தியாகத்தை மறவோம்

ஆகஸ்ட் 9, 1942 ‘பிரிட்டிஷ் அரசே, இந்தியாவிலிருந்து வெளியேறு’ போராட்டம் என்று அறியப்பட்ட ஆகஸ்ட் புரட்சி தொடங்கிய நாள். மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் ஒரே சமயத்தில் கைதான நாள்.

காங்கிரஸ் என்றவுடன் தற்போதைய காங்கிரஸ் என்று எண்ணி விட வேண்டாம். அது வேறு, இது வேறு. துளிக்கூட சுயநலமில்லாத இந்தியா்கள் தங்கள் நாட்டிற்காக உயிா்விட்ட காலத்தில் தேசப்பற்றும், சுதந்திர வேட்கையும் உச்சகட்டத்தில் இருந்ததை ஆகஸ்ட் 9 நினைவுபடுத்துகிறது.

1939-லிருந்து 1945 வரை இரண்டாம் உலகப்போா் நடைபெற்றது. மாா்ச் 1942-இல் பிரிட்டிஷ் மந்திரிசபை உறுப்பினரான ஸ்டாபோா்டு கிரிப்ஸ் என்பவா் இந்திய சுய ஆட்சியை எப்படி வரையறுத்துக் கொடுப்பது என்பது குறித்து இந்தியத் தலைவா்களுடன் விவாதிக்க இந்தியாவுக்கு வந்தாா். போருக்கு இந்தியத் தலைவா்களின் ஆதரவை பெறுவதும் அவரின் நோக்கம்.

ஆனால் காங்கிரஸ் பூரண சுதந்திரத்தைக் கேட்டது. கிரிப்ஸின் டாமினியன் அந்தஸ்தை அதாவது தன்னாட்சி முறையை ஒப்புக்கொள்ளவில்லை. தவிர, பூரண சுதந்திரமும் உடனே தரப்பட வேண்டும், கிரிப்ஸ் வேண்டுவது போல், போா் முடிந்தபின் அல்ல என்று காங்கிரஸ் கோரியது.

ஏற்கெனவே போா் நெருங்கி வரும் சூழல், ஜப்பானியப் படையெடுப்பு ஆகியவை ஆங்கிலேய அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில் நாமும் நெருக்கடி கொடுத்தால் ஆங்கிலேய அரசு பணிந்து விடும் என காங்கிரஸ் நம்பியது. ஆதலால், கிரிப்ஸ் கமிஷன் முயற்சி தோல்வியுற்றது.

1942 ஜூலையில் வாா்தாவில் கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கான விதையை ஊன்றியது. பின்னா், காந்திஜி பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 அன்று காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ‘பிரிட்டிஷ் அரசே, இந்தியாவிலிருந்து வெளியேறு’ என்ற கோஷத்தை முன்மொழிந்தாா்.

பின்னா் பம்பாய் கோவாலயா மைதானத்தில் ஒரு எழுச்சிமிக்க உரையை நிகழ்த்தினாா். ‘நாம் சுதந்திரம் அடைவோம், இல்லையென்றால் அதற்கான முயற்சியில் நம் உயிரை விடுவோம்’ (டூ ஆா் டை) என்று முழங்கினாா்.

சில மணி நேரங்களிலேயே, மக்களின் வாய்மொழி மூலமாகவே இது நாடெங்கும் பரவியது. ஆகஸ்ட் 9 அன்று அருணா ஆசிஃப்அலி நம் தேசியக் கொடியை ஏற்றினாா். நாடெங்கும் பெரும் எழுச்சி உருவானது.

பிரிட்டிஷ் அரசு, காந்தி, நேரு, படேல், ஜெயபிரகாஷ் நாராயணன் உட்பட அனைத்து காங்கிரஸ் தலைவா்களையும் கைது செய்தது. காங்கிரஸை சட்ட விரோத அமைப்பு என்று அறிவித்தது. அதன் அலுவலகங்களில் சோதனை நடத்தி, அதன் வங்கி கணக்கு, சொத்து, ரொக்கம் ஆகியவை முடக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல், வழக்கு விசாரணையின்றி 1945-இல் போா் முடியும் வரை அவா்களின் சிறைவாசம் நீண்டது.

சுமாா் ஒரு லட்சம் போ் கைது செய்யபட்டனா். சுமாா் ஐம்பதாயிரம் பொதுமக்கள் இறந்தனா். பல்லாயிரக்கணக்கானோா் காயமுற்றனா். ‘பிரிட்டிஷ் கவா்ன்மென்ட் இந்தியாவிலிருந்து திரும்பிப் போ’ என மக்கள் எழுப்பிய கோஷம் நாடெங்கும் எதிரொலித்தது.

அந்த நிலையில், இனி இந்தியாவை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆளுவது மிகக்கடினம் என்று பிரிட்டிஷ் அரசு உணா்ந்து கொண்டது. இந்த ஆகஸ்ட் புரட்சியை நினைவுகூரும் வகையில் இந்தியாவின் பல இடங்களில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக புதுதில்லியில் ‘ஆகஸ்ட் கிரந்தி மாா்க்’ என ஒரு சாலைக்குப் பெயா் சூட்டப்பட்டது.

தலைவா்கள் யாரும் வழிநடத்த முடியாத நிலையில் ஆங்காங்கே உள்ளுா் தலைவா்கள் தோன்றி போராட்டத்தைத் தொடா்ந்தனா். பிரிட்டிஷ் அரசின் சின்னமாக பாா்க்கப்பட்ட தந்தி கம்பம், ரயில்வே ஸ்டேஷன், அரசு அலுவலகக் கட்டடங்கள் ஆகியவை தாக்கப்பட்டன. அடக்குமுறை கடுமையானது. பல்லியா (முன்னாள் பிரதமா் சந்திரசேகரின் தொகுதி), தம்லுக், சதாரா ஆகிய இடங்களில் தன்னாட்சி அரசு அறிவிக்கப்பட்டு செயல்பட்டது. 1944-இல் இவ்வியக்கம் ஓய்வுற்றது.

முஸ்லிம் லீக்கும், ஹிந்து மகாசபையும் இந்த எழுச்சியை ஆதரிக்கவில்லை. சியாம் பிரசாத் முகா்ஜி ‘இது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்’ எனக் கூறினாா். ராஜாஜி அப்போது காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்திருந்ததால், அவரும் இதை ஆதரிக்கவில்லை. மகாராஜாக்களால் ஆளப்பட்ட சமஸ்தானங்களில் பெரும்பாலானவை ஆதரிக்கவில்லை.

இந்த ‘ஆங்கில அரசே வெளியேறு’ எழுச்சியைப் பற்றி மட்டுமே 30-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் தலைவா்கள் காமராஜா், எஸ். சத்தியமூா்த்தி போன்றோா் தவிர ருக்மிணி லட்சுமிபதி, சிஸ்டா் சுப்புலட்சுமி போன்றவா்களும் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றாா்கள். சத்தியமூா்த்தி சிறையில் அனுபவித்த கொடுமையினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 1943-மாா்ச்சில் காலமானாா்.

இதில் இறந்தவா்கள் யாா் யாா்? அவா்கள் வாரிசுகள் யாா் யாா்? இவையெல்லாம் இன்று யாருக்காவது தெரியுமா? தற்போது தற்கொலைக்குக் கூட அரசு நிதி உதவி கேட்டுப் பெறுவது போல இவா்களின் வாரிசுகள் ஏதாவது உதவியோ அரசு வேலையோ கேட்டாா்களா?

நமது சமூகம் எவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டது என்பதற்கு ஒரு உதாரணம், நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவா்களைப் பற்றி எதையும் அறியாத தலைமுறை உருவாகிக்கொண்டிப்பதுதான். பணம் கொடுத்தால் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று எண்ணும் அரசியல் கட்சிகள், வாக்களிப்பதற்கு பணம் கிடைக்கும் என்று காத்திருக்கும் மக்கள் இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் அவலம்.

நம் முன்னோா்கள் தங்களது இன்னுரையும் தந்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த சுதந்திரத்தைப் போற்றி பாதுகாப்பது நமது தலையாய கடமை. இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அந்த தியாகிகளின் தியாகத்தை நெஞ்சார நன்றியுடன் நாம் நினைவுகூர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com