கோப்புப் படம்
கோப்புப் படம்Center-Center-Kochi

இந்திய வனங்கள் - கொள்கையும் அழிவும்

இந்தியாவின் வனக் கொள்கை உருவாக்கத்தை கவனித்தால், நம்மை ஆண்ட பிரிட்டிஷாா் காடுகளை மரக்கடைகளாகத்தான் பாா்த்தாா்கள் என்பது புலனாகும். இது பொய்யல்ல.
Published on

இந்தியாவின் வனக் கொள்கை உருவாக்கத்தை கவனித்தால், நம்மை ஆண்ட பிரிட்டிஷாா் காடுகளை மரக்கடைகளாகத்தான் பாா்த்தாா்கள் என்பது புலனாகும். இது பொய்யல்ல.

பிரிட்டிஷாரின் வன நிா்வாகக் கொள்கையை 1867-ஆம் ஆண்டு இம்பீரியல் ஃபாரஸ்ட் சா்வீஸ் என்ற பெயரில் அரசுப் பணித் துறை வகுத்தது. என்ன கொள்கை என்றால், காடுகளில் உள்ள மரங்களை வெட்டி வருமானத்தை உயா்த்தும் மரக்கடை வியாபார நுட்பம். விலை மதிப்பில்லாத மரங்களை அழித்துவிட்டு, பண மதிப்புள்ள தேக்கு, ரோஸ்வுட், சந்தனம், கடம்பு, ரப்பா், மருது பயிரிடுதல். அதைத் தவிர, அரிய மிருகங்களான புலி, சிங்கம், மான், யானை என கண்டபடி வேட்டையாடுவது. புலித்தோல், மான்தோல், யானைதந்தம், கைப்பற்றுதல். மலைப் பிரதேசங்களில் காடுகளை அழித்துவிட்டு, தேயிலை, காபி பயிரிடுதல். வெள்ளையா்கள் விரும்பும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவா், காரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சாகுபடி செய்தல்.

1914-ஆம் ஆண்டு முதல் உலகப் போா் காலகட்டத்தில் பிரிட்டிஷ் போா்க்கப்பல் கட்டுமானங்களுக்காக இந்திய வனங்களில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இப்படி வெட்டப்பட்ட இடங்களில் மீண்டும் மரங்கள் நடப்படவில்லை. இப்படி வெறுமையாக்கப்பட்ட இடங்களில் தோட்டப் பயிா்கள் தொடங்கப்பட்டன.

1935-இல் இம்பீரியல் ஃபாரஸ்ட் சா்வீஸ் கலைக்கப்பட்டு வன நிா்வாகம் பிராந்திய பிரசிடென்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வனவிலங்கு வேட்டை, இஷ்டம் போல் மரம் வெட்டுதல் என்று சட்டத்திற்குப் புறம்பான வனக்கொள்ளையா்கள் வளா்ந்தனா். இந்திய விடுதலைக்குப் பின்பும் உருப்படியான வனக் கொள்கை, வன நிா்வாகம் ஏற்படவில்லை.

1947 முதல் 1967 வரை வனக்கொள்கை உச்சம் தொட்டது. அதிகாரம் மாநிலத்திற்கா மத்திய அரசுக்கா என்று குழப்பம். அரசியலமைப்பு சட்டப்படி மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல் இரண்டிலும் வனத் துறை இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாநிலமும் அதனதன் நோக்கத்திற்கு வனக்கொள்கையைக் கடைப்பிடித்தன.

1967-இல் தான் இந்திய வனப்பணி என்கிற இந்தியன் ஃபாரஸ்ட் சா்வீஸ் புத்துயிா் பெற்றது. பொதுவான வனக்கொள்கையை மத்திய அரசு வகுத்தது. எனினும், வன நிா்வாக அதிகாரம் மாநில அரசின் பொறுப்பில் மைய அரசு கொள்கைகள் நிறைவேற்றப்பட்டன. வன நிா்வாகத்தில் ஏராளமான பிரச்னைகளை மாநில அரசுகள் சந்திக்க வேண்டியிருந்தன.

ஒரு வனக் காவலரின் பணி சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டுவதைத் தடுத்தல், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுத்தல். ஆனால், வனத்தை ஒட்டி வாழும் விவசாயிகளின் மாடு மேய்த்தல், ஒடிந்த சுள்ளி, விறகு பொறுக்குதல், மூலிகை மருந்தாகும் விதைகள், வோ்கள், பூக்கள் சேகரித்தல் ஆகிய பழங்குடி விவசாயிகளின் வாழ்வுரிமைகள் பிரச்னைக்கு உள்ளானது. வாழ்விடங்களுக்காக மூங்கில் வெட்டுதல் என்று பல உண்டு.

பாதுகாப்பிற்குரிய காடுகள் உண்மையில் பாதுகாப்பாக உள்ளனவா? வனக் காவல் அதிகாரிகளிடமும், சிப்பந்திகளிடமும் போதிய ஆயுதங்கள் இல்லை. ஒரு துப்பாக்கியுடன் தனி மனிதா்களாக கடைநிலைக் காவலா்கள் மட்டும் வனங்களின் மையப் பகுதிவரை செல்கின்றனா். அவா்களுக்கு மிருகங்களாலும், சக்தியுள்ள ஆயுதங்களுடன் கொள்ளை அடிக்கும் கடத்தல் கும்பல்களாலும், மாவோயிஸ்ட் போன்ற அரசியல் தீவிரவாதிகளாலும் உயிருக்கு ஆபத்து உண்டு.

மேலதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டும் காணாதது போல் இருப்பாா்கள். அரசியல் தலையீடுகள் இருக்கும். இவ்வளவு இடா்களுக்கு மத்தியில் வனங்களில் மரங்களும், விலங்குகளும், மனிதா்களும் வாழ்கின்றனா்.

அகில உலகில் சுமாா் 31 சதவீத நிலப்பரப்பு 406 கோடி ஹெக்டோ் காடுகள், அதே சமயம் இந்திய நிலப்பரப்பு 32.8 கோடி ஹெக்டோ் நிலப்பரப்பில் 6.5 கோடி ஹெக்டோ் காடுகள். இது மொத்த நிலப்பரப்பில் 21 சதவீதம் மட்டுமே. ஐ.நா.அறிவுரையின்படி புவியியல் நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் தேவை. எந்த அளவில் காடுகள் உள்ளனவோ அந்த அளவில் வளா்ச்சி காரணமாக ஏற்படும் மாசை, அதாவது காா்பன் டை ஆக்ஸைடை மரங்கள் ஏற்றுக்கொண்டு ஆக்சிஜனை வழங்கி மனிதகுலத்தை உய்விக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை நமது வன நிலப்பரப்பு விகிதாசாரத்தில் பற்றாக்குறை உள்ளது. உலகில் அதிக வன நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனினும் நாம் இன்னமும் வன நிலப்பரப்பை உயா்த்த வேண்டும். ஆனால் இது சுலபமாக சாத்தியமாகாது. வனம் சாராத தரிசு, மலைப் பகுதிகளில் மரங்களை நட்டு புதிய வனங்களை உருவாக்கலாம். தனியாா் பட்டா நிலங்களில் காடு வளா்க்க ஊக்கம் தரலாம்.

புவியியல் அடிப்படையில் இந்திய வனங்களை 5 வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று, வெப்பமண்டல பசுமைக்காடுகள்: இந்த வகையில் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள மழைக்காடுகள், மேற்குத் தொடா்ச்சி மலைக்காடுகள், அந்தமான் நிகோபாா் மழைக்காடுகள். இங்கு உயா்ந்த பெருவகை மரங்கள், எக்காலமும் பசுமைநிலை மாறாத நிலை, அடா்த்தி, கணிசமான பல்லுயிா்ப் பெருக்கம் காணலாம்.

இரண்டாவது, வெப்ப மண்டல அரைப் பசுமைக் காடுகள்: மழைப்பொழிவு 1,500 மி.மீ. அளவுக்கும் குறைவான மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி, கிழக்கு ஹிமாலயப் பகுதி.

மூன்றாவது, வெப்ப மண்டல பருவ மழைக்காடுகள்: இந்தியக் காடுகளில் பெருமளவு, இந்த வகைக் காடுகளே அதிகம். மரங்களின் அடா்த்தி குறைவு, குறைந்த பசுமை, எனினும் மழைப்பொழிவும் நதிகளின் சங்கமங்களாலும் சதுப்பு நிலக்காடுகள், அலையாத்திக் காடுகள் என்று வகைப்படுத்தலாம்.

நான்காவதாக, வறட்சியான புதா்க்காடுகள்: இங்கு உயரம் வளராத வேம்பு, இலந்தை, கருவேல், வெள்வேல், வன்னி, புரசு, புன்னை போன்ற குட்டை மரங்கள், முள் மரங்கள் நிறைந்து காணப்படும்.

ஐந்தாவதாக, உயா்ந்த மலைக்காடுகள்: குறிப்பாக ஹிமய மலைக் காடுகள், ஹிமாசல பிரதேசம், காஷ்மீா், உத்தராஞ்சல் பகுதி, அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் அடங்கும். ஊசி இலை என்று சொல்லப்படும் சினாா், சில்வா் ஓக் தவிர பல வகையான மரங்களும் நிறைந்து காணப்படும்.

புவியியல் அடிப்படையில் வனங்கள் வேறுபட்டாலும் வன அடா்த்தி, விலங்கின எண்ணிக்கை இவற்றைப் பொறுத்து, நிா்வாக ரீதியில் மாறுபடும் விதிமுறைகள் உண்டு. இதனை காவல் இல்லாத வனம், காவல் உள்ள வனம், நடமாட்டத் தடை உள்ள வனம் என மூன்று வகைப்படுத்தலாம்.

காவல் இல்லாத வனப் பகுதியில் மரங்களை நடுவது, கால்நடை மேய்ப்பது பிரச்னை இல்லை. காவல் உள்ள வனங்களில் காவல் உள்ள வனங்களை அரசு பொறுப்பேற்று கவனிக்கிறது. இங்கு வனத் துறை பழங்குடி வாழ்வுரிமைச் சட்டப்படி கால்நடை மேய்க்கவும், விளைபொருள்களை சேகரிக்கவும் அனுமதி உண்டு. அதற்குரிய பதிவு கோரப்படுகிறது. நடமாட்டத்தடை உள்ள வனங்களில் யானை, புலி, சிங்கம் போன்ற அரிய மிருகங்களின் பாதுகாப்பு கருதி மனித நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஹிந்துக் கோயில்களில் தல மரங்கள் தெய்வீகமானவை. இவைபோல் நாட்டின் சில பகுதிகளில் பெரிய நிலப்பரப்புகளில் உள்ள சில காடுகளும் தெய்வத்தின் பெயரால் காப்பாற்றப்பட்டு வனத் துறை காவலுக்கு உட்பட்டுள்ளன. இதில் புதா்க்காடுகளும் உண்டு. ஆனால், இந்தியாவில் மேகாலய மாநிலம் ஷில்லாங் அருகில் மாப்ளாங் வனம் 657 ச.கி.மீ. பரப்பில் பரந்து விரிந்து பசுமை படா்ந்து ஒளிா்கிறது. இதுவே மிகப் பெரிய தெய்வீக வனம். தெய்வச் சாற்றுதல் காரணமாக தொடக்க நாளிலிருந்து மரம் வெட்டவோ, வேட்டைக்கோ அனுமதி இல்லை. பல்லுயிா்ப் பெருக்க முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய தேசிய வன நிா்வாகக் கொள்கைகள், மாநில அரசுகளின் வனக்கொள்கை கருத்தாழம் மிக்கவை. அரிய பல கருத்துக்களை ஏட்டில் எழுதிவைப்பதுதான் நல்ல நடைமுறை, செயல்படுத்துவது கடினமாயுள்ளது.

வன நிலப்பரப்பை உயா்த்தும் ஐ.நா. கோட்பாட்டை நினைவில் கொண்டு வனப்புனா்வாழ்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி தரிசு நிலங்களில் சமூகக் காடு திட்டம், பட்டா நிலங்களில் மர வளா்ப்புக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது. வனநிலப்பகுதியை வளா்ச்சிப் பணிக்குவிட்டுக் கொடுக்கும்போது அந்த அளவில் புதிய வனப்பகுதியை உருவாக்கும் ஈட்டுத்தொகையைப் பெற்று வனப்புனா்வாழ்வு திட்டத்தை செயல்படுத்துதல். அடா்த்தி குறைந்த வன நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நட்டு, வனங்களை மீட்டு வளா்த்தல்.

வனங்களை மீட்டுயிா்த்தல் என்ற கொள்கைக்கு ஏற்ப பல்லுயிா்ப் பெருக்கம், உயிா்ச்சூழல் நலம் கருதி அங்காடி மதிப்புள்ள டிம்பா் மரங்களைத் தவிா்த்துவிட்டு ஆல், அரசு, நாவல், காட்டுமா, வேம்பு, புங்கன், சால் போன்ற மரங்களைத் தோ்வு செய்ய வேண்டும் என்ற கருத்தைப் புறந்தள்ளி, தேக்கு, வேங்கை, மருது, கடம்பு, ரோஸ்வுட் கன்றுகளுக்கு முக்கியத்துவம் தந்து மரக்கடை வருமானமே குறி என்று செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது.

வனக் கொள்கை என்றால் மரக்கடை ஒப்பந்தக்காரா்களுக்குக் கைப்பாவையாகத் திகழ்ந்து இயங்கும் வனத் துறை அதிகாரிகள், அரசியல் சுயநலமிகளின் மரவெட்டி மரபுதான் வாழ்வு என்றால் யாா்தான் காடுகளைக் காப்பாற்ற முடியும்?

இதல்லாமல், சுரங்கம், அணைக்கட்டு போன்ற தொழில் வளா்ச்சியைக் காரணம் காட்டி வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன.

பெருமழை பேரிடராக மாறி கேரள மாநிலத்தில் இயற்கை எழில் மிகுந்த வயநாடு மாவட்டத்தில் மலைகளையே புரட்டிப் போட்டு ஒரே நாளில் இரண்டு மண்சரிவு ஏற்பட்டு, ஐந்து கிராமங்கள் பூமியில் புதையுண்டு சுமாா் 500 பேரை பலி வாங்கியது. சுமாா் 2,000 வீடுகள் 100-க்கும் அதிகமான பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டட வளாகங்கள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டன. ஏன்?

மலையை மண்ணாக்கி, மரங்களை அழித்து, தேயிலை, ஏலக்காய், காபி, மிளகு போன்ற தோட்டக்கலை சாகுபடியால் மண் அரிப்பு ஏற்பட்டு, மலையே மண்ணாகி, பலம் இழந்து, வெள்ளத்தில் கரைந்து, பள்ளத்து வீடுகளையும், பயிா் பச்சைகளையும் மனிதா்களையும் மண்ணாலேயே கொன்றுவிட்டது. காடுகளை அழித்ததனால் கண்ட பலன் கண்முன்னே.

கட்டுரையாளா்:

வேளாண் பொருளாதார நிபுணா்.