நமது தேசத்தின் பாரம்பரியம் அறம் சார்ந்த சிந்தனைக்கும் அறிவு சார்ந்த விவாதத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது. மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகளானாலும், துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற வேதாந்தத் தத்துவங்களுக்கிடையிலான சர்ச்சைகளானாலும் அவை வாத-பிரதிவாதங்களின் மூலமே பொதுத் தளத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
வாதப்போரில் ஈடுபடுகிற இரு தரப்பினரில் எந்தத் தரப்பினர் தங்களுடைய வாதங்களுக்கான வலுவான ஆதாரங்களை முன்வைக்கிறார்களோ, அவர்களுடைய தரப்பே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
இவற்றின் நீட்சியாகவே சென்ற நூற்றாண்டில் பல்வேறு இலக்கியங்களில் நாம் காணும் பாத்திரப் படைப்புகளின் குணாதிசயங்கள் குறித்த வாத-பிரதிவாதங்கள் பட்டிமன்றங்களாகப் பரிணமித்தன.
ஆன்மிகத் தளத்தில் நடைபெற்ற பண்டைய வாத-பிரதிவாதங்களானாலும் சரி, இலக்கியப் படைப்புகள் குறித்து பட்டிமன்றங்கள் ஆனாலும் சரி, அவற்றில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் அவரவர் தரப்பை வலுப்படுத்த முனையும் தர்க்கங்களாக அமைந்தனவே தவிர, எதிர்த்தரப்பினரின் மீதான தனிமனித விமர்சனங்களாக அவை அமைந்ததே இல்லை.
ஆனால், நமக்கு வாய்த்திருக்கும் அரசியல் மேடைகள், நேர்காணல்கள், காணொலிகள், தொலைக்காட்சி விவாதங்கள் ஆகியவவற்றில் அண்மைக்காலமாக தனிமனித விமர்சனங்கள் நாகரிக எல்லைகளை மீறுவதை நம்மால் எளிதாகக் கடந்துசெல்ல முடிவதில்லை என்பதே உண்மை.
தத்தம் கொள்கைகளையும், சாதனைகளையும் எடுத்துக்கூறுவதுடன், தங்களின் எதிர்த்தரப்பினரின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் விமர்சனம் செய்வதுடன் மேற்கண்ட நேர்காணல்களும் விவாதங்களும் நிறுத்திக்கொள்ளும் என்றால், அதை நம்மால் மனதார வரவேற்க இயலும். ஆனால், இங்கு நடைபெறுவது என்னவோ எதிர்மறையாகவே இருக்கிறது.
தங்களால் விரும்பப்படாத எதிர்த்தரப்பைச் சேர்ந்த எவரொருவரையும் நாக்கில் நரம்பில்லாமல் வசைபாடுவது, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் தரக்குறைவாகப் பேசுவது ஆகியவை ஒரு தொடர்நிகழ்வாகவே ஆகிவிட்டிருக்கின்றன. இத்துடன் நிறுத்திக் கொண்டால்கூடப் பரவாயில்லை.
எதிர்த்தரப்பைச் சேர்ந்த பெண்களை, அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் அல்லது வேறு எந்த ஒரு படிநிலையைச் சேர்ந்தவர்கள் எனினும் அவர்களின் உருவம், நடத்தை ஆகியவற்றை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்வது மிகவும் இயல்பான விஷயமாகிவிட்டிருப்பதுதான் நம்மைக் கவலைகொள்ளச் செய்கிறது.
ஒருசில தலைவர்கள் அல்லது பேச்சாளர்கள் ஒலிவாங்கியைக் கண்டுவிட்ட உற்சாகத்தில் சட்டென்று தன்னிலை மறந்து எதிர்த்தரப்பைச் சேர்ந்த பெண்களைப் பற்றி வார்த்தைகளை உதிர்த்து விடுவதுண்டு.
அவ்வாறு உதிர்ப்பவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து பிறக்கும் அந்த நேரத்துச் சிரிப்பொலி அல்லது கரவொலியையே தங்களுடைய கருத்துக்கான ஒப்புதலாகவோ, பாராட்டுதலாகவோ நினைத்துக் கொள்கின்றனர்.
அவ்வாறு உதிர்த்த சொற்களே ஓரிரு நாள்களில் ஊடகங்களில் பூதாகரமாக வெளிப்படத் தவறுவதில்லை. அவ்வாறான சமயங்களில் அவதூறாகப் பேசிய அப்பேச்சாளர்களும் உடனடியாகத் தங்களுடைய கருத்துக்கு மன்னிப்புக் கேட்பதில்லை.
மாறாக, "நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது' என்றோ, "எதிர்த்தரப்பினரால் விஷமத்தனமாகத் திரித்துக் கூறப்பட்டுள்ளது' என்றோ சமாளிக்கவே முனைகின்றனர்.
விஷயம் இன்னும் தீவிரமாவதுடன், தங்கள் தரப்பைச் சார்ந்தவர்களே கடிந்துகொண்ட பிறகுதான், அதுவும் வேண்டா வெறுப்பாக, "எனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஓர் அறிக்கையை வெளியிடுவதன்மூலம் அனைவரையும் அமைதிப்படுத்த முனைவதையும் காண்கின்றோம்.
இது போன்ற இயந்திரத்தனமான வருத்தங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு வேண்டுவதற்கு ஈடாகாது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
அப்போதுதான், எந்த ஓர் ஆண்மகனின் வாயிலிருந்தும் பெண்கள் குறித்த அவதூறுப் பேச்சுகள் வெளிவராது; அப்படியே வெளிவந்தாலும் அரைகுறையான வருத்தங்களுக்குப் பதிலாக மனப்பூர்வமான மன்னிப்புக் கேட்பதற்கு எவ்விதத் தயக்கமும் இருக்காது.
ஆணும் பெண்ணும் சரிசமம் என்பது வெறும் வாய்ப்பேச்சாக நில்லாமல், நமது இந்தியச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்கள் சமபங்கு வகிப்பதற்கான முன்னெடுப்புகள் நீண்டகாலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நமது நாட்டுப் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக மட்டுமின்றி, பல இடங்களில் ஆண்களை விடவும் சிறப்பான முறையில் களமாடி வருகின்றனர்.
அரசுத் துறைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறை, விளையாட்டுத் துறை, வெளிநாட்டுப் பணிகள், கலை-இலக்கியம் என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறப்பாகப் பங்குபெற்றுவருவது கண்கூடு.
ஒரு காலத்தில் ஆண்களால் மட்டுமே இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், ரயில் வண்டிகள், ஏன் விமானங்களைக் கூட தற்காலத்தில் பெண்கள் இயக்கத் தொடங்கி விட்டனர். இந்த சாதனைப் பெண்களெல்லாம் வெறும் பெண் என்ற காரணத்தால் பொதுவெளியில் அவதூறுக்கு உள்ளாவதில்லை.
ஆனால், திரைத் துறை மற்றும் அரசியல் களத்தில் இயங்குகிற பெண்கள் எவ்வளவுதான் சாதனைகளைப் படைத்திருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வியலும், ஆளுமையும் பொதுவெளிகளில் பலராலும் தரம்தாழ்ந்து விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் உள்ளாவது அண்மைக்காலமாக அதிகரித்துக்கொண்டே வருவது ஆரோக்கியமான போக்கு ஆகாது.
அப்படிப்பட்ட பேச்சுகள் இனியும் தொடரும் என்றால், நாமெல்லாம் ஒரு நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு அருகதையற்றவர்கள் ஆகிவிடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உறவுப்பாலம்

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?

தேர்தலில் பெண்களை வேட்பாளராக்க என்னதான் பிரச்னை?

தோ்தல் விதிமுறை மீறும் கனிமவள வாகனங்கள்: ஆட்சியரிடம் புகாா்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


