பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

News image

போதைப் பொருளுக்கு மறுப்பு சொல்லுங்கள்! - கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 4:54 am IST

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும். இந்தப் பருவத்தில் புதிய அனுபவங்களைத் தேடிச் செல்லும் இளைஞர்களில் சிலர், தவறான திசையில் பயணித்து, அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்துக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் சுமையாக மாறிவிடுகிற காட்சிகள் தொடர்ந்து நிகழ்கின்றன.

நண்பர்களிடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வால், மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை பல இளைஞர்கள் அவர்களுடைய நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். தனிப்பட்ட குடும்பப் பிரச்னைகளால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து தற்காலிகமாக விடுபட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் இளைஞர்களும் உண்டு.

சென்னை உள்ளிட்ட இந்தியப் பெருநகரங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் உயர் கல்வி கல்லூரி விடுதிகளில் மாணவர்களிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் 1960-களில் வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை நகரில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் "போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு' என்ற அமைப்பு சென்னை நகரில் முதன்முதலில் 1963-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நுண்ணறிவுப் பிரிவு தமிழ்நாட்டிலுள்ள பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நகரங்கள், கிராமங்கள் என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போதைப் பொருள்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதும், மாணவர்களிடையே போதைப் பழக்கம் வேகமாகப் பரவி வருவதும், போதைப் பொருள்கள் பயன்பாடு பல கொடுங்குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்திருப்பதும் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தங்குதடையின்றி நடைபெறுவதால் பொதுமக்களிடையே ஏற்பட்ட அச்சத்தைத் தணிப்பதற்காக "ஆபரேஷன் கஞ்சா வேட்டை' என்ற பெயரில் 2021- 2022-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும், போதைப் பொருள்கள் விற்பனையை அரசு கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவு, சமீபத்திய தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் எதிரொலித்தது.

தமிழ்நாட்டில் பரவலாக நிலவிவரும் போதை கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதில் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள், மாவட்டங்களில் போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க 65 காவல் அமைப்புகளைப் புதிதாக ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்கினால், நாட்டில் நிலவிவரும் போதைக் கலாசாரம் முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்து சமுதாயத்தில் நிலவிவருகிறது. இந்த நடவடிக்கைகள் மட்டும் போதைக் கலாசாரத்துக்கு தீர்வாகுமா? என்பது குறித்து பார்ப்போம்.

அன்றாட வாழ்வில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு குற்றங்களுடன் போதைப் பொருள்கள் தொடர்பான குற்றச் செயல்களை ஒப்பிட முடியாது. திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்காணித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதன்மூலம், சமுதாயத்தில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஆனால், போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதால் மட்டும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்த முடியாது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களும் போதைப் பொருள்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான மறைமுக ஆதரவை அளித்து வருகின்றனர். இத்தகைய ஆதரவு போதைப் பொருள்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

போதைப் பொருள்கள் கலாசாரத்தில் இருந்து ஒரு நாடு விடுபட வேண்டும் என்றால், நாடு முழுவதும் மூன்று விதமான நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதை போதை கலாசாரத்திலிருந்து விடுபட்ட நாடுகளின் செயல் திட்டங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம். அந்த மூன்று நடவடிக்கைகள் என்னவென்று பார்ப்போம்.

போதைப் பொருள்கள் கடத்தல், பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல் மற்றும் இந்தச் செயல்களுக்குத் துணை போகுதல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, அவர்களின் செயல்பாடுகளை முடக்குதல் என்பது முதல் நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தற்போது எடுத்து வருகிறது.

போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டறிந்து, போதைப் பழக்கத்திலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது இரண்டாவது கட்ட நடவடிக்கை ஆகும்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள், அதைப் பயன்படுத்தாமல் ஒரு மணி நேரம்கூட மன அமைதியுடன் அவர்களால் இருக்க முடியாது. தங்களின் தேவையை நிறைவு செய்துகொள்வதற்காக, போதைப் பொருள்கள் விற்பனைக்கு உறுதுணையாக அவர்கள் செயல்படுவார்கள். அத்தகைய நபர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பது அவசியம்.

போதைக்கு அடிமையானவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக கொடுக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கக்கூடிய வசதிகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் அனைவரையும் போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான மாநிலம் தழுவிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களில் பலர் நடுத்தர மற்றும் குறைவான வருமானம் ஈட்டக்கூடிய குடும்பத்தினர்களாக உள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆலோசனை மையங்களுக்குச் சென்று, கட்டணம் செலுத்தி, போதைப் பொருள்கள் பயன்பாட்டிலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை பெறக்கூடிய நிலையில் இல்லை. அத்தகைய நபர்கள் சிலரின் குடும்பத்தினரிடம் அண்மையில் நடத்திய உரையாடல் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

"அரசு எங்களுக்கு மாதந்தோறும் பண உதவி செய்வதைக் காட்டிலும், போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ள எங்கள் வீட்டு ஆண்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கி, போதைப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்துக் கொடுத்தாலே போதுமானது. நாங்கள் குடும்பத்துடன் உழைத்து, எங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வோம்' என்று பெண்கள் வெளிப்படுத்திய கருத்து அர்த்தம் பொதிந்த கருத்தாகும்.

புதிய அனுபவத் தேடல், நண்பர்கள் அழுத்தம், மன அழுத்தம், குடும்பக் கண்காணிப்பு குறைவு, தனிமை போன்ற பல்வேறு காரணங்களை வெளிப்படுத்தி, இளைஞர்கள் பலர் போதைப் பழக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக, மாணவர்களும், சிறார்களும் இந்தப் பழக்கத்தை நோக்கி பயணிக்கிற நிலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது போதை கலாசாரத்துக்குத் தீர்வு காணும் பணியின் மூன்றாவது கட்ட நடவடிக்கை ஆகும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருள்கள் பழக்கத்தைக் கற்றுக் கொள்ளாமல் கண்காணித்து வர வேண்டிய பொறுப்பு குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், காவல் துறை போன்றவற்றுக்கு உள்ளது. திடீர் நடத்தை மாற்றம், தனிமையை நாடுதல், படிப்பில் கவனம் குறைதல் போன்ற செயல்கள் மாணவர்களிடம் வெளிப்பட்டால், அவர்கள் போதைப் பொருள்களின் தாக்கத்துக்குச் சென்றுவிட்டனரா? என ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு, கலை, இசை, நூல்கள் வாசிப்பு, சமூகப் பணி போன்றவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்தினால், மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பழக்கத்தை நாடிச் செல்லக்கூடிய வாய்ப்பு தவிர்க்கப்படும்.

போதைப் பழக்கம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்வியாளர்கள், மருத்துவர்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், சமூக ஊடகங்கள் ஒருங்கிணைந்து நடத்துவதன்மூலம் மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பொருள்களை நாடிச் செல்லாத நிலையை சமுதாயத்தில் ஏற்படுத்தலாம்.

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக போதைப் பொருள்கள் விற்பனை மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்தல், போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை செய்;ய வேண்டும்.

கட்டுரையாளர்:

முன்னாள் காவல் துறை உயரதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.