நீட் தேர்வுக்குத் தடை தேவையா?

நுழைவுத் தேர்வு என்பது ஏதோ நேற்றோ, இன்றோ வந்தது அல்ல; அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் வரலாறு இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

நுழைவுத் தேர்வு என்பது ஏதோ நேற்றோ, இன்றோ வந்தது அல்ல; அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் வரலாறு இருக்கிறது. இது அரசால் காலங்காலமாக நடத்தப்படும் ஒன்றுதான்.

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன் சென்னை சட்டக் கல்லூரியின் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவர் சேர்க்கைக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அகமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை நிறுவனம், நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் கெட்டிக்கார மாணவர்களின் கனவாகவும், அமெரிக்காவுக்கு செல்லும் கடவுச் சீட்டாகவும் இருக்கிறது.

இதற்கு முன் 1858-ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐ.சி.எஸ். என்ற கடுமையான போட்டித் தேர்வும், சுதந்திர இந்தியாவில் ஆட்சித் துறை, காவல் துறை, வெளியுறவுத் துறை என பலவகை வேலைக்கான நுழைவுத் தேர்வுகளும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) 75 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அதுபோல், மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வுப் பணி ஆணையம் ஆண்டாண்டு காலமாக தேர்வுகளை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு மூலம் பல மாநிலங்களில், பல பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு பெற்ற மாணவர்களை, ஒரே நேர்கோட்டில் பரிசோதித்து திறமையானவர்களை மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புதான். இதில் 15 % வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு உள்ளது.

ஏதோ நுழைவுத் தேர்வை இந்த ஆட்சி கொண்டு வந்தது; அந்த ஆட்சி தடுக்கவில்லை; ஒரே நாளில் அதை நீக்கி விடுவோம்; ஒரு கோடி கையொப்பம் வாங்கினால் நீட் மறைந்துவிடும் என்று பேசுவதெல்லாம் அற்பமான அரசியல். உண்மையில், நுழைவுத் தேர்வுகள் வெளிப்படையாக அரசியலாக்கப்படுகின்றன.

கல்வி, வெகுஜனமயம் ஆக்கப்பட்ட பிறகு, வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தகுதி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடத்தப்படுவதல்ல; அவை வேண்டாதவர்களை அல்லது தகுதி இல்லாதவர்களை வெளியேற்றுவதற்கு நடத்தப்படுபவை.

1,000 மக்களுக்கு ஆஸ்திரியா நாட்டில் 5.5 டாக்டர்களும், ஜெர்மனியில் 4.1 டாக்டர்களும், பிரிட்டன்-பிரான்சில் தலா 3.2 டாக்டர்களும் இருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள டாக்டர்கள் பெரும்பாலானோர் இந்தியா உள்பட ஆசிய கண்டங்களிலிருந்தும், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பட்டம் பெற்று சென்றவர்கள்தான். வெளிநாட்டு மருத்துவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறிவிட்டால், அந்த நாட்டின் சுகாதார அமைப்பு ஒரு நிமிஷத்தில் நிலைகுலைந்து விடும்.

அன்றைய பள்ளி இறுதி ஆண்டு, இன்றைய பிளஸ் 2 தேர்வு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் பத்திரிகையில் அளித்த, அளிக்கும் பேட்டி என்ன தெரியுமா? நாங்கள் மருத்துவராகி சமுதாய சேவை செய்வோம் என்பது. இதை நான் கடந்த 60 ஆண்டுகளாக சிரித்தபடியே படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த 60 ஆண்டு மாணவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால், அவர்களில் எத்தனை பேர் மருத்துவம் படித்துவிட்டு கிராமப்புறத்தில் சேவை செய்கிறார்கள்? பலர் வெளிநாடு சென்று வசதியாய் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.

தேர்வு என்பது உலகம் முழுவதும் பாடத் திட்டத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். மாணவர்கள் புரிந்து படிக்கிறார்களா அல்லது உணர்ந்து படிக்கிறார்களா அல்லது மனனம் மூலம் படிக்கிறார்களா என்பது கேள்விதான். மனனப்படுத்தும் எதுவும் ஆழ்மனதில் பதிந்து விடும் என்பது அனுபவபூர்வ உண்மை. தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாதவர்கள் மனனத்தைக் கேலி செய்கிறார்கள் .

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் சொன்ன வாதம் என்ன தெரியுமா? 75 மதிப்பெண் வாங்கிய பொது தொகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, 50, 60 மதிப்பெண் வாங்கிய பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை தருவது என்ன நியாயம் என்பதுதான். ஆனால், இன்றைய நிலை என்ன?

சுதந்திர இந்தியாவில், அனைவருக்கும் கல்வி என ஏற்பட்ட பிறகு பட்டியலினத்தவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் பொது ஒதுக்கீட்டில்கூட இடங்களை அள்ளிச் செல்கிறார்கள் என்பது தான் எதார்த்தம். இந்தக் கனவை கண்டதற்காகவும், பிற காரணங்களுக்காகவும் 'மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியை' நாம் 'மகாத்மா' என்கிறோம்.

இந்த நுழைவுத் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் எங்குமுள்ள பல பாடத் திட்டங்களுக்கும் உள்ளன. பிற நாடுகளில் கல்வி கற்க

விரும்புவோர் அதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் பொது மொழி எதுவோ, ஆங்கிலமோ, ஜெர்மனியோ, பிரெஞ்சோ, ரஷிய மொழியோ, சீன மொழியோ அதிலும் அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

மருத்துவக் கல்லூரி படிப்பு என்பது வாழ்க்கை லட்சியம் என மாணவர்கள் மூளைச் சலவை செய்து ஏமாற்றப்படுகிறார்கள். அண்மைக்காலங்களில் மருத்துவப் பித்து பிடித்து ரஷியா, சீனா, உக்ரைன், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் பணம் செலவழித்து மருத்துவம் கற்கும் மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தது. இவர்களுடைய பொது அறிவும், மருத்துவ ஆளுமையும் அதிர்ச்சியளித்தன. இவர்களுடைய மதிப்பெண் கேட்டபோது, இவர்களுக்கு இந்தியாவில் அதிகம் விரும்பப்படாத ஆகச்சிறந்த சரித்திர பாடத்தில்கூட இடம் கிடைக்காது.

கல்வி என்பது இந்தியாவில் மட்டும் நடக்கும் வியாபாரம் அல்ல; உலக அளவில் நடக்கும் 'லாஹிரி வஸ்து' தங்க வியாபாரத்தைப்போல், பணம் மாற்றும் மோசடிபோல், கல்வி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. வெளிநாடுகளில் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித்தரும் புரோக்கர்கள் இங்கு பெருத்து, கொழுத்து வருகிறார்கள்.

இந்திய மாணவர்கள் பணம் கொடுத்து சீனாவில் மருத்துவம் படிப்பது,

'துன்பத்தை விலை கொடுத்து வாங்குவதுபோல்' என்று மருத்துவக் கனவில் மிதக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. ஆனால், மத்திய, மாநில அரசுகளுக்குக்கூட அதன் பின்னணி தெரியாமல் போன மர்மம் என்ன ? விலை குறைவாக ஓட்டை சாமான்களை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா, மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தரமும் அதேபோலத்தான் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 351 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், ஆண்டுக்கு சுமார் 59,000 மாணவர்களும், 386 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 55,000 மாணவர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். 2025}ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஒரு லட்சம் மருத்துவ இடங்களுக்கு 22 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல். அதாவது, ஒரு மாணவனைத் தேர்ந்தெடுக்க 21 மாணவர்களை நிராகரிக்க வேண்டும். இதற்கு நுழைவுத் தேர்வைவிட மாற்று வழி என்ன?

நீட் தேர்விலேயே இங்கொன்றும், அங்கொன்றுமாக தவறுகள் தலைதூக்க வெறும் பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் மட்டும் போதுமென்று வைத்தால் மாநிலந்தோறும் ஊழல் நடக்காதா? தேர்வுக்குத் தடை தேவையா? நுழைவுத் தேர்வில் பங்கு பெறவும் குறைந்தபட்ச மதிப்பெண் வைத்தால் (அதாவது 70% த்திற்கு மேல்) மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறையும்.

இந்தியாவில் ஏற்கெனவே 831 நபருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தக் கணக்கில் போலி மருத்துவர்களும், வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களும் சேர்க்கப்படவில்லை. அதுபோல் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி எனப் பல மருத்துவப் பிரிவுகள் உள்ளன.

இதே நிலைமை நீடித்தால் வரன்முறையில்லாமல் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படித்து, வேலைவாய்ப்பில்லாமல் உள்ள பொறியியல் பட்டதாரிகளின் நிலை எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கும் ஏற்படும் என்று யாருக்கும் புரியவில்லை. அதனால், நுழைவுத் தேர்வுகளை அரசியல் காரணங்களுக்காகவும், வியாபார நோக்கங்களுக்காகவும் எதிர்ப்பது சரியல்ல.

நுழைவுத் தேர்வின் தோல்வி பயத்தில் தற்கொலை செய்வதும், அவர்களை அரசியல்வாதிகள் தூக்கிப் பிடிப்பதும் முறையற்ற அரசியல். தற்கொலை என்பது, ஏற்புடையதல்ல; எதற்கும் தீர்வு அல்ல.

தேர்வைச் சந்திக்க துணிச்சல் இல்லாத மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ மருத்துவரான பிறகு ஒரு அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் திடீர் சிக்கலை சந்திக்கும் மன நிலையும், திடமும் இருக்கும் என எப்படி நம்புவது? அவர்கள் தேர்வாகாமல் போனது நியாயம் தான் என்று சொல்லத் தோன்றுகிறது

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பட்டியலின}பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் பொது ஒதுக்கீட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படியிருக்க நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்கு போதுமான காரணம் இல்லை.

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com