வைரமுத்துவின் தமிழ் ஆண்டாளும் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும்...

இந்தியத் தெய்வீக உருவகங்களைப் பற்றியதான அயலக மதிப்பீடு வெகு காலமாக இப்படித்தான் இருந்திருக்கிறது. அதற்கு சமீபத்திய சான்று ஆண்டாள் மீதான இந்த அவதூறான கூற்று, இதை நாம் மறுப்பதற்கும், எதிர்த்து அவளது
வைரமுத்துவின் தமிழ் ஆண்டாளும் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும்...
Published on
Updated on
2 min read

ண்டாள்... தமிழை ஆண்டாள்!

ஆண்டு கொண்டிருக்கிறாள்... 

அதில் யாருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. தினமணியில் திங்களன்று வெளியான வைரமுத்துவின் தமிழ் ஆண்டாள் கட்டுரை இந்த வாரத்தின் பரபரப்புச் செய்திகளில் ஒன்று! ஆண்டாளை, வைணவர்களின் அருட்பெருந்தாயாரை, ஈடிலாப் பரம்பொருளின் இதயம் கவர்ந்தவளை, தமிழ் இலக்கியத்தின் அழியாச் சொத்துக்களாக திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் அருளிச் சென்ற அருமாந்த பெண்பாற்புலவரை, யாரோ அயல்நாட்டு பல்கலைக்கழக ஆய்வாளனின் ஆய்வுக்கட்டுரை மொழிகளை முன்வைத்து பொதுமகளிரில் ஒருத்தி என்றுரைப்பதா? இது என்ன அநியாயம்?! மகா பாபமன்றோ இது?! இந்தச் சிறு விஷயம் தினமணிக்கு எப்படித் தெரியாமல் போனது? வேண்டுமென்றே பரபரப்புக் கிளப்ப இப்படிச் செய்துவிட்டார்கள். என்றெல்லாம் நிந்தனைகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், ஆண்டாள் மீதான பக்திமோகத்தில், அவளை இப்படிச் சொல்லி விட்டார்களே, என்கிற மிதமிஞ்சிய கோபத்தில் ஒரு விஷயத்தை மறந்து விட்டோம். திருப்பாவை தந்த தமிழ்ப்பாவை ஆண்டாளைப் பற்றி அயல்மண்ணின் ஆய்வாளர் ஒருவர் இப்படியெல்லாம் சிந்தித்திருக்கக் கூடும்?! என்று நாம் எப்போதாவது யோசித்திருப்போமா? அப்படியான யோசனைகள் நமக்கு வராது. ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை தாயாரை அப்படி அவமதிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டிய தலையெழுத்து நமக்கில்லை. இந்தியத் தெய்வீக உருவகங்களைப் பற்றியதான அயலக மதிப்பீடு வெகு காலமாக இப்படித்தான் இருந்திருக்கிறது. அதற்கு சமீபத்திய சான்று ஆண்டாள் மீதான இந்த அவதூறான கூற்று. இதை நாம் மறுப்பதற்கும், எதிர்த்து அவளது புனிதத்தை உலகின் முன் வைப்பதற்காகவும்கூட இப்படி ஒரு சோதனை நம் முன் வைக்கப்பட்டிருக்கலாம். வைணவ நம்பிக்கையின்படி சொல்வதானால், கண்ணனின் தீராத விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். என்றெல்லாம் நாம் கருதத் தலைப்பட்டாலும்கூட...

வைரமுத்து கட்டுரையின் கடைசி வாக்கியம் இன்று இந்து மத ஆர்வலர்களையும், ஆண்டாள் பக்தஜன சபையினரையும் கொதித்தெழச் செய்திருக்கிறது என்பதே நிஜம். வைரமுத்து, தம் கட்டுரையை அப்படி முடித்தமைக்காக வருத்தம் தெரிவித்த பிறகும்கூட பக்தர்களின் கோபம் கட்டுக்கடங்கியதாகத் தெரியவில்லை. இது மிக இயல்பான கோபமாகையால், தினமணியும் தனது வருத்தத்தை இன்று வெளியிட்டிருந்தது. மிக அருமையாகச் சென்று கொண்டிருந்த கட்டுரையின் இறுதியில் பாகைத்துரும்பாக, கண்களைத் துளைக்கும் குத்தூசியாக அப்படி ஒரு வாக்கியத்தைச் சேர்த்திருக்கத் தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமே! தமிழகம் கொண்டாடும் ஆண்டாளை, தமிழ் இலக்கியம் உவகையுடன் உவந்தேத்தும் ஆண்டாளை, எந்த அடிப்படைக் கற்பிதத்தில் இப்படி அவமதிக்கத் தோன்றியது என்பது பக்தர்களின் முதல் கேள்வி! தமிழில் நதிமூலம், ரிஷிமூலம் தேடக்கூடாது என்றொரு வாய்மொழி வழக்கு உண்டு. அப்படித்தான் ஆன்மீக விசாரங்களைப் பொருத்தவரை நாம் பல விஷயங்களை அணுக வேண்டியதாக இருக்கிறது. 

அன்று ஆண்டாள், திருவரங்கப் பெருமானின் திருவடி சேர்ந்தது எப்படி? உயிரும், சதையுமான மானிட குலத்துப் பெண், கல்லாகச் சமைந்திருந்த அனந்தசயனப் பெருமாளோடு இரண்டறக் கலந்துவிட்டாள் என்பதை அறிவியல்பூர்வமாக ஏற்க மறுக்கும் நிதர்சனவாதிகள், இப்படிப்பட்ட சந்தேகத்தைக் கிளப்புவது இயல்பானதே. அதை தமது கட்டுரைக்கான ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டு ஒரு ஆய்வாளர் விமர்சித்திருப்பதும் அவர்களைப் பொருத்தவரை நியாயமாக இருக்கலாம். ஆனால், அது எங்கே தவறாகிறது எனில், அந்த விஷயத்தை ஆன்மீக தர்க்க விவாதங்கள் நடக்குமிடத்து எவரேனும் முன்வைத்திருப்பின், அப்போது அது பகுத்தறிவுக்குரிய விஷயமாகக் கருத வாய்ப்புண்டு. ஆனால், வைரமுத்து அதைச் செய்தது, ஆண்டாளின் புகழைப் பேசவென்று சென்றிருந்த ஒரு சபையில், அவளுக்குகந்த மார்கழி மாதத்துப் பெருவிழவு நேரத்தில், அவளுக்காகவென்றே பாங்குற அமைக்கப்பட்ட ஒரு சபை நடுவில் என்பதால் இந்தக் கருத்து தற்போது மிகப்பெரும் பலியைச் சுமக்க நேரிட்டுவிட்டது.

ஆயினும், தமிழில் இது போன்ற நிந்தனைகள் எழுவது இது முதல்முறை அல்ல!

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில், ஓரிடத்தில் வெள்ளாளர் குலத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன், தேவதாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியிடம் மயங்கி, பின் அவளது புறக்கணிப்புக்கு ஆளாகிப் பித்தாகித் திரிகையில் அவளைக் குறித்த பாடல்களை இயற்றத் தொடங்குகிறான். அவனே பின்னாட்களில் நம்மாழ்வாராகப் பரிணமிக்கிறான் என்பதாக ஓரிடத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இதை வாசிக்கும் எவரொருவருக்கும் இந்துஞான மரபின் மீது சந்தேகம் வரத்தான் செய்யும். ஆனால் உள்ளுறைந்திருக்கும் மெய்ஞானத்தைக் காணும் விருப்பமிருப்பவர்கள், வெங்காயத்தின் தோளை உரித்து, உரித்து உள்ளே சென்று தேடுவதான செயலைத்தான் மேற்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஆண்டவனுக்கு அழகும், குரூரமும் ஒன்றுதான். அவனுக்கு எதன் மீதும் தனித்த ஆதூரங்கள் ஏதுமில்லை. அவன் திருவடியின் கீழ் எல்லாவற்றுக்கும் ஒரே மதிப்பீடுதான். இதை உணர்ந்துகொண்டவர்களுக்கு எதன் மீதும் பெரிதாக விமர்சனங்கள் எழுவதில்லை எனத் துணிந்து அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் கூறலாம். ஆனால், பக்தமகா சபையில் அத்தகைய சமாதானங்கள் அனைத்தும் திமிரான வாதங்களாகவும் குதர்க்கமான விளக்கங்களாகவுமே கொள்ளப்படும்.

ஏனெனில், நம்மில் பலர், இப்போதும் குருடர்கள் கண்ட யானை கதையாகத்தான் பக்திமார்க்கத்தைப் புரிந்துகொள்கிறோம்.

அவரவருக்குத் தோன்றிய வகையில், அவரவருக்கும் பிரியமான வகையில், அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில், அவரவருக்குச் சமாதானம் தரத்தக்க வகையில், சாதகமான வகையில் நமது தெய்வங்களை நாம் பூஜித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில், இன்று ஆண்டாள் வெறுமே வைணவர்களுக்கு மாத்திரமில்லாமல், பக்திமீதூறித் திளைக்கும் சகலருக்கும் தாயாராகப் போற்றப்படுபவள். அவளைப் போய் ஸ்ரீரங்கம் கோயிலின் தேவதாசிகளில் ஒருவராக இருந்திருக்கலாம் எனத் தோன்றும்படி கட்டுரையை சந்தேகமாய் முடித்திருப்பது பக்தர்களை சஞ்சலப்படுத்திவிட்டது.  இப்படி ஒரு கருத்தை தனதாக இல்லாதபோதும், யாரோ குறிப்பிட்டது என மேற்கோள் காட்டவும்கூட கவிஞர் சற்று யோசித்திருக்க வேண்டும். யோசிக்காததன் பலனே, குவிந்து வரும் கண்டனங்கள். அவர் யோசிக்காதிருக்கவும் காரணங்கள் இருந்திருக்கலாம். தமது பாடல்களின் ரசிகர்கள்தானே தமிழர்கள். அதனால், தாம் எதைச் சொன்னாலும் அவர்கள் ரசிக்கக்கூடும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ரசிகர்கள் வேறு, பக்தர்கள் வேறு என்பதை உணரத் தவறியதின் விளைவு இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com