இணைய வாக்குப்பதிவு தேவை

பால்டிக் கடல் பகுதியில் சுமார் 1,500 தீவுகளை உள்ளடக்கிய குடியரசு நாடு எஸ்டோனியா.
இணைய வாக்குப்பதிவு தேவை


பால்டிக் கடல் பகுதியில் சுமார் 1,500 தீவுகளை உள்ளடக்கிய குடியரசு நாடு எஸ்டோனியா. மிகவும் குறைந்த மக்கள்தொகை (13.3 லட்சம்)கொண்ட நாடுகளில் ஒன்றாகவும், முன்னேறிய உயர் வருவாய் பொருளாதாரம் மிக்க வளர்ந்த நாடாகவும் இது உள்ளது. 
மின் ஆளுமை நிர்வாகத்தில் உலகின் முன்னணி நாடாக விளங்கும் எஸ்டோனியாவில், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இணையம் வாயிலாகப் பதிவு செய்துள்ளனர்.
2005-இல் இங்கு இணைய வாக்களிப்பு அறிமுகமாகும்போது, அனைத்து எஸ்டோனியர்களும் தவறாமல் பயன்படுத்தும் மின் ஆளுமை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு சிறிய பகுதியாக அது இருந்தது. இந்த நாட்டின் எண்மமயமாக்கல் புரட்சியின் வெற்றிக்கு மையமாக அமைந்துள்ளது "எக்ஸ் - ரோடு' என்ற பாதுகாப்பான தரவு பகிர்வு அமைப்பு.
இங்கு ஒருவர் பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவருடைய பிறந்த தேதி, பள்ளி சான்றிதழ் தேவைப்படும். இவை இரண்டும் வெவ்வேறு முகமைகளால் சேகரிக்கப்படுகின்றன. ஒருவர் தன்னுடைய அடையாள அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் அந்தத் தகவலை சேமிக்கும் இரண்டு முகமைகளிடமிருந்து உடனடியாக அந்தத் தரவுகளை பெற்று கணினி விண்ணப்பத்தைத் தானாக நிரப்பும்.
மின் ஆளுமை அமைப்பை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும், தொழில்நுட்ப, அரசியல், சமூக சக்திகள் ஒன்றிணைவது அவசியம். மாநில விவகாரங்களில் கூட்டாட்சி தலையீடு பற்றிய கவலைகள், சமீபத்திய தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான அரசியல், சமூக புறக்கணிப்பை தூண்டியுள்ளன. 
என்றாலும், பெரும்பாலான எஸ்டோனியர்கள் தங்கள் மின் ஆளுமை அமைப்பை நம்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
இதனால், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தங்களின் அடையாள அட்டையையோ, கைப்பேசி அடையாளத்தையோ கொண்டு இணையத்தில் வாக்களிக்கலாம். 
இரண்டு மின் உறைகளால் பாதுகாக்கப்பட்ட இந்த வாக்கு, தேசிய தேர்தல் ஆணைய சர்வருக்குச் செல்வதற்கு முன்னதாகவே, யார் வாக்களித்தார் என்ற அடையாளம் நீங்கிவிடும். ஒருவர் வாக்களித்த பிறகு மூடப்படும் இந்தத் தளத்தை, பிறகு தேர்தல் ஆணைய குழுவால் மட்டுமே திறக்க இயலும். 
எஸ்டோனியாவில் கடந்த 2005 முதல் இணைய வாக்குப்பதிவு (ஐ-ஓட்டிங்) மூலம் ஐந்து உள்ளூராட்சி தேர்தல்களும், ஐந்து நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இணைய வாக்கை, எண்ணற்ற முறை மாற்றலாம். 
கடைசியாக செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்படும். அதோடு, கடைசி நாளில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டு மூலமும் வாக்களிக்கலாம். அப்போது இணைய வாக்கு நீக்கப்படும். இதனால், வாக்காளர் முன்பு ஒருவருக்கு வாக்களித்தாலும், அதை பிறகு மாற்றிவிட முடியும்.
பாதுகாப்பான க்யூ ஆர் கோட் அடிப்படையிலான கைப்பேசி செயலி வாயிலாக ஒருவர் தன்னுடைய வாக்கு, தேசிய தேர் தல் ஆணைய சர்வருக்கு சரியாக சென்றுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும். தேர்தல் நாள் முடியும் முன்பு இணைய வாக்குகளை எண்ணமுடியாது. நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
தேர்தல் குழுவின் பல்வேறு உறுப்பினர்களால் எண்ம வாக்குகள் கணித ரீதியாக சரிபார்க்கப்பட்டு எண்ணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக, எஸ்டோனியாவின் ஐ-ஓட்டிங் முறை அந்த நாட்டு மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நம் நாட்டில் தேர்தல் ஆணையம் கொண்டுவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு பல கட்டங்களாக ரூ. 9,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
வாக்காளர்களின்  எண்ணிக்கை உயரஉயர, தேர்தல் நடத்தும் செலவுகளும் உயர்ந்துகொண்டே இருக்கும். இதனிடையே, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப்பணமே.
மேலும், சுமார் 94.5 கோடி வாக்காளர்களைக் கொண்ட நம்நாட்டில், விலை உயர்ந்த பாதுகாப்பான வாக்குப் பதிவு இயந்திரங்களை வாங்குவது முதல், வாக்கு இயந்திரங்களை பாதுகாத்து முடிவுகளை அறிவிப்பது வரை பல பிரச்னைகளை தேர்தல் ஆணையம் எதிர்கொண்டு வருகிறது. 
இவ்வளவு சிரமங்களுக்கிடையே நடைபெறும் தேர்தலையும் சில அரசியல் கட்சிகள் சந்தேக கண்கொண்டே பார்க்கின்றன.
நம் நாட்டிலும் தற்போது மின் ஆளுமை நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில பாதுகாப்பு பிரச்னைகள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் மின் ஆளுமைக்கு மாறிவிட்டனர். காலம், பொருள், அலைச்சல் மிச்சமாவதோடு, உடனடி பலனும் கிட்டும். 
உதாரணமாக, நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தவர்கள், அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வாக்களிக்கும் வகையில், தொலைவிட மின்னணு வாக்குப்பதிவு மாதிரி இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அண்மையில் உருவாக்கியுள்ளது. 
இந்த இயந்திரத்தின் செயல்பாட்டை விளக்குவதற்காக எட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆணையம் அழைப்புவிடுத்தது. ஆனால், இந்த புதிய ஏற்பாட்டைபெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இணைய பணப் பரிமாற்றத்தில் யுபிஐ தொழில்நுட்பத்தை கண்டறிந்த நம் நாடு, அதை பிறநாடுகளுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளது. 
அதே போல, ஐ- ஓட்டிங் தொழில்நுட்பத்தையோ, அதுபோன்ற புதிய மென்பொருளையோ உருவாக்கி, நாம் பயன்படுத்தினால், புலம்பெயர்ந்தோர், போக்குவரத்து குறைவான பகுதி வாக்காளர்கள், மலைவாழ் மக்கள், வாக்குச் சாவடிக்கு வரமுடியாத முதியவர்கள், நோயாளிகள் எனப் பலரையும் நாம் வாக்களிக்கச் செய்ய முடியும். 
மேலும், இதனால் கால விரயமும் பொருள் விரயமும் தவிர்க்கப்படுவதோடு, தேர்தல் ஆணையத்தின் இலக்கான நூறு சதவீத வாக்குப்பதிவையும் எட்ட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com