
கடந்த 2023-ஆம் ஆண்டு "ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2023' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில், பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி உட்பட கூடுதல் கல்வியைப் பெற வேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.
மேலும், ஆண் குழந்தைகளின் பெற்றோர் 82 சதவீதம் பேர், பெண் குழந்தைகளின் பெற்றோர் 78 சதவீதம் பேர் குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்போ அல்லது அதைவிட கூடுதலாகவோ படிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், தொடக்கக் கல்வியை முடித்த பின்னர் மாணவர்களில் 75 சதவீதம் பேரும், மாணவிகளில் 65 சதவீதம் பேரும் தங்கள் மேற்படிப்பைத் தொடர்வதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஆய்வின் முடிவுகளை தற்போதைய மேல்நிலைக் கல்வி மாணவ, மாணவியர் எண்ணிக்கையை அறியும்போது கண்கூடாகக் காண முடிகிறது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட 2023-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கையை, அண்மையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஆய்வு முடிவுகள் மெய்ப்பிக்கப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதியோர், தேர்ச்சி பெற்றோரில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தேர்வு எழுதிய 7,92,494 பேரில் மாணவர்கள் 3,73,178 பேர், மாணவிகள் 4,19,316 பேர் ஆவர். ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 9.13 லட்சம் (மாணவர்கள் 4.46 லட்சம், மாணவிகள் 4.40 லட்சம்) பேர் பங்கேற்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது. பத்தாம் வகுப்புக்குப் பிறகான மேல்நிலைக் கல்வி, உயர் கல்வி போன்றவற்றில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உயர் கல்வியில் குறிப்பாக இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, இளங்கலை தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்கு அரசால் ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் குறைவு என்பதால் மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. உயர்கல்வியைப் பொருத்தவரை கடந்த பத்தாண்டுகளில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றுகூடக் கூறலாம்.
மேல்நிலைப் பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2023-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் (மாணவர்கள் 4.57 லட்சம், மாணவிகள் 4.52 லட்சம்) மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்கள் தங்கள் தேர்ச்சியைத் தொடர்ந்து மேல்நிலைக் கல்வியில் சேர்க்கை பெற்றிருந்தால் அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மாணவர்களைவிட மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
கல்லூரிகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கல்வி உதவித் தொகை, புதுமைப்பெண், தமிழ் வழியில் பயின்றால் வேலைவாய்ப்பின்போது சலுகை போன்ற அரசின் பல்வேறு திட்டங்களுடன் பெண் குழந்தைகள் கல்வி கற்பது குறித்த விழிப்புணர்வு பெற்றோர் மத்தியில் அதிகரித்து வருவதும் காரணங்களாகும். அதேநேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
பொதுவாகவே, பட்டப் படிப்பு முடித்தவுடன் குறைவான ஊதியம் என்றாலும் பெண்கள் வேலைக்குச் செல்வதுண்டு. உதாரணமாக, பட்டப் படிப்புடன் ஆசிரியர் பட்டம் பயிலும் மாணவிகள் குறைவான ஊதியம் என்றபோதும், ஏதாவதொரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகின்றனர். அதனாலேயே ஆசிரியர் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பிலும் ஸ்டெம் எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கலை பாடப் பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் பெண்களின் நிலை அதிகரித்து வருகிறது. ஆனால், இளைஞர்களைப் பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சியைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் பட்டயப் படிப்புகளில் சேர்க்கை பெறுகின்றனர். கூடுதல் கல்வித் தகுதியைப் பெறவேண்டும், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்பது போன்ற நோக்கங்களைக் கொண்ட மாணவர்களே இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பைத் தொடர்ந்து பயில்கின்றனர்.
மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்போது மாணவிகளைக் காட்டிலும் மாணவர்கள் கூடுதலான உடற்திறனைப் பெறுகின்றனர். அதனால், தேர்வுக்குப் பின்னர் கோடை விடுமுறையின்போது தங்கள் சொந்த கிராமத்திலோ அல்லது நகரங்களிலோ தொழிலைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு வேலைக்குச் செல்கின்றனர். தங்கள் பெற்றோர் சார்ந்த தொழிலில் ஈடுபடுவோரும் உண்டு.
இத்தகையோர் போதிய வருமானம் கிடைக்கும்போதும், எதிர்காலத்தில் இத்தொழிலின் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என எண்ணும் போதும் படிப்பைத் தொடர்வதில்லை. அதனால், விடுமுறைக்குப் பின்னர் தொடர்ந்து பயில்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. நிரந்தரமாக அவர்கள் சார்ந்த தொழிலிலேயே ஈடுபடுகின்றனர்.
உயர்கல்வியில் முதலிடத்தைத் தக்கவைக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், அதில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்துவரும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு மாணவர்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படுவதுதான் தீர்வாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.