கையறு நிலையில் பெற்றோர்!
சாலை விபத்துகளுக்குக் காரணமான சிறுவர்கள் தங்கள் தவற்றை உணரும் வகையிலான தண்டனையை வழங்குவதுடன், அவர்களின் பெற்றோரிடமிருந்து கணிசமான தொகையை அபராதமாகப் பெற்று அதைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கலாம்

கோப்புப் படம்
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் தன்னுடைய தந்தையின் சொகுசு காரை ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் உள்ளூர் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ள நிகழ்வு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அண்மையில் நிகழ்ந்த அந்த விபத்தில் தொடர்புடைய சிறுவனின் தந்தை திருச்சூர் நீதித் துறை நடுவர் மன்ற நீதிபதியாக உள்ளார் என்பதால் இந்நிகழ்வு கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
விபத்தில் பலியானவருடைய குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தானியங்கி வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குரிய குறைந்தபட்ச வயது 18 ஆகும். ஆனால், அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்கள் தங்களின் ஆர்வக் கோளாறு காரணமாகத் தங்களுடைய தந்தை, தாய் உள்ளிட்ட மூத்த குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திவரும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் போதிய பயிற்சியின்றி ஓட்டிச் செல்லும் போது இத்தகைய விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன.
எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பதின்மவயதினர் பெரும்பாலும் பைக், ஸ்கூட்டர் போன்றவற்றை சாலைகளில் ஓட்டி மகிழ்கையில், மேல்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறார்களோ விலையுயர்ந்த உள்நாட்டு கார்களையும், வெளிநாட்டு இறக்குமதி கார்களையும் பொதுப் போக்குவரத்துக்கான சாலைகளில் ஓட்டிச் சாகசம் புரிகின்றனர்.
அனுபவம் மிகுந்த ஓட்டுநர்களுக்கே சவால் விடக்கூடிய மேற்கண்ட சொகுசு வாகனங்கள், பதின்ம வயதினரின் கட்டுப்பாட்டுக்குள் வரமறுத்து விரைகின்றன. அச்சமும், பதற்றமும் நிரம்பிய மனத்துடன் அவற்றை இயக்கும் பதின்மவயதுச் சிறுவர்களும் வருவது வரட்டும் என்று எதிரே வரும் எவர் மீதாவது மோதி விடுகின்றனர்.
கடந்த 2024 -ஆம் ஆண்டு மே மாதத்தில் புணே நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடைய பதின்ம வயது மகன் இதே போன்று கண்மூடித்தனமான வேகத்தில் சொகுசு கார் ஒன்றை இயக்கியதில் மற்றொரு காரில் பயணம் செய்துகொண்டிருந்த இருவர் உயிரிழக்க நேர்ந்தது. நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு இடங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கின்றன.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஒட்டுநர் உரிமம் பெறும் வயதை எட்டாத சிறுவர் அல்லது சிறுமியர் விபத்தை ஏற்படுத்தும் நிலையில், அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது விபத்தில் தொடர்புடைய வாகனத்தின் உரிமையாளர்களுக்குக் கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் வசதி படைத்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் விபத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் கூடுதலாக ஊடக கவனத்தைப் பெறுகின்றன.
குற்றச்செயல் புரிபவருக்கு எதிரான சட்டங்கள் எத்தனையோ இருந்தாலும் குற்றங்கள் குறைவதில்லையல்லவா? அது போலவே, ஓட்டுநர் உரிமம் பெறும் வயதை எட்டாத சிறுவர், சிறுமியரால் ஏற்படக்கூடிய விபத்துகள் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட பின்பும்கூட எதுவும் இங்கே மாறுவதாகத் தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருக்களிலும், நெடுஞ்சாலைகளிலும் பால்மணம் மாறாச் சிறுவர்கள் எந்தவித பயமும் இன்றித் தானியங்கி வாகனங்களை இயக்குவது அன்றாடக் காட்சியாகிவிட்டது.
விபத்து என்ற ஒன்று அரங்கேறாத வரையில் இங்கு யாரும் எதையும் கண்டுகொள்வதில்லை. விபத்தை ஏற்படுத்தும் சிறுவர்களுக்குத் தானியங்கி வாகனத்தை வாங்கிக் கொடுத்த பெற்றோர்களைக் கைகாட்டுவதால் மட்டுமே பிரச்னை முடிவுக்கு வந்துவிடாது என்பதே உண்மை.
குழந்தைகளின் வளர்ப்பு, வளர்ச்சி இரண்டின் தன்மைகளும் காலம்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. "தோளுக்கு மிஞ்சினால் தோழன்' என்ற நிலைமை மாறி, "இடுப்பு உயரத்திற்கு வளர்ந்தாலே இளைஞன்' என்பது வழக்கத்துக்கு வந்துவிட்டது. இன்றைய குழந்தைகள் சிலபல உரிமைகளைத் தங்கள் பெற்றோராகப் பார்த்து அனுமதிக்கும் வரை காத்திராமல் தாங்களே அனுமதியை எடுத்துக்கொள்கின்றனர்.
பெற்றோரின் உதவியின்றி, நட்புவட்டத்தின் மூலமாகவே தானியங்கி வாகனங்களை இயக்கக் கற்றுக் கொள்ளும் தற்காலச் சிறுவர்கள், பெற்றோரின் அனுமதியின்றியும், அவர்கள் வெளியே சென்றிருக்கும் வேளையிலும் வீட்டிலுள்ள தானியங்கி வாகனங்களை எடுத்து ஓட்ட முயற்சிக்கின்றனர். வேகமாகப் பயணித்து விபத்துகளையும் ஏற்படுத்திவிடுகின்றனர்.
இந்தச் சூழலில், விபத்தை ஏற்படுத்தும் சிறார்களின் பெற்றோருக்குக் கடும் தண்டனை வழங்கி அவர்களை முடக்குவது சரிதானா என்று யோசிக்கும் நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் போதிய நிவாரணம் தந்து உதவுவது மிகவும் முக்கியம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. பல்வேறு காரணிகளால் தற்கால பெற்றோர் தங்கள் வாரிசுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கப் படாதபாடு படுகின்றனர்.
இந்நிலையில், சாலை விபத்துகளுக்குக் காரணமான சிறுவர்கள் தங்கள் தவற்றை உணரும் வகையிலான தண்டனையை வழங்குவதுடன், அவர்களின் பெற்றோரிடமிருந்து கணிசமான தொகையை அபராதமாகப் பெற்று அதைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கலாம் அல்லது மருத்துவ சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்க வைக்கலாம். மற்றபடி, தோளுக்கு மிஞ்சிய தோழர்களைக் கையாள வேண்டிய கையறு நிலையில் இருக்கும் அப்பாவிப் பெற்றோருக்குக் கடும் தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
ஏனெனில், அத்தகைய தண்டனையானது, பாதிக்கப்பட்டவருக்கு எந்தவித நிவாரணத்தையும் தரப் போவதில்லை. மாறாக தவறிழைத்த சிறுவனுடைய பெற்றோர் உள்ளிட்ட ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து தண்டிப்பதற்கு ஒப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

