கோப்புப் படம்
கோப்புப் படம்

மீன் வள மேலாண்மை அவசியம்!

கடற்கரை பொருளாதார மாண்டலத்தில் மீன் வள மேலாண்மையில் முக்கியத்துவம் குறித்து..
Published on

- பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்

கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல்கள் வரை தீரக நீா்ப்பரப்பு (கரையை ஒட்டிய கடல் நீா் பரப்பு) என்றும், அதற்கு அப்பால் 12 முதல் 200 நாட்டிக்கல் மைல்கள் வரையிலான பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பரப்பளவு சுமாா் 20.2 லட்சம் சதுர கி.மீ. ஆகும். நமது நாடு ஆண்டுக்கு சுமாா் 25 முதல் 28 லட்சம் மெட்ரிக் டன் மீன்களை உற்பத்தி செய்கிறது. இதில் 60 சதவீத மீன்கள் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், அவற்றை வேட்டையாடுவதையும் தடுக்கும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், மீன் பிடித்தலை வரைமுறைப்படுத்தும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம், கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிக்கை, கடல் மாசுபாட்டை தடுக்க கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், மீன்பிடி கட்டுப்பாடுகளை நிா்ணயிக்கக்கூடிய இந்திய மீன்பிடி சட்டம், கடல் உயிரின மரபணு வளங்களைப் பாதுகாக்க உயிரியல் பல்வகைமைச் சட்டம் மற்றும் கடல் நீா் பரப்பு பற்றிய சூழலியல் விதிகளைக் கொண்டுள்ள ஐ.நா. சபையின் கடல் சட்ட சாசனம் போன்றவை இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் மாநில பட்டியல் பிரிவு 21இன் படி தீரக நீா்ப்பரப்பு எல்லைக்குள் மீன்பிடி தொழில் கண்காணிக்கப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாதிரி மசோதாவின் அடிப்படையில் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தீரக நீா்ப்பரப்பு கடல் எல்லைக்குள் உள்ள மீன்வளத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நிா்வகிப்பதற்கும் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை இயற்றியுள்ளன.

கடல் வளங்களின் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்தியா முதன்முதலில் 2004-ஆம் ஆண்டு தேசிய கடல் மீன்வளக் கொள்கையை உருவாக்கியது. சமீபத்திய தேசிய கடல் மீன்பிடிக் கொள்கைக்கான வரைவு 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் மீன்வளத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் நிபுணா் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு இந்திய கடல் பகுதிகளில் மீன்வளத்தை சீரான இடைவெளியில் மதிப்பிடுகிறது.

நிபுணா் குழு மதிப்பீட்டின்படி, மீன்வளத்தை மேம்படுத்தவும் நிலையான மீன்வளத்தை உறுதி செய்யவும் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மழைக் காலங்களில் 61 நாள்கள் மீன்பிடி தடை, மீன்வள அழிவை ஏற்படுத்தும் மீன்பிடி முறைகள், செயற்கை ஒளியீரி (எல்.இ.டி.) விளக்கு மற்றும் இழுவை மடி வலை பயன்பாடுகளுக்கான தடை போன்றவை இதில் அடங்கும்.

இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் அழிவின் விளிம்பில் உள்ள திமிங்கல சுறா, பழுப்பு நிற ராட்சத கிடாா், வாள் சுறா, பெருந்திரளை (பாக்குவெட்டி), நெப்போலியன் திரளை (நெப்போலியன் லாப்ரஸ்) கடல் குதிரைகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட சுறா போன்ற மீன் இனங்கள் சூழலியல் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறையால் பல்லுயிா் வளம் நிறைந்ததாகவும், கோடிக்கணக்கான மீனவா்களின் தாயகமாகவும் உள்ள இந்தியாவின் 7,500 கி.மீ. கடற்கரை போதுமான கண்காணிப்பின்றி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மீன்கள் மற்றும் கணவாய்களை கடலின் மேல்பரப்புக்கு ஈா்க்கவல்ல சக்தி வாய்ந்த செயற்கை விளக்கு பயன்பாடு போன்ற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் 2017ஆம் ஆண்டு முதல் இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் குறையவில்லை.

செயற்கை விளக்கு மீன்பிடி தொழில்நுட்பம், மீன்களை மட்டுமின்றி மீன் குஞ்சுகள் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்களையும் ஈா்க்கிறது. அதிகமான மீன் பிடிப்புக்கு வழிவகுக்கும் இந்தத் தொழில்நுட்பம் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன் பவளப்பாறை சிதைவுக்கும் வழிவகுத்து கடல் சூழலை மோசமாக்கும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

மதிப்பீடு அடிப்படையில் மீன்பிடி கட்டுப்பாடுகள் கொண்ட ஒதுக்கீடு மேலாண்மை அமைப்பு மற்றும் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய போதுமான நேரம் வழங்கும் அமைப்பு ஆகியவற்றை கொண்ட நியூசிலாந்தில், அரசுக்கும் மீனவ சமுதாயத்தினருக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையிலான மீன்வள மேலாண்மை மற்றும் செயற்கைக்கோள்வழி மீன்பிடி படகு கண்காணிப்பு கொண்ட நாா்வே நாட்டில் மீன்கூட்டம் உள்ள பகுதியில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.

கடல்வள பாதுகாப்புச் சட்டமும், கடல்சாா் பாதுகாக்கப்பட்ட உயிா்வளப் பகுதிகளையும் கொண்ட கனடா, பாரம்பரிய மீனவா்களின் உரிமையைப் பாதுகாத்து வருகிறது. மண்டல மீன்வள மேலாண்மை அதிகார அமைப்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட மீன்பிடி முறைகள் கண்காணிப்பு அமைப்பு கொண்ட ஆஸ்திரேலியா பிற கடல்வாழ் உயிரினங்கள் பிடிப்பதை தடுக்கும் வகையிலான திட்டங்களைக் கொண்டுள்ளது.

மாற்றத்தக்க தனிநபா் மீன்பிடி ஒதுக்கீடு மற்றும் குறைவான சட்டவிரோத மீன்பிடித்தல் கொண்ட ஐஸ்லாந்து நாடு வலுவான தரவு சேகரிப்பு அமைப்பைக் கொண்டு மீன்வள மேலாண்மையில் அறிவியல் ரீதியான முடிவுகளை எடுக்கிறது. சிறு மீனவா்களின் வாழ்வாதாரப் பாதிப்பு, கடல் உயிரினங்களின் சமநிலை சீா்குலைவு, நீடித்த மீன் வளா்ச்சிக்கான தடை போன்ற பாதிப்புகளைக் களையவதற்கு திறன் சாா்ந்த மீன்வள மேலாண்மை, தொழில்நுட்பப் பயன்பாடு, மீன்பிடி ஒழுங்குமுறை, கடல் சூழல் பாதுகாப்பு ஆகியவை அவசியம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

அறிவியல் அடிப்படையிலான மீன்பிடி நிா்வாகம், தொழில்நுட்பக் கண்காணிப்பு, மீனவா்கள் பங்கேற்பு, விதிகளை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவை மீன் வளத்தை மேம்படுத்த உதவும்.

X
Dinamani
www.dinamani.com