கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மேக்கேதாட்டும் விவசாயிகளின் அச்சமும்...

தண்ணீர் பற்றாக்குறையுடன் செயல்படும்போது வெள்ள காலங்களில் கிடைக்கிற உபரி நீரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியதைப் பற்றி...

News image

மேக்கேதாட்டு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 3:37 am IST

வறட்சியும் செழுமையும் இயற்கையின் இரு கண்கள். இதில் எது வேண்டும் என தீர்மானிப்பது இயலாத காரியம். அது போலவே மனிதர்களும் இவை இரண்டையும் அனுபவித்துச் செல்லவேண்டியது இவ்வுலக நியதியாகும். மேக்கேதாட்டு அணை கட்டவேண்டியது காலத்தின் கட்டாயம். அதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டியது தமிழகத்துக்கு மிகவும் அவசியம். காவிரிப் படுகையில் கர்நாடகத்தின் முக்கிய பருவமழைக் காலம் ஜூலை, ஆகஸ்ட்.

ஆனால், கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது எனக் கூறிவிட்டு, ஒரே நாளில் அணைகள் நிரம்பி வருகின்றன. எனவே, ஆகஸ்ட் முதல் நாளில் 25,000 கன அடி நீர் எப்படி திறந்துவிட முடியும்? இது உண்மையை மறைக்கும் செயல்; உண்மை உறங்காது. கர்நாடகம் எப்போதெல்லாம் காவிரியில் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காவிரி நீர் மேலாண்மை ஆணைய பரிந்துரை மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை சிறிதும் மதிக்காமல் கர்நாடக அணைகளில் இருக்கும் நீர் முழுவதும் தங்களுக்கே உரியது என்ற முரட்டுப்போக்கில் செயல்படுவதே தமிழகம் கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு வழிவிடாமல் தீவிரமாகத் தடுப்பதற்கான காரணமாகும்.

இதை கர்நாடகம் புரிந்துகொண்டு செயல்பட்டால் அணை கட்டுவதற்கு வழி ஏற்படுவதுடன், அனைத்து காவிரிப் படுகை மாநிலங்களும் சிறப்பாகப் பயன் பெறும். காவிரியின் நீர்ப்பகிர்வில் இயல்பான, பற்றாக்குறை இல்லாத நிலை; நீர்ப் பற்றாக்குறை மிகுந்த நிலை என இரு நிலைமைகள் உள்ளன. முதல் நிலையாவது காவிரியின் கொள்ளிடத்தில் 1924 முதல் 1973 வரையிலான 50 ஆண்டுகள் கிடைக்கப்பெற்ற நீரின் சராசரி அளவான 740 டி.எம்.சி. ஆகும். இதுவே அனைத்து காவிரிப் படுகை மாநிலங்களுக்குமாக கணக்கிடப்பட வேண்டிய மொத்த இயல்பான அளவு ஆகும். இரண்டாவதான பற்றாக்குறை நிலை என்பது, 740 டி.எம்.சி.க்கும் குறைவாக அனைத்து மாநில (தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம்) அணைகளிலும் உள்ள நீரின் அளவு மற்றும் மழையின் அளவைப் பொறுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் கணக்கிடப்படுவதாகும்.

மாதாந்திர நீரளவு கணக்கீட்டின்படி இப்பற்றாக்குறை நிலவரம் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் உறுதிப்படுத்தப்படும். அதுவரை கர்நாடகம் தன் அணைகளிலிருந்து 2018-இன் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டியது அதன் கடமையாகும்.

கர்நாடகம் இயல்பான ஆண்டில் 177.25 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மாதவாரியாக ஜூன் 10 டி.எம்.சி.; ஜூலை 34; ஆகஸ்ட் 50; செப்டம்பர் 40; அக்டோபர் 22; நவம்பர் 15; டிசம்பர் 3; ஜனவரி 2.25; மே மாதத்துக்கு 1 டி.எம்.சி. வீதம் 177.25 டி.எம்.சி. வழங்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகளில் சிறிதளவு பற்றாக்குறை ஏற்பட்டாலே, கர்நாடகம் தங்கள் அணைகளில் உள்ள நீர் முழுவதும் தங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என முரண்டு பிடிப்பதால் தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாகவே மேக்கேதாட்டு அணையைக் கட்ட அனுமதித்தால் அதிலிருந்தும் கர்நாடகம் தண்ணீரைத் தராமல் இன்னும் அதிக பிரச்னையை உருவாக்கும் என்ற சந்தேகமே முக்கியமானதாக உள்ளது. தமிழகத்துக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களே குறுவை, சம்பா பயிர்களின் சாகுபடியை நிர்ணயிக்கின்றன. ஜூன்-ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை எனில், குறுவை சாகுபடி செய்ய இயலாது. நிகழாண்டும் இந்நிலையே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 1994-95 முதல் 2023-24 வரை 11 முறை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் கர்நாடகம் விடவேண்டிய 123.14 டி.எம்.சி.க்குப் பதிலாக 100 டி.எம்.சி.க்கும் குறைவாகவே தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. இது சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையான பற்றாக்குறை பிரச்னை. கடந்த 2023-24-இல் கர்நாடகம் தமிழகத்துக்கு ஜூன்-செப்டம்பரில் வழங்கிய நீரின் அளவு 78.8 டி.எம்.சி. மட்டுமே; ஆனால், கொடுக்க வேண்டியது 123.14 டி.எம்.சி. கடந்த 2002-03 முதல் 2023-24 வரையிலான 21 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது.

இந்த ஆண்டுகளில் கர்நாடகம் ஆண்டுதோறும் மொத்தம் வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி.க்குப் பதிலாக வழங்கிய அளவானது 2002-03- 110 டி.எம்.சி.; 2003-04 -130; 2012-13-135; 2013-14-140; 2016-17 -120; 2018-19 -150; 2023-24 - 97 டி.எம்.சி. மாநிலங்களுக்கு இடையிலான இந்தத் தண்ணீர் பற்றாக்குறை பகிர்வு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் அஞ்சல் துறை, ரயில்வேயை எப்படி மத்திய அரசு செயல்படுத்துகிறதோ அதேபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாயும் ஆறுகளில் உள்ள அணைகளின் பராமரிப்பை முழுமையாக மத்திய அரசே ஏற்று நீர் மேலாண்மை செய்வதே சிறந்த வழியாகும்.

காவிரி நீர்ப்பற்றாக்குறை தவிர கர்நாடகமும், தமிழகமும் கடந்த 65 ஆண்டுகளில் அதன் கால்வாய் பாசனப் பரப்பை எப்படி அதிகரித்து வந்துள்ளன என அறிவது மிக முக்கியமானதாகும். 1960-61-இல் 2.8 லட்சம் ஹெக்டேராக இருந்த கர்நாடகத்தின் கால்வாய் பாசனப் பரப்பு முறையே 1981-82-இல் 6.57 லட்சம்; 1997-98-இல் 9.50; 2022-23-இல் 9.62 லட்சம் ஹெக்டேராக தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இதே காலங்களில் முறையே 8.95; 8.40; 8.47 மற்றும் 6.45 லட்சம் ஹெக்டேராக குறைந்து வந்துள்ளது. இதன்படி பார்த்தால் தமிழகத்தை ஆட்சி செய்த முந்தைய இரு திராவிட

அரசுகள் கடந்த 60 ஆண்டுகளாக கால்வாய் பாசனம் பெருக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதை இந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், அனைத்து இயல்பான ஆண்டுகளிலும் அதிக அளவிலான நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, 16.7.2022-இல் 42-ஆவது முறையாக மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. அப்போது, அணைக்கு வரும் 1.23 லட்சம் கன அடி தண்ணீர் முழுவதும் உபரி நீராக கடலுக்கு திறந்து விடப்பட்டது! விவசாயிகள் காவிரிப் பெருவெள்ளம் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், அந்த நீர் கடலுக்குச் சென்றது.

காவிரியில் அதிகப்படியாக வெள்ளம் வரும்போதெல்லாம் இதே நிலையே நீடிக்கிறது. தமிழக அரசும், விவசாயிகளும் அதிகப்படியான காவிரி நீரைப் பயன்படுத்திக்கொள்ள கடந்த 60 ஆண்டுகளாக எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

அது குறித்து கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. விவசாயிகளின் முழுக் கவனமும் பற்றாக்குறை ஆண்டுகளில் கர்நாடகத்தை வசைபாடுவதும், போராட்டங்கள் நடத்துவதும், மாநில அரசு இந்தப் பிரச்னையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதுமாகவே காலத்தைக் கழித்து வருகிறது.

இதை விடுத்து, காவிரியில் உபரி நீர் வரும் ஒவ்வோர் ஆண்டிலும் காவிரியின் பாசனப் பரப்பை மேலும் எப்படி அதிகரிப்பது? அதற்கான வழிமுறைகளைக் காண என்ன திட்டங்களை செயல்படுத்துவது? காவிரியில் தடுப்பணைகளைக் கட்டி வறண்ட பகுதிகளுக்கு நீரைத் திருப்பிவிடுவது எப்படி? என்பன போன்ற எந்த முன்னேற்றத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், கர்நாடகம் இவை அனைத்தையும் தொடர்ந்து செய்து வருவதால் கடந்த 60 ஆண்டுகளில் அதன் கால்வாய் பாசனப் பரப்பு 2.8 லட்சம் ஹெக்டேரிலிருந்து 9.6 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இது 8.95 லட்சம் ஹெக்டேரிலிருந்து 6.45 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் வேளாண்மையின் பங்கு மிக முக்கியமானதாகும். ஆனால், வேளாண்மையை தமிழகம் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதால் கிராமப்புற இளைஞர்கள் நகரங்களில் குடியேறி வருகின்றனர். கிராமப்புற விவசாயம் தண்ணீர் பற்றாக்குறை மட்டுமல்லாமல், விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்காமல் பெரும்பாலானோர் விவசாயத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு வருகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டு, தமிழகத்தில் 1960-களில் 60 லட்சம் ஹெக்டேராக இருந்த நிகர சாகுபடிப் பரப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து, தற்போது 2010-களில் 47 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இதேபோல், தமிழக நிகர நீர்ப்பாசனப் பரப்பும் 1970-களில் 27 லட்சம் ஹெக்டேராக இருந்தது, 2010-களில் கர்நாடகத்தைப்போல் அதிகரிக்காமல் 26.9 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

தமிழகத்தின் இந்தப் புள்ளிவிவரங்கள் மிக விரிவாகத் தெரிவிப்பது வேளாண்மை பல்வேறு வகைகளில் கைவிடப்பட்டு வருகிறது என்பதை இந்தப் புதிய அரசாவது உணர்ந்து போர்க்கால அடிப்படையில் வேளாண்மையை மேம்படுத்த முழுமையாக நடவடிக்கை எடுத்து தமிழக 'வேளாண்மையின் பொற்காலம்' என்ற பெயரை எடுக்க முயற்சிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும், இரு மாநிலங்களும் தண்ணீர் பற்றாக்குறையுடன் செயல்படும்போது வெள்ள காலங்களில் கிடைக்கிற உபரி நீரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது தமிழகத்தின் முக்கியத் தேவையாகும்.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.