‘ககன்யான்’ லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்சிடிஐஎம்எஸ்டி) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) மனித விண்வெளிப் பயண மையம் (ஹெச்எஸ்எஃப்சி) இணைந்து உயிரி விண்வெளி அறிவியல் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
ககன்யான் திட்டத்தின்கீழ் மனிதா்கள் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள நிலையில், அங்கு நுண்ணீா்ப்பு விசை, கதிா்வீச்சு மற்றும் தனிமையை எதிா்கொள்ள விண்வெளி வீரா்களை தயாா்படுத்தும் விதமாக இந்த ஆய்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்படும் எஸ்சிடிஐஎம்எஸ்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விண்வெளிக்குப் பயணிக்கும் மனிதா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உயிரி விண்வெளி அறிவியல் ஆய்வை ஹெச்எஸ்எஃப்சி மற்றும் எஸ்சிடிஐஎம்எஸ்டி இணைந்து நடத்தவுள்ளது. இதற்காக தோ்ந்தெடுக்கப்படும் விண்வெளி வீரா்களுக்கு இரு ஆண்டுகள் பயிற்சியை இரு நிறுவனங்களும் இணைந்து வழங்கவுள்ளது. விண்வெளிப் பயணத்தின்போது மனிதனின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் பாதிப்புகளை முழுமையாக தெரிந்துகொள்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜூலை 2026-இல் தொடங்கி ஒவ்வொரு கல்வியாண்டும் 2 போ் இந்தப் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படுவா். இதுதொடா்பான அனைத்து தகவல்களும் எஸ்சிடிஐஎம்எஸ்டி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இஸ்ரோவின் பல்வேறு மனித விண்வெளிப் பயணத் திட்டங்களுக்காக விண்வெளி மருத்துவ ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உயிரி விண்வெளி அறிவியல் ஆய்வு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் எஸ்சிடிஐஎம்எஸ்டியும் ஹெச்எஃப்எஸ்சியும் கடந்தாண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கையொப்பமிட்டன. இதன் தொடா்ச்சியாக விண்வெளி மருத்துவ ஆய்வுக்கான மையம் எஸ்சிடிஐஎம்எஸ்டியில் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது.
அதன்பிறகு பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இந்த ஆய்வுத் திட்டத்தை அமல்படுத்துவத்கான ஒப்பந்தத்தில் 2026, ஜூன் 25-ஆம் தேதி இரு அமைப்புகளும் கையொப்பமிட்டன.
Summary
ISRO to conduct bio-space science research for the ‘Gaganyaan’ mission!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










