மக்களாட்சியும் சமூகவியல் பாடங்களும்

மக்களாட்சி நடைபெறும் நாடுகளில், சமூகவியல், தத்துவம், வரலாறு, பொருளாதாரம் மற்றும் கலை போன்ற பாடங்கள் மிகவும் சிறப்பாகக்
Updated on
3 min read


மக்களாட்சி நடைபெறும் நாடுகளில், சமூகவியல், தத்துவம், வரலாறு, பொருளாதாரம் மற்றும் கலை போன்ற பாடங்கள் மிகவும் சிறப்பாகக் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அங்கு இந்தத் துறைகள் அனைத்தும் சிறப்பாக வளர்த்தெடுக்கப்படுகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல அரபு நாடுகளில் இந்தச் சமூக அறிவியல் பாடங்கள் பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. இவற்றில் பல நாடுகள் மிகவும் செல்வ வளமிக்க நாடுகள். 
எனவே, செல்வம் கொழிக்கும் பல நாடுகளில் இப்படிப்பட்ட பாடங்களை மாணவர்களுக்குப் போதிப்பதே இல்லை. இதிலிருந்து, சமூக அறிவியல் பாடங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாம் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். 
இன்று உலகமயமான பொருளாதாரச் சூழலில், பொருள் ஈட்டப் பயன்படும் படிப்புகளை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதுதான் அவசியம் என்ற நோக்கில் மானுடவியல், சமூகவியல், தத்துவம், வரலாறு போன்ற பாடங்கள் அனைத்தும் உபயோகமில்லாப் பாடங்கள் என அரசாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களைப் படிப்பதனால் மாணவர்களுக்கு என்ன பொருளாதாரப் பயன் என்று கேள்வி கேட்டு இந்தப் பாடங்கள் அனைத்தும் புறந்தள்ளப்படுகின்றன.
சந்தைக்குத் தேவையான மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல் போன்ற படிப்புக்கள் மட்டும்தான் இன்று பணம் சம்பாதிக்க உதவும் என அரசும் சந்தையும் சேர்ந்து சமூகத்தை சிக்க வைத்துள்ளன. இதில் ஒரு அடிப்படையான கேள்வி இருக்கின்றது. பணம் ஈட்டுவதுதான் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமா? அதற்கு உதவுவதுதான் கல்வியின் நோக்கமா? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட நாம் பொருளாதார வளர்ச்சி என்ற கோணத்தில் பார்க்காமல் மானுட மேம்பாட்டு வரலாறு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். 
மானுட வரலாறு பல லட்சம் ஆண்டுகள் பழமையானது. பொருளாதார வளர்ச்சி வரலாறு ஒரு சில நூற்றாண்டுகளைக் கொண்டது. இன்று நாம் பார்க்கும் அனைத்து வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் பொருளாதார வளர்ச்சி என மானுடம் கண்டுபிடித்து, திட்டமிட்டு செயல்பட ஆரம்பித்த பிறகு வந்தவை. இந்தப் பொருளாதாரச் செயல்பாடுகள் அனைத்தும் அறிவினால் வந்தவை. அறிவு, கல்வியால் வளர்க்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பம் அனைத்தும் கல்வியால் உருவாக்கப்பட்டவை.
இன்றைய உலக வளர்ச்சி வரலாற்றின் பின்னணியில் இருப்பது கல்வி. அதன் மூலம் வளர்வது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மானுடம் பெற்றது பொருளாதார வளர்ச்சி.
வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், கல்வித்துறையில் இந்தப் பாடங்களைக் கொண்டுவந்து கல்வியின் மூலம் பொதுமக்களின் சிந்தனைத் திறனை அதிகப்படுத்தி, சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டுச் சூழலை மக்களுக்குப் புரிய வைத்தன.
அதன் விளைவு, அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள் அரசாங்கத்தை தங்களுக்குச் செயல்படப் பணித்து ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி நடுத்தர மக்கள் வாழும் நாடுகளாக மாற்றிவிட்டனர். இந்த நாடுகளில் எல்லாம் மக்களாட்சி என்பது சமத்துவம், நேர்மை, நீதி, கருத்துக்கு மதிப்பளித்தல், மாற்றுக் கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம், சட்டத்தின்படி ஆட்சி போன்றவற்றை அரசாங்கமும் மக்களும் அன்றாடச் செயல்பாடுகளில் கொண்டுவந்துவிட்டனர். 
இந்த நாடுகளில், பொதுமக்களுக்குப் பெருமளவில் குடிமைப் பண்புகளை வளர்த்து அரசாங்கத்தைக் கண்காணித்துச் செயல்படத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டனர்.
இதற்குச் சிறிய உதாரணம், இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனாக செயல்பட்டவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவர் இங்கிலாந்தின் தீரம் மிக்க, சொல் வண்மை மிக்க பிரதமர். போரில் வெற்றி பெற்று உலகப் புகழை தேடிக்கொண்டவர். போருக்குப் பிறகு இங்கிலாந்தில் தேர்தல் நடந்தது அதில் மாபெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக எண்ணி தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் மாபெரும் தோல்வியைத் தழுவினார். 
அதற்குப் பிறகு இங்கிலாந்தில் ஓர் ஆய்வு நடத்தினார்கள். ஏன் மக்கள் சர்ச்சிலை நிராகரித்தார்கள்? அவர் செய்த தவறு என்ன என்பதைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், மக்கள் அவரை அவமதிக்கவில்லை, மாறாக அவரை உயர்ந்த இடத்தில்தான் வைத்திருந்தார்கள் என்பது தெரிய வந்தது.
இங்கிலாந்துக்கு இரண்டாவது உலகமகா யுத்தத்தை எதிர்கொள்ள போரில் வெற்றி பெற போர்க்குணம் கொண்ட தலைவரான சர்ச்சில் தேவையாக இருந்தது. அவர் சொன்னவற்றையெல்லாம் மக்கள் கேட்டுச் செயல்பட்டனர். போரில் வெற்றிபெற்ற பிறகு போர்க்குணம் கொண்டவர் அமைதிக்கு செல்லும் சூழலில் தேவையற்றவர் என்று மக்கள் முடிவு செய்து அவரை நிராகரித்து, அமைதிக்கான ஒரு பிரதமரை இங்கிலாந்து மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர். 
அந்த அளவுக்கு பொதுமக்களை சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் மிக்கவர்களாகத் தயார் செய்திருந்தனர் இங்கிலாந்தில். இதற்குப் பெயர் குடிஉயர்த்தும் பணி. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் குடிமக்கள்தான் எஜமானர்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களுக்குச் சேவகர்கள்தான். இந்தச் சிந்தனையை மக்கள் மத்தியில் வளர்த்து மக்களை அதிகாரப்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் அப்படி நடைபெறுவது கிடையாது. 
உயர்நிலைக் குடிமைப் பண்புகளைக் கொண்ட நாடுகளில், மக்களாட்சி சிறந்து செயல்படுவதற்கான காரணம், சமூக அறிவியல் பாடங்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படுவதுதான். எனவே, ஒரு நாட்டில் மக்களாட்சி சிறப்புறும்போதுதான் இந்தப் பாடங்களை வளர்த்தெடுக்க முடியும். 
அதேபோல், சமூக அறிவியல் வளர்ச்சியுறும்போதுதான் மக்களாட்சி மாண்புறும். இந்தப் பாடங்கள்தான் புதிய கருத்தாக்கங்களை உருவாக்குகின்றன; விவாதங்களை உருவாக்குகின்றன; புதிய உத்திகளை உருவாக்குகின்றன. கருத்துக்களின் உண்மைத்தன்மைக்கு அழைத்துச் செல்வது இந்த சமூக அறிவியல் பாடங்கள். 
இன்றைக்கு நம் நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருக்கும் ஒரு சொல் மதச்சார்பின்மை (நங்ஸ்ரீன்ப்ஹழ்ண்ள்ம்). இது ஒரு மேற்கத்திய நாட்டுச்சொல். இதைத்தான் நாம் இன்று வைத்துக்கொண்டு பயன்படுத்தத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றோம். இந்தச் சொல் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தியபோது மதத்தை நிராகரிப்பதற்காக பயன்படுத்தப்படவில்லை. 
இந்தச் சொல்லுக்குப் பொருள் எந்தத் தனிமனிதனும் சுதந்திரமாக அவன் மதத்தைப் பின்பற்றலாம். ஏனென்றால், இந்தச் சொல் உருவான காலத்தில் அரசும் மதமும் சொல்வதைத்தான் மக்கள் கேட்க வேண்டும் என்கிற சூழல் இருந்தது. அந்தச் சூழலிலிருந்து விடுபட அந்தச் சொல் அப்போது பயன்படுத்தப்பட்டது. அதைப் படிப்படியாக விவாதித்து விவாதித்து மதங்களை கடந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டனர். 
ஆனால், நம் நாட்டில் இருக்கும் சிக்கல், மேற்கத்திய நாட்டு சமூக அறிவியல் பாடங்களில் போதிக்கப்படுகின்ற கருத்துகளை அப்படியே போதிப்பது. அந்த வரையறைகளை உள்வாங்கி நம் சூழலுக்கு ஏற்ற கருத்தை உருவாக்கும்போது நம் அடிப்படைகளை மறந்து மேற்கத்தியமயத்திற்குள் சென்று விடுகின்றோம்.
நம் சமூகத்தின் உயர்வான சிந்தனைகள், கருத்தாக்கங்கள், முறைமையியல்கள் அனைத்தும் சிறுமைப்படுத்தப்படுகின்றன. நம் பாடங்களில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில் என அனைத்துச் சிந்தனையாளர்களையும் உயர்வாக எண்ணி மாணவர்களுக்குப் பாடம் போதிக்கும் நாம், நம் வள்ளுவரை விவாதிக்கவில்லை. வள்ளுவர் எந்த நிலையில் இவர்களைவிடக் குறைந்தவர்?
பொருளாதாரம் பற்றி கூறவில்லையா? கல்விபற்றிக் கூறவில்லையா? அரசுபற்றிக் கூறவில்லையா? தலைமைப் பண்புகள் பற்றிக் கூறவில்லையா? நிர்வாகம் பற்றிக் கூறவில்லையா? குடிமைப் பண்புகள் பற்றிக் கூறவில்லையா? எல்லாவற்றையும் குறித்துக் கூறியதால்தான் அதனை உலகப் பொதுமறை என்கிறோம். ஆனால் அது நம் பாடத்திட்டத்தில் தமிழில் சேர்க்கப்பட்டு தமிழ் ஆசிரியர் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.
பொருளாதாரத் துறையிலோ, அரசியல் அறிவியல் துறையிலோ, பொது நிர்வாகவியல் துறையிலோ, மேலாண்மைத் துறையிலோ, வள்ளுவம் சொல்லிக் கொடுக்கப்படுவது கிடையாது. அப்படித்தான் கௌடில்யரை, மகாகவி பாரதியை, ஜே.சி.குமரப்பாவைப் போன்ற எண்ணற்ற இந்தியச் சிந்தனையாளர்களைப் பற்றி ஆய்வோ, விவாதமோ மேற்கொள்ளாமல்அவர்களை வசதியாக மறந்து விட்டோம்.
மேற்கத்திய மாயமும், நவீனமயமும் நம் கல்வியை இன்று ஆட்டிப் படைக்கின்றன. எனவே, சமூக அறிவியல் பாடங்கள் நடத்தும்போது நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களை மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது நம் ஆசிரியர்களின் கடமை .
எனவே, சமூக அறிவியல் பாடங்கள் நம் கல்விக் கூடங்களில் தொய்வின்றி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் தாய்மொழியில் தந்திட நம் கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும். அதுதான் இன்றைய இன்றயமையாத் தேவை.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com