகிறார்.
அதனால்தான், "பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்றுரைத்த வள்ளுவர் வாக்கை, விரித்துரைத்து,  
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரு
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த 
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ. 
 என்று உணர்ந்து உரைக்கிறார். 
இவ்வாறு, தன் வாழ்வைத் தவவாழ்வாக ஆக்கிக்கொண்ட அருட்பிரகாச வள்ளலார், தமக்கும் முன்னர்ப் பாடிய அருளாளர்களின் உன்னத நூல்களையெல்லாம் இறைவன் அருளால் ஓதாது உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு தன் காலத்துக்குரிய தகுநெறிகளையும் தன்வாழ்வின் அனுபவங்களையும் தரணிக்கு உணர்த்தவேண்டித் தமிழ்பாடி மகிழ்கிறார்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய'தோடல்லாமல் விரைந்தேகி உயிர்களின் வாட்டங்கள் ஓட்டுகிறார்.
பதிப்பாசிரியராகவும் இதழாசிரியராகவும் திகழ்ந்த இந்த ஞானாசிரியர், அகத்தையும் புறத்தையும் பிணித்த பல நோய்களையும் போக்குவிக்கும் சித்தமருத்துவராக, சீர்திருத்தம் செய்ய வந்த சித்தர் பெருமானாகப் பன்முகப் பரிமாணங்களோடு நம்மிடையே உலவிப் புதுயுகத்தின் அருட்சுடரை ஏற்றிவைத்த யுகபுருஷராக வள்ளலார் விளங்குகிறார்; புதுயுகம் சமைக்க நம்மையும் அழைக்கிறார்.
வடலூரில் அவர் ஏற்றிவைத்த அடுப்பின் நெருப்பு இன்னும் அணையாமல் எரிவது வயிற்றுப்பசியைப் போக்குதற்கு மட்டுமல்ல, ஆன்ம பசிக்கு அருளமுதளிப்பதற்கும்தான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com