இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கிய நாள் முதலாக தமிழக அரசு எதிர்த்து வருகிறது. அரசு முறையாகவும், ஆர்ப்பாட்ட முறையாகவும் அது தன் எதிர்ப்பைத் தெரிவித்து வந்திருக்கிறது. மாணவர்களும், கல்வியாளர்களும் போராடி வருகின்றனர். மருத்துவம் படிப்பதற்காக உயிரிழந்த மாணவிகளும், அதனால் பெரும் இழப்பைச் சந்தித்த பெற்றோர்களும் ஏராளம். ஆனால், மத்திய அரசு அது குறித்துக் கவலைப்படுவது இல்லை. மாணவர்கள் குறித்தும், மருத்துவக் கல்வி குறித்தும் கவலைப்படாமல் தனியார் மருத்துவமனைகள் குறித்தும், பயிற்சி மாணவர்களின் வருமானம் குறித்துமே கவலைப்படுவதால்தான் தவறுகள் தொடர்கின்றன.
இந்த 7 ஆண்டுகளில் நாட்டில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்துள்ளன. சுமார் 2 கோடி மாணவர்களும், தேர்வர்களும் நெருக்கடியில் உள்ளனர். முக்கியப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களைக் கசியவிடும் 'மாபியா' கும்பல் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் நடந்த 'வியாபம்' ஊழல் திட்டமிடப்பட்ட விரிவான வினாத்தாள் கசிவாகும். பல ஆண்டுகளாக அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட 'மாபியா' கும்பல் அனைத்து முக்கியப் போட்டித் தேர்வுகள், பணியாளர் சேர்ப்புத் தேர்வுகளின் வினாத்தாள்களைக் கசிய விட்டது.
நீட், ஜேஇஇ, யுபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையும் அழிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்தபோது, மத்திய அரசு இந்த விவகாரத்தைத் தீவிரமாக அணுகத் தவறிவிட்டது. தற்போதைய நீட் வினாத்தாள் கசிவும் முதலில் ராஜஸ்தானில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த 'மாபியா' கும்பல் இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறது. நீட் வினாத்தாள்கள் பல்வேறு நிலைகளில் விற்கப்பட்டுள்ளன. முதல் அடுக்குக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வினாத்தாள்கள் விற்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சேர்ந்த தாவரவியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில், வல்லுநர் என்ற அடிப்படையில் அங்கம் வகித்தவர் ஆவார்.
இந்த முறைகேட்டில் கைதான முக்கிய நபரான பேராசிரியர் பி.வி.குல்கர்னியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மனீஷா சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. நீட் வினாத்தாள் முறைகேட்டில் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரகசிய தகவல்கள் அணுகும் தங்களின் சிறப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தி இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 22.05 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து, தேசிய தேர்வு முகமை இப்போது நீட் தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளது. கடந்த மே 3-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே ராஜஸ்தானில் உள்ள பயிற்சி மையங்கள் சிலவற்றிற்கு 'உத்தேச கேள்விகள்' என்று ஒரு தொகுப்பு போனதாகவும், அது பல லட்சம் ரூபாய்க்கு மாணவர்களிடம் விற்கப்பட்டதாகவும் விசாரணையில் வெளி வந்திருக்கிறது.
வேதியியல், உயிரியல் பாடங்களில் பல கேள்விகள் இந்தத் தொகுப்பில் இருந்தது போலவே நீட் வினாத் தாளிலும் இருந்தனவாம். இது தொடர்பான விசாரணையில் தேர்வுத் தாளைக் கசிய விட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவது, விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி, ஆள் மாறாட்டம், மோசடி என்பதெல்லாம் புதியவை அல்ல. தேர்வு அறிமுகமான காலம் தொடங்கி இவை தொடர்கின்றன. பிகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே விற்பனை செய்யப்படுவது சாதாரண நிகழ்வாக இருக்கின்றன. இந்தியாவில் 'பயிற்சி மையங்களின் தலைநகர'மாக இருக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில் இது அதிகம் என்று சொல்கிறார்கள்.
நீட் தேர்வில் நடந்த தொடர் மோசடிகளையடுத்து 2024-ஆம் ஆண்டு, ஜூனில் தேசிய தேர்வு முகமையை வலுப்படுத்த பரிந்துரைகள் வழங்குமாறு முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது, 'மத்திய கல்வி அமைச்சகம் வினாத்தாளை எண்ம வடிவில் தந்து பேட்டரில் பதில் எழுதும் எண்ம (டிஜிட்டல்) - ஹைபிரிட் முறைக்கு நீட் தேர்வை மாற்ற வேண்டும், ஜேஇஇ தேர்வு போல இரண்டு கட்டங்களாக இதையும் நடத்த வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைத்துவிட்டு மறுசீரமைக்க வேண்டும்' என்றெல்லாம் 101 பரிந்துரைகளை அந்தக்குழு தந்தது. மத்திய அரசு எதையும் நடைமுறைப்படுத்தவில்லை.
'தேர்வை ரத்து செய்ததற்குப் பொறுப்பேற்று மாணவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திரும்பத் தருகிறோம்' என்று தேசிய தேர்வு முகமை கூறியிருக்கிறது. பல மாணவர்கள் இரண்டாண்டு, மூன்றாண்டுகள் முயன்று நீட் தேர்வை எழுதியிருக்கிறார்கள். மீண்டும் அவர்களைத் தேர்வு எழுதச் சொல்வது மிகப் பெரிய வன்கொடுமை என்றுதான் கூறவேண்டும்.
நீட் தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள். விண்ணப்பக் கட்டணம் மூலம் சுமார் ரூ.300 கோடி வருமானம் வந்திருக்கிறது. ஜேஇஇ உள்பட பிற தேர்வுகளையும் கணக்கிட்டால் ஆண்டுக்கு சுமார் ரூ.800 கோடி வரும். ஆனால், இந்த அமைப்பிடம் சொந்தமாக ஓர் அச்சகம் கூட இல்லை. தேர்வு நடத்த தகுதியற்ற இந்த அமைப்பைக் கலைத்துவிட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
பெரும்பாலான தேர்வுகள் இணையவழி முறையிலேயே நடைபெறுகின்றன. அவற்றில் பெரிய பிரச்னைகள் வருவது இல்லை. நீட் தேர்வு மட்டுமே இன்னும் பழைய முறையிலேயே நடத்தப்படுகிறது. கேள்வித்தாள் தயாரிப்பது முதல் அச்சிட்டு மாணவர் கையில் சேர்ப்பது வரை ஏராளமானோர் வினாத்தாளைக் கையாளுகின்றனர். தேர்வு மையங்கள் அனைத்தும்
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. தேர்வு மையங்களைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். போலீஸôரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை முறையாகக் கொண்டு செல்லும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது. கட்டுப்பாடுகளுக்குக் குறைவே இல்லை.
தேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கவிருந்த நிலையில், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்பு மாணவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஆள் மாறாட்டம், மோசடியைத் தடுக்கும் வகையில் ஆதார் எண் அடிப்படையிலான பயோமெட்ரிக் அடையாளம் சரி பார்க்கப்பட்டது. தேர்வு மையத்துக்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மதம், கலாசாரம் சார்ந்த ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, சங்கிலி, கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றைக் கழற்றி பெற்றோர் அல்லது உடன் வந்தவரிடம் கொடுத்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். அதிக உயரம் கொண்ட காலணிகள் அணிந்து வந்தவர்கள், அவற்றைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு அறைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமார் 5,500 மையங்களில் நடைபெற்ற தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதனிடையே வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தேசிய தேர்வு முகமை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்துள்ளது. இதனால், மாணவர்களின் கனவுகளும், கடின உழைப்பும், பெற்றோரின் தியாகங்களும் சிதைக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்டுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதேர்வு வரும் (ஜூன்) 21-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்தத் தேர்வில் தொடர் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணையவழியில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பின் மீது இருக்கும் மோகத்தைப் பயன்படுத்தி நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. இதில் 'மாபியா' கும்பல் மோசடி செய்கிறது. மாணவர்களை மன உளைச்சலுக்கும், உயிரிழப்புக்கும் உள்ளாக்கும் நீட் தேர்வு இனியும் தொடரக் கூடாது என்பதே அறிவார்ந்தமக்களின் விருப்பமாகும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மறுதேர்வு தீர்வாகாது!





