விடாமுயற்சி வெற்றி தரும்

விடாமுயற்சி வெற்றி தரும்
Published on
Updated on
2 min read

இரண்டு தவளைகள் ஒரு தயிர்ப் பானைக்குள் விழுந்து விடுகின்றன; ஒரு தவளை "நான் என்ன செய்ய முடியும்...', என்று வருந்தி புலம்பி வீணே இருக்கிறது; சிறிது நேரத்தில் அது மரணிக்கிறது; இன்னொரு தவளை எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில், கால்களை இடைவிடாது உதைத்து நீந்துகிறது; சிறிது நேரத்தில் தயிர் வெண்ணையாகத் திரள்கிறது- அதன் மீது தவளை உட்கார்ந்து தாவிக் குதித்து வெளியேறுகிறது.

இலக்கை நோக்கிய முயற்சியைப் பற்றி இப்படி ஒரு கதைப் புனைவை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி தனது நூல் ஒன்றில் சுட்டிக் காட்டியிருப்பார்.

உலகில் சாதனை புரிந்தவர்கள் அல்லது சரித்திரம் படைத்தவர்கள், கல்வியில் சிறந்த மாணவர்கள், பெரும் பொருள் ஈட்டும் வணிகர்கள், தலைசிறந்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் என எந்தத் தரப்பினரை எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்குள் இருக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை அல்லது அவர்கள் அனைவரிடமும் இருக்கும் கூறு, விடாமுயற்சி என்பதாகும்.

இலக்கை முதல் முயற்சியிலேயே எல்லோரும் எட்ட முடியும் என்று உறுதியாகக் கூற முடியாது. இடர்ப்பாடுகள் வரலாம், தோல்விகள் கிடைக்கும், மனம் தளராமல், மீண்டும் முயற்சி செய்து, வெற்றி எனும் இலக்கை அடைபவர்கள் சாதனையாளர்கள்.

கூர்ந்து கவனித்தால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். அவர்கள் தோல்வியை நோக்கும் பார்வையில், பிறரிடம் இருந்து வேறுபடுகிறார்கள்.

தோல்வி என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இல்லை எனலாம். முயற்சியில் வெற்றி கிட்டவில்லை எனில், அவர்கள் அதைப் பின்னடைவு என்று எடுத்துக் கொள்வார்களேயன்றி, தோல்வி என்று கருத மாட்டார்கள். அதுவே விடாமுயற்சிக்கு வித்து.

விடாமுயற்சி என்பது செயல் அல்ல, ஒரு மனநிலை என்று சொல்லலாம். பொதுவாக, வெற்றி நழுவும்போது, அதற்கான காரணங்கள், எந்தவித சலனமும் இன்றி அலசப்படும், படிப்பினைகள் கற்றுக் கொள்ளப்படும், பாடங்கள் ஏற்கப்படும். பின்னடைவுகள் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்று கொள்ளப்படும். முறையான திட்டமிடுதலுடன், மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

விடாமுயற்சி என்பது உளவியல் சார்ந்த ஒன்று; பிறர் ஊக்குவிப்பதைவிட, தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ளும் வித்தை கற்றவர்கள் விடாமுயற்சியாளர்கள்.

உலகிலேயே உங்கள் மீது உங்களுக்குத்தானே அதிக அக்கறை இருக்க வேண்டும்? உங்களை ஊக்குவிக்க, உங்கள் மீது உங்களைவிட அக்கறை கொண்ட இன்னொருவர் இருக்க முடியுமா? தோல்வியாளன் என பிறர் நினைக்கட்டும் பரவாயில்லை... எக்காரணம் கொண்டும் நீங்கள் அந்த நினைப்புக்கு இடம் தராதீர்கள்.

தனி மனிதன் அல்லது அவன் சார்ந்த குடும்பம் மட்டுமல்ல, உலகமே விடா முயற்சியாளர்களுக்கு கடன்பட்டுள்ளது. அவர்களின் விடாமுயற்சியின் காரணமாக அளப்பரிய நன்மைகளை உலகம் பெற்றிருக்கிறது. ஒரு நாட்டில் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது விடாமுயற்சியின் விளைவாகக் கண்டுபிடித்தவற்றைக் கொண்டு, அந்நாடு பெரும் பலன் பெறுகிறது. அதிவேகம் கொண்ட வளர்ச்சி விகிதம் பெறுகிறது. ஒரு தனிமனிதனின் விடாமுயற்சியால், ஒரு நாடு முன்னேற்றம் அடையும் என்றால், விடாமுயற்சி எனும் குணம், அம்மக்களின் பொதுக்குணமாக மாறினால்?

யூதர்களின் பொதுக்குணம் விடாமுயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. யூதர்கள் எதிர்கொண்ட இன்னல்கள், அவற்றை அவர்கள் கையாண்ட விதம், பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வாழ வேண்டிய அவலம், அவர்களது எபிரேய மொழி அநேகமாக வழக்கொழிந்த நிலை, ஹிட்லரின் கொடுமைகளால் பட்ட துயரங்கள் -இவை யாவும் அம்மக்களை மனந்தளரவிடவில்லை; மாறாக, யூதர்கள் எஃகனைய இதயத்துடன் இன்னல்களை எதிர்கொண்டனர்; தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கினர், விடாமுயற்சி காரணமாக, சின்னஞ்சிறிய நாடாக இருப்பினும் ஒதுக்கித் தள்ள முடியாத இடத்தை உலக அரங்கில் பெற்றிருக்கின்றனர். விவசாயம், வணிகம், ஆயுத தயாரிப்பு, அறிவியல் ஆய்வு, மொழி மீட்பு என பல தளங்களில் பெரும் வெற்றி கண்டனர். இப்பின்னணியில், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற வினா எழுகிறது.

நம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், இல்லங்களில் பெற்றோர்கள், பொது வெளியில் நாட்டின் தலைவர்கள், மக்களிடையே தோல்வி என்ற சொல்லை முழுமையாக அகற்ற வேண்டும். விடாமுயற்சி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் சிறப்பு குணமாக வளர்ந்து, நாட்டு மக்களின் பொதுக்குணமாக மாற வேண்டும். விடாமுயற்சியின் அவசியம் பற்றி சிறுவர்கள் மனதில் ஆழமாகப் பதியனிடப்பட வேண்டும்.

வெற்றியாளர்களின் விடாமுயற்சி சார்ந்த நிகழ்வுகள், சாதனைகள் சாமானியர்களின், மாணவர்களின் பேசுபொருளாக இருக்க வேண்டும். விழுவது தவறல்ல, குற்றமுமல்ல. விழுந்தால் மீண்டும் எழுந்து ஓட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் விதைக்கப்பட வேண்டும்.

முந்தைய வெற்றிகளை அவ்வப்போது மனதில் அசைபோடுதல், தோல்வியை சமமான மனநிலையில் அணுகுதல், படிப்பினை கற்றுக் கொள்ளுதல், பிறர் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை இளம் வயதில் கற்றுக் கொடுக்க வேண்டும் .

நம் பாட்டன் வள்ளுவரும் நமக்கு விடாமுயற்சி குறித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்தியம்பி உள்ளார். விடாமுயற்சியாளர்களை "திண்ணியர்', என்கிறார். முடிவில் இன்பம் தரும் செயலைச் செய்யும்போது துன்பம் மிக வந்தாலும், துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும் என்கிறார்.

துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

இன்பம் பயக்கும் வினை

( குறள் - 669)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com