புத்தகம் என்பது என்ன? புத்தகம் என்பது புதிய உலகங்களுக்கான நுழைவாயில்; அறிவின் கருவூலம்; மனித கற்பனையின் உச்சம் என்றும் கூறலாம். இது கருத்துகளின் தொகுப்பான கட்டுரை கற்பனையின் ஊற்றான கதைகள் மற்றும் தகவல்களின் உருவகமாகும்.
புத்தகங்கள் புனைகதை அல்லது புனைகதை அல்லாத படைப்புகள், கவிதை அல்லது உரைநடை, பாடப் புத்தகங்கள் அல்லது சுயசரிதைகள் மற்றும் வடிவங்கள் தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து உருவாகின்றன.
புத்தகங்கள் நமது பண்பாட்டின் அடிப்படை அம்சமாகும். கடந்த காலத்துடன் அவை நம்மை இணைக்கின்றன. அத்துடன் எதிர்காலம் குறித்த நுண்ணறிவை வழங்குகின்றன. ஆர்வத்தைத் தூண்டி, படைப்பாற்றலைப் பெருக்கி, எண்ணற்ற வழிகளில் நம் வாழ்க்கையை வளப்படுத்த வந்தவையாகும்.
மனித நாகரிகத்தை வடிவமைப்பதில் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் கல்வி, ஊக்கம், மகிழ்விக்கும் திறன் ஆகியவற்றுக்காக புத்தகங்கள் மதிக்கப்பட வேண்டும்.
இந்த காலத்தால் அழியாத கருவூலங்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவு, கதைகள் மற்றும் கருத்துகளை வழங்குவதற்கான ஒரு வழிகாட்டியாகச் செயல்படுகின்றன. புத்தகங்கள் மூலம் நமது சிந்தனைத் திறனை மேம்படுத்தலாம். நமது சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்தலாம். நமது நடைமுறை வாழ்க்கையிலிருந்து பிரித்து ஆராயப்படாத உலகங்களுக்கு அழைத்துச் செல்லலாம். பல்வேறு நாகரிகம் மற்றும் பண்பாட்டை அனுபவிக்க வாய்ப்பளிக்கின்றன.
அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத் தன்மை போன்றவற்றின் மூலம் மக்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடைபெற்ற யுனெஸ்கோவின் 28-ஆவது மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யுனெஸ்கோவுடன் இணைந்து இந்த நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புகளும் பங்களிப்புச் செய்கின்றன.
நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு, அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம், உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் (ஏப்.23) தேர்வு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616-ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டிலோவேகா ஆகியோர் காலமானார்கள். இதே நாள் சில சிறந்த எழுத்தாளர்களின் பிறந்த நாளாகவும் அமைகிறது.
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உருவானது. இந்நாளில் ஆண்களும், பெண்களும் புத்தகத்தையும் ரோஜா மலரையும் பரிமாறிக் கொண்டார்கள். "உலக புத்தக தினம்' என்று ஒரு நாளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
புத்தகங்கள் - நெருக்கடியான காலங்களில் நமக்கு ஆறுதலைத் தருகின்றன. நமது வாழ்விலும், சமுதாயத்திலும் அதன் செல்வாக்கை அங்கீகரிப்பதற்காகவே நாம் புத்தகங்களைக் கொண்டாடுகிறோம். மேலும், அவை நம்மையும், மற்றவர்களையும் உலகத்தை ரசிக்க ஊக்கப்படுத்துகின்றன.
உலக மக்களால் கொண்டாடப்படும் புத்தக தினம், புத்தகங்களைப் பண்பாட்டு வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகக் காட்டுகிறது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. அனைவரும் புத்தகங்களைத் தேட வேண்டும் என்று வாதிடுகிறது. 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இப்போதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. புத்தக தினம் கொண்டாடுவதற்குக் காரணமான மூன்று தலைசிறந்த மேதைகளை நினைவுபடுத்துகிறது. ஆங்கில நாடகாசிரியரும், கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்துக்கான அவரது நீடித்த பங்களிப்பு நினைவுகூரப்படுகிறது.
அதே சமயம் ஸ்பானிய எழுத்தாளர் செர்வாண்டஸ் தனது தலைசிறந்த படைப்பான "டான் குயிக்கோட்'க்காக புகழ் பெற்றவர். அத்துடன் பெருவியன் எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியருமான கார்சிலாசோ டிலா வேகா அமெரிக்கவின் இலக்கிய வரலாற்றில் ஒரு முன்னோடியாக அங்கீகரிக்கப்படுகிறார்.
புத்தக ஆர்வலர்கள் ஒன்றுகூடி வாசிப்பின் மகிழ்ச்சியையும், ஆற்றலையும் கொண்டாடவும், நமது உலகத்தை வடிவமைப்பதில் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கவும் இந்த ஒரு நாள் அடையாளப்படுத்துகிறது.
உலகப் புத்தகத் தலைநகரம் என்பது நூல்கள் மற்றும் வாசித்தல் துறைகளில் ஒரு நகரத்தின் செயல்பாடுகளின் தரம் மற்றும் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அந்த நகரத்துக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் 1967-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஆன்சு கிறிஸ்டியன் ஆண்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் என்னும் பன்னாட்டு அமைப்பு இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல், குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் என்னும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
"இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்' என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.
அந்தக் குழந்தைகளை முழு மனிதர்களாக மாற்றும் ஆற்றல் புத்தகங்களுக்கே இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்த நாள் பரிசாக புத்தகங்களையே வாங்கித் தரவேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பொருட் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட அறிவுச் செல்வத்தையே சேர்த்து வைக்க வேண்டும் என்றே அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொது அறிவு நூல்கள், அறிவியல் நூல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், கட்டுரை நூல்கள் எனப் பலவிதமான இலக்கிய நூல்கள், திறனாய்வு, மருத்துவம், சமையல், உடல்நலன் குறித்த புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான நூல்களைத் தன்னகத்தே கொண்டிருந்தும் கேட்பாரற்ற சிறுமி போல தெருவோரம் கவனிப்பாரற்று நூலகங்கள் இருக்கலாமா?
"உன் நண்பனைச் சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன்' என்றார் சாக்ரடீஸ். ஜேம்ஸ் ஆலன் என்னும் அறிஞர், "நீ எந்தப் புத்தகத்தைப் படிக்கிறாய், படித்திருக்கிறாய் என்பதைச் சொல். நீ யாரென்பதைச் சொல்கிறேன்' என்றார்.
"ஒரு புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம்' என்று புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்த ஐசக் நியூட்டன் கூறினார். "ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத் தருபவனே மனிதகுலத்தின் உண்மையான விடிவெள்ளி' என்றார் அறிஞர் ஜான் மில்டன்.
இவ்வாறு அறிவுலகம் போற்றும் நூலகத்தைப் போற்றி வளர்க்க வேண்டியது மனித சமுதாயத்தின் கடமையாகும். கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும். எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் மறையும் வரை கல்லாமல், இருப்பது எதனால்? எனக் குறள் கேட்கிறது.
யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
(குறள் 397)
புத்தகக் கண்காட்சி, எழுத்தாளர் சந்திப்புகள் என வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் பல நாள்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மற்றும் நூலகங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் தள்ளுபடி விலையில் வழங்குகின்றனர்.
புத்தகக் கண்காட்சிகள் வாசிப்பை ஊக்கப்படுத்தவும், புத்தகம் வாங்குவதை ஊக்கப்படுத்தவும் சிறந்த வழியாகும். இங்கே வாசகர்களுக்குத் தள்ளுபடி விலையில் சிறந்த படைப்பாளர்களின் படைப்புகள் கிடைக்கின்றன. அதுவும் ஒரே இடத்தில் பல்வேறு பதிப்பக நூல்களைத் தேடி எடுக்க அரிய வாய்ப்பாகும்.
"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்' என மகாத்மா காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "நூலகம் கட்டுவேன்' என்றாராம்.
மனித சமுதாயத்தின் மனவளத்தைப் பெருக்க, சமூகத்தை மேம்படுத்த எது சரியான முதலீடு என்பதை உணர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் இவை.
மலர்ந்த பூக்களில்தான் நறுமணம் வீசும்; ஓடும் நீரோடைகள் தூய்மையாக இருக்கும்; எரிகிற விளக்குதான் இன்னொரு விளக்கை ஏற்ற முடியும்; அறிவார்ந்த புத்தகங்களை வாசிக்கிறவனே அறிஞனாக முடியும். எனவே, உலகப் புத்தக தினத்தைக் கொண்டாடுவோம்.
இன்று (ஏப்ரல் 23) உலக புத்தக தினம்
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் சாா்பில் 10 புத்தகங்கள் வெளியீடு

இன்னும் எத்தனை முறை?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


