

உழைப்பு மனித நாகரிகத்தின் அடித்தளம். மனிதன் கல்லைச் செதுக்கி கருவியாக்கிய நாளிலிருந்தே, அவன் உழைப்பின் பயன் சமூகத்தின் முன்னேற்றமாக மாறியது. ஆனால், அந்த உழைப்பாளியின் வாழ்வு, பாதுகாப்பு, மரியாதை ஆகியவை நீண்ட காலம் வரை புறக்கணிக்கப்பட்டே வந்தன. அதிகாரமும் மூலதனமும் சேரும் இடங்களில், உழைப்பு மலிவான பொருளாகவும், உழைப்பாளி மாற்றக்கூடிய கருவியாகவும் பார்க்கப்பட்டான். இந்த அநீதிக்கெதிரான உலகளாவிய விழிப்புணர்வே தொழிலாளர் நலன் என்ற கருத்தை உருவாக்கியது.
உலக அளவில் தொழிலாளர் நலனுக்கான முதல் பெரிய அசைவு, தொழில் துறைப் புரட்சியுடன் தொடங்கியது. பிரிட்டனில் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்சாலைகள் பெருகியபோது, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரும் தினமும் 14, 16 மணி நேரம் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய வேண்டிய நிலை உருவானது.
குழந்தைகள் இயந்திரங்களில் சிக்கி உயிரிழந்தனர்; தொழிலாளர்கள் விபத்துகளிலும் நோய்களிலும் சிதைந்தார்கள். இதன் எதிரொலியாகவே தொழிற்சாலை சட்டங்கள் போன்றவை உருவாயின. வேலை நேரக் கட்டுப்பாடு, குழந்தைத்தொழிலாளர் தடுப்பு, பாதுகாப்பு விதிகள் ஆகியவை மெதுவாக சட்ட வடிவமும் பெறத் தொடங்கின.
1919-இல் உருவான சர்வதேச தொழிலாளர் அமைப்பு உழைப்பாளியின் நலன், உலக அமைதியின் அடித்தளம் என்ற தத்துவத்தை முன்வைத்தது. குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பான வேலைநிலைகள், சங்கம் அமைப்பதற்கான உரிமை, சமூகப் பாதுகாப்பு ஆகியவை உலகளாவிய இலக்குகளாக மாறின.
மக்கள் நலன் சார்ந்த அரசுகள் உருவான நாடுகளில், தொழிலாளர் நலன் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது அல்ல; அது நீடித்த வளர்ச்சியின் முன்நிபந்தனை என்ற புரிதல் வேரூன்றியது. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. ஆனால், இந்தியாவின் தொழிலாளர் வரலாறு காலனித்துவ ஆட்சியின் இருண்ட நிழல்களோடு பின்னிப் பிணைந்திருந்தது.
1926-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தொழிற்சங்கங்கள் சட்டம், தொழிலாளர் நலன் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை. இந்தச் சட்டம் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது. சங்கம் அமைப்பது குற்றம் அல்ல; அது ஒரு உரிமை என்ற கருத்து முதல்முறையாக சட்டமானது.
தொழிலாளர்களின் குரல் சட்ட ரீதியாகக் கேட்கப்படத் தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசில் தொழிலாளர் நலன் புதிய ஊக்கம் பெற்றது. குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சாலைச் சட்டம், தொழிலாளர் நஷ்டஈடு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், நல வாரியங்கள் - இவை அனைத்தும் உழைப்பாளியை மனிதனாகப் பார்க்கும் பார்வையின் விளைவுகள்.
இந்தியாவின் நான்கு தொழிலாளர் சட்டக் கோட்பாடுகள் குறித்து ஆராய்வோம். இது காலத்தின் தேவையான ஒரு பெரிய கட்டமைப்பு சீர்திருத்தமாகும். 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, எளிமையான, நவீனமான சட்ட அமைப்பை உருவாக்குவதே அதன் நோக்கம். ஆனால், இந்தச் சீர்திருத்தத்தின் உண்மையான வெற்றி அல்லது தோல்வி, சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதல்ல; மாநிலங்கள் உருவாக்கும் விதிமுறைகள் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில்தான் உள்ளது.
மாநிலங்கள் தங்களின் விதிமுறைகளை இறுதிப்படுத்தும் அல்லது திருத்தும் இந்தக் கட்டத்தில், ஒரு அடிப்படை நெறி எப்போதும் பேணப்பட வேண்டும்; தொழிலாளர் சீர்திருத்தங்கள், தொழிலாளர் நலனைக் குறைக்கும் வகையில் இருக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சியும் போட்டித் திறனும் முக்கியமானவை. ஆனால், அவை பாதுகாப்பு, வேலை நிலைத்தன்மை, சமூக நீதியைப் பலி கொடுக்கக் கூடாது.
இந்தச் சமநிலையை எவ்வாறு காக்கலாம் என்பதற்கு தமிழ்நாடு ஒரு வலுவான எடுத்துக்காட்டை வழங்குகிறது. தொழிலாளர் சட்டக் கோட்பாடுகள் ஒரு பரந்த சட்ட வடிவமைப்பை மட்டுமே வழங்குகின்றன. ஆனால், அவற்றை உயிர்ப்புடன் செயல்படுத்துவது மாநில விதிமுறைகள்தான். எந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்? ஆய்வுகள் எவ்வாறு நடக்க வேண்டும்? பாதுகாப்பு தரநிலைகள் என்ன? வேலை நேரம் மற்றும் கூடுதல் நேர வேலைக்கு என்ன விதிகள்? சமூகப் பாதுகாப்பு யாருக்கு எவ்வாறு கிடைக்க வேண்டும்? புகார் தீர்வு அமைப்புகள் எப்படியிருக்க வேண்டும்? தண்டனை மற்றும் அமலாக்கம் எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும்- இவை அனைத்தையும் மாநில விதிமுறைகள்தான் தீர்மானிக்கின்றன.
சட்டக் கோட்பாடுகள் எலும்புக்கூடு என்றால், விதிமுறைகள் அதன் தசை மற்றும் நரம்புகள். விதிமுறைகள் பலவீனமாக இருந்தால், மிகச் சிறந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சட்டங்கள்கூட வெறும் வெற்றுச் சட்டங்களாக மாறிவிடும்.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் அணுகுமுறை கவனிக்கத் தகுந்தது. தொழிலாளர்களுக்கும் தொழில் துறைக்கும் ஒரே நேரத்தில் ஆதரவாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு நீண்டகாலமாக விளங்குகிறது. இது எளிதில் கிடைக்காத சமநிலை. தொழிலாளர் சட்டக் கோட்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட அதன் வரைவு மற்றும் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளும் இந்த மரபைத் தொடர்வதைக் காட்டுகின்றன.
உற்பத்தி, கட்டுமானத் துறைகளில் பாதுகாப்பு விதிகள் வலுவாகக் காக்கப்படுகின்றன. ஆய்வு முறைகள் தளர்த்தப்படாமல், எண்ம (டிஜிட்டல்) வெளிப்படைத்தன்மையுடன் வலுப்படுத்தப்படுகின்றன. ஒழுங்கற்ற துறையிலும், கிக் (இணையம் சார்ந்த முறைசாரா தொழிலாளர்கள்) மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைக்க மாநில அளவிலான திட்டங்கள் உறுதி செய்யப்படுகின்றன.
இரவுப் பணியில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, போக்குவரத்து, வேலைநிலை போன்ற அம்சங்களில் தெளிவான விதிகள் இடம்பெற்றுள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள், கைவேலைத் தொழிலாளர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுக்களுக்கான நல வாரியங்கள் தொடர்வதன் மூலம் நலன் சார்ந்த அணுகுமுறையும் காக்கப்படுகிறது.
இந்த முறை, தொழிலாளர் சீர்திருத்தம் என்றால் கட்டுப்பாடுகளை அகற்றுவது மட்டுமல்ல என்பதைக் காட்டுகிறது. மாறாக, அது சிறந்த ஒழுங்குமுறை, தெளிவான பொறுப்புணர்வு, நியாயமான அமலாக்கம் ஆகியவற்றைக் குறிக்க வேண்டும். இதற்கு மாறாக, வணிகத்தை எளிதாக்குதல் என்ற பெயரில் சில மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் கவலைக்கிடமானவை.
பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் வேலை நேரத்தை நீட்டித்தல், ஆய்வு எண்ணிக்கையைக் குறைத்தல், தண்டனைகளைத் தளர்த்துதல், தொழிலாளர் என்ற வரையறையைச் சுருக்குதல், சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளைத் தள்ளிப்போடுதல் போன்ற முயற்சிகள் குறுகிய காலத்தில் செலவைக் குறைத்தது போலத் தோன்றலாம். ஆனால், நீண்ட காலத்தில் இது தொழில் துறை அமைதியின்மை, பாதுகாப்பற்ற வேலைத்தளங்கள், தொழிலாளரும் நிர்வாகம் இடையே நம்பிக்கைச்சிதைவு ஆகியவற்றை உருவாக்கும்.
தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் காட்டுவது என்னவென்றால், பாதுகாப்பான, திறன்மிக்க, நிலையான தொழிலாளர்கள் அதிக உற்பத்தித் திறன், குறைந்த வேலைவிலகல், சிறந்த சட்ட இணக்கம், நீடித்த தொழில்துறை அமைதி, உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றை உருவாக்குகிறார்கள். இன்றைய உலகில் இஎஸ்ஜி (சுற்றுச்சூழல், சமூக, நிர்வாகம்) தரநிலைகள் முதலீட்டுத் தீர்மானங்களை நிர்ணயிக்கும் நிலையில், தொழிலாளர் நலன் ஒரு பொருளாதாரச் சுமை அல்ல; அது ஒரு மதிப்புமிக்க சொத்தாகும்.
முன்னேறும் பாதையில் மாநிலங்கள் சில அடிப்படை அம்சங்களை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், கட்டுமானம், அபாயகரமான தொழில்கள் போன்ற துறைகளில் தெளிவான, அமல்
படுத்தக்கூடிய பாதுகாப்பு தரநிலைகள் அவசியம். கிக் தொழிலாளர்கள், நடைபாதை தொழிலாளர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு வலையிலிருந்து தவறிவிடக் கூடாது. தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வு முறைகள் கண்காணிப்பை பலவீனப்படுத்தாமல், பொறுப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
பெண்கள் அதிகமாகப் பங்கேற்கும் பணியிடங்களை உருவாக்க பாதுகாப்பு, நெகிழ்வு, புகார் தீர்வு அமைப்புகள் அவசியம். பல ஆண்டுகளாக பயனளித்த துறைசார் நல வாரியங்களைக் கலைப்பதற்குப் பதிலாக, அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள், முதலாளிகள், குடிமக்கள் அமைப்புகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து தொழிலாளர் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இறுதியில், இந்தியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் எவ்வளவு வேகமாக அமல்படுத்தப்பட்டன என்பதைக் காட்டிலும், அவை தொழிலாளர்களை எவ்வளவு நியாயமாகவும் பயனுள்ளதாகவும் பாதுகாக்கின்றன என்பதால்தான் மதிப்பிடப்படும். பாதுகாப்பு, மரியாதை, சமூகப் பாதுகாப்பு என்ற அடிப்படை மதிப்புகளைக் காப்பாற்றியபடியே தொழிலாளர் ஒழுங்குமுறையை நவீனப்படுத்த முடியும் என்பதை தமிழ்நாடு காட்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சி நிலைத்ததாக இருக்க வேண்டுமென்றால், அந்த வளர்ச்சியில் தொழிலாளர்களும் சமமாக வளர வேண்டும் என்பதை மாநிலங்கள் மறக்கக் கூடாது.
கட்டுரையாளர்: ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.