/

'ககன்யான்' எனும் அறிவியல் காவியம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' என்ற மிகப் பெரிய கனவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

News image

ககன்யான்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 5:54 am IST

முனைவர் இளங்கோ கட்டிமுத்து

'விண்வெளியை வெல்வது என்பது அறிவியலை மட்டுமல்ல, ஒரு நாட்டின் தன்னம்பிக்கையையும் உயர்த்துவதாகும்' என்று கூறலாம். இந்தியாவின் விண்வெளிப் பயணம், 1975-இல் அதன் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணில் செலுத்தியதன்மூலம் தொடங்கியது.

உலக நாடுகள் விண்வெளித் துறையில் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், இந்தியாவும் தனது விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா-எல் 1 போன்ற வெற்றிகரமான திட்டங்களின் தொடர்ச்சியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' என்ற மிகப் பெரிய கனவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

'ககன்யான்' என்பது வெறும் விண்கலம் அல்ல; இந்தியாவின் அறிவியல் திறன், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தேசிய பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு மாபெரும் முயற்சியாகும். இந்தத் திட்டம் வெற்றி அடைந்த பிறகு, அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக தனது சொந்த தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா உருவாகும்.

'ககன்யான்' என்ற சொல்லில் 'ககன்' என்பது வானம் அல்லது விண்வெளி என்றும், 'யான்' என்பது வாகனம் என்றும் பொருள்படும். அதாவது, 'விண்வெளிப் பயண வாகனம்' என்பதே இதன் பொருள். எனவே 'வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம்' என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்திய விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் உள்ள தாழ்வான பூமி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அங்கு சில நாள்கள் தங்கவைத்து, பின்னர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பச் செய்வதாகும். இதை 2027-ஆம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் 2035-க்குள் பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்துக்கு அடித்தளமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மண்ணில் இருந்து, இந்திய விண்கலம் மூலம், 3 இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, 3 நாள்கள் பூமிக்கு வெளியே சுற்றவிட்டு, மீண்டும் அவர்களைப் பாதுகாப்பாகப் பூமிக்குக் கொண்டுவருவதே இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம், 2018-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்ற இலக்குடன் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் மனித விண்வெளிப் பயணத் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்; விண்வெளியில் மனிதர்கள் வாழும் சூழ்நிலைகளை ஆராய்தல்; எதிர்கால விண்வெளி நிலையம் மற்றும் சந்திரன் தொடர்பான திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தல்; இந்திய இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்த்தல் மற்றும் நாட்டின் தொழில்நுட்பத் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டுதல் ஆகியவை திட்டத்தின் நோக்கங்களாகும்.

மனிதர்களை ஏற்றிச் செல்லும் ககன்யான் விண்கலம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி. இந்தப் பகுதியில் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமர்ந்து பயணம் செய்வார்கள். இதில் உயிர் ஆதரவு அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள், அவசரகால பாதுகாப்பு வசதிகள் ஆகியவை உள்ளன. மின்சாரம், உந்துவிசை, கட்டுப்பாடு போன்ற வசதிகளை சேவைப் பகுதி வழங்குகிறது.

ககன்யான் திட்டத்துக்காக இஸ்ரோ தனது சக்திவாய்ந்த எல்.வி.எம்.-3 ராக்கெட்டை பயன்படுத்துகிறது. இது மனிதர்களை ஏற்றிச் செல்லும் வகையில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி எம்கே-3 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான, மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஏவுகணை வாகனம். இதனால், விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

விண்வெளியில் காற்றோ, தண்ணீரோ இயற்கையாக கிடைக்காது. எனவே, விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஆக்சிஜன், வெப்பநிலை கட்டுப்பாடு, குடிநீர் மற்றும் கழிவுகள் மேலாண்மை போன்றவற்றை வழங்கும் சிறப்பு உயிர் ஆதரவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏவுதளத்தில் அல்லது பறப்பின்போது, ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக ஒட்டுமொத்த விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் தனிக்கலம் பிரிந்து பாதுகாப்பாக வெளியேற்றும் 'குழுவினர் தப்பிக்கும் அமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளது. இது ககன்யான் திட்டத்தின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.

ககன்யான் திட்டத்துக்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் விண்வெளி வீரர்களாகப் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் விண்வெளிச் சூழல் பயிற்சி, எடையற்ற நிலை அனுபவம், அவசரகால மேலாண்மை, விண்கல இயக்கம், உடல் மற்றும் மனநிலைத் தயாரிப்பு ஆகியவை அடங்கும். இந்தப் பயிற்சிகளில் சில ரஷியாவின் விண்வெளி மையங்களிலும் வழங்கப்பட்டன.

மனிதர்களை நேரடியாக அனுப்புவதற்கு முன்பாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் அவசரகாலத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக மீட்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது.

மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு மனிதர் இல்லாத பல சோதனைப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை விண்கலத்தின் செயல்திறன், பாதுகாப்பை மதிப்பீடு செய்ய உதவுகின்றன. முதல் மனித உருவத் திட்டத்துக்கு முன்பு, இரண்டு ஆளில்லா திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள ககன்யான்ஜி-1 பயணத்தில் எல்எம்வி-3 ராக்கெட் மூலம் வியோமித்ரா என்ற பெண் மனித உருவ ரோபோவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. விண்கலத்தின் எடை, கதிரியக்கம், வெப்பநிலை, இயங்குநிலை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், ஆபத்து காலத்தில் வீரர்களுக்கு உதவி செய்யும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின் மூலமாக பிரசாந்த் பாலகிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், எஸ். சுக்லா ஆகிய இந்திய வீரர்கள் விண்வெளிக்குச் செல்ல உள்ளனர். இவர்களுக்கு பெங்களூரிலும், வெளிநாடுகளிலும் பயிற்சியளிக்கப்படுகிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது செயற்கைக்கோள் ஏவுதலைவிட பல மடங்கு கடினமானது. விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு முதன்மையானதாகும். எனவே, ஒவ்வொரு கருவியும் பலமுறை சோதிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். இருந்தாலும், இது இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கான முதலீடாகக் கருதப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும். அவை மருத்துவம், தகவல் தொடர்பு, பாதுகாப்புத் துறை போன்ற பல துறைகளுக்கும் பலனளிக்கும். இந்தியா உலகின் முன்னணி விண்வெளி நாடுகளின் வரிசையில் மேலும் உயர்ந்த இடத்தைப் பெறும்.

விண்வெளித் தொழில்நுட்பம் தொடர்பான தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அறிவியல், பொறியியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ககன்யான் திட்டம் வெறும் ஒரு தனித் திட்டம் அல்ல. இது இந்தியாவின் எதிர்கால விண்வெளிக் கனவுகளுக்கான அடித்தளமாகும். மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக பிரபஞ்சத்தை ஆராய்வதற்கும், உலகளாவிய அறிவுக்குப் பங்களிப்பதற்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

இந்திய விண்வெளி நிலையம் அமைத்தல்; சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புதல்; ஆழ்விண்வெளி ஆய்வுகள்; சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகள் போன்ற திட்டங்களை இந்தியா மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ககன்யான் திட்டத்தின் கீழ் முதல் மனிதர்கள் இல்லாத பயணம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிகழ வாய்ப்புள்ளது என்றும், மேலும், மனிதர்களைக் கொண்ட முதல் பயணம் 2027-இல் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-4 திட்டத்தின் மூலம் அடுத்ததாக நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து மாதிரிகள் கொண்டுவரப்பட்டு, ஆராய்ச்சிகள் நடத்தும் திட்டம் 2028-ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளித் துறைக்கான உலகளாவிய போட்டியில் இனி பிற நாடுகளைப் பின்தொடராது; மாறாக, அவர்களை வழிநடத்துவதாக இந்தியா உருவெடுத்துள்ளது.

'விண்வெளியை நோக்கி பறக்கும் ஒவ்வொரு ராக்கெட்டும் ஒரு நாட்டின் கனவுகளைத் தாங்கிச் செல்கிறது' என்று கூறலாம். அந்த வகையில், ககன்யான் திட்டம் இந்தியாவின் அறிவியல் கனவுகள், தொழில்நுட்ப திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தின் அடையாளமாக விளங்குகிறது.

இந்த ககன்யான் திட்டம் வெற்றி பெறும் நாள், அது இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு பொற்கால நாளாக அமையும்.

ககன்யான் என்பது ஒரு விண்கலம் அல்ல; அது இந்தியாவின் எதிர்காலத்தை விண்வெளியில் எழுதும் அறிவியல் காவியம்.

கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.