திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமண தீட்சிதலு சில நாட்களுக்கு முன்பாக தனியார் தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஏழுமலையானின் நகைகளைப்பற்றி ஒரு சர்ச்சையை முன் வைத்தார்.
அதாவது 1945 ஆம் ஆண்டு வாக்கில் மைசூரு மஹாராஜா, திருப்பதி மலையப்ப சுவாமிக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஒரு பிளாட்டின ஆரத்தில் நடுவே மிகப்பெரிய ரோஜா நிற வைரம் பதிக்கப்பட்டிருந்தது. இந்த மாலையை ‘மிராஸி’ என்று சொல்லப்படக் கூடிய பரம்பரை அர்ச்சகர்கள் எவருமே மறந்திருக்க வாய்ப்பில்லை. அதை ஏழுமலையானுக்கு அவ்வப்போது அணிவித்து அழகு பார்ப்பது வழக்கம். என் குழந்தைப் பருவம் முதல் அந்த மாலையை நான் பார்த்திருக்கிறேன்.
1996 ஆம் ஆண்டு வரை அந்த மாலை மலையப்பரின் கழுத்தில் பத்திரமாகத் தான் அணிவிக்கப்பட்டு கழற்றப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், 2001 ஆம் ஆண்டில் ஒரு கருட சேவை நாளன்று ஏழுமலையானின் கழுத்தில் பூட்டப்பட்ட அந்த பிளாட்டின மாலையில் இருந்த ரோஜா நிற வைரத்தை அதற்குப் பிறகு நான் பார்க்கவில்லை. பக்தர்கள் வீசிய நாணயத்தால் ரோஜா நிற வைரம் உடைந்து சிதறி விட்டது என்று கூறி சில துணுக்குகளை என்னிடம் காட்டினார்கள். ஆனால் உடைந்தாலும் வைரம், வைரம் தானே? அதனால் அவர்கள் காட்டிய அந்தத் துணுக்குகளை வைரம் என்று என்னால் நம்பமுடியவில்லை. திருமலையில் மிராஸி அர்ச்சகர்களின் பொறுப்பில் கோயில் நடைமுறைகள் இருக்கும் வரையிலும் எல்லாமும் ஒரு ஒழுங்கு முறையில் தான் இருந்தன.
ஆனால், இப்போதிருக்கும் அதிகாரிகளின் பொறுப்புக்கு கோயில் நிர்வாகம் சென்றதிலிருந்து அவர்களில் ஒருவர் கூட கோயிலுக்கான ஆகம விதிகளையோ அல்லது ஒழுங்குமுறை விதிகளையோ பின்பற்றுவதே இல்லை. அவர்களை அனைவரும் அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள், சினிமாக்காரர்கள், அதிகார பலம் கொண்டவர்கள் போன்றோரின் அடிமைகளாகி விட்டார்கள்இல்லையெனில் அரசியல்வாதிகள் தரிசனம் செய்ய வேண்டுமென்பதற்காக ஏழுமலையானின் பிரசாத நேரத்தை யாராவது துரிதப்படுத்துவார்களா என்ன? சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீளும் பிரசாத நேரத்தை சில நிமிடங்களில் சுருங்க முடித்தால் என்ன? என்று கேட்கிறார்கள் இந்த ஐஏஎஸ் அதிகாரிகள். யாருக்காக என்றால்? பணம் படைத்தவர்களின் வசதிக்காக. இப்படிப்பட்டவர்கள் ஏழுமலையானின் பொக்கிஷங்களை சூறையாடுவதில் துணை போயிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்!. நிச்சயம் ஏழுமலையானின் நகைகள் திருடப்பட்டிருக்கின்றன. ஏனெனில் ,
திருமலை திருப்பதி மலையப்ப சுவாமிகளுக்கு கிலோக்கணக்கில் நகைகளை கொடையளிக்கும் பக்தர்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் அளித்த நகைகள் அனைத்தும் 1996 ஆம் ஆண்டு வரையிலும் மிகச்சரியாகவே கணக்கிடப்பட்டு எண்ணி எடுத்து விசேஷ காலங்களில் மலையப்பருக்கு பூட்டப்பட்டு மீண்டும் கழற்றி பத்திரப்படுத்தப்பட்டதற்கான ரெகார்டுகள் இருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக மலையப்ப சுவாமிகளின் உடலில் பூட்டப்படும் நகைகள் அனைத்துமே புதிது, புதிதாகத்தான் இருக்கின்றன. அவற்றில் எவையுமே முன்பு நான் கண்ட விலைமதிப்பிட முடியாத பழம்பெருமை வாய்ந்த நகைகள் அல்ல. மன்னர்கள் கொடுத்த பழைய பாரம்பரியம் மிக்க நகைகளை எல்லாம் தற்போது கண்ணிலேயே காண முடிவதில்லை. அவை எல்லாம் எங்கே என்று கேள்வி எழுப்பினால், அவை பத்திரமாகத்தான் இருக்கின்றன என்று பதில் அளிக்கிறார்கள். ஆனால், ஆதாரத்துக்காகக் கூட அவற்றை வெளியார் கண்களில் காண்பிப்பதில்லை. அதனால் தான் எனக்கு சந்தேகம் வருகிறது. இவர்கள் விலைமதிப்பிட முடியாத அந்த நகைகளை எல்லாம் சூறையாடுகிறார்களோ என்று.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் இப்படி நிகழ்ந்துகொண்டிருக்க, 2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஏலமொன்றில் ரோஜா நிற வைரமொன்று உலகிலேயே அதிகத் தொகையான 520 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதென்று செய்திகளில் கேள்விப்பட்டேன். அந்த வைரம் இங்கே நமது இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரங்களில் ஒன்று என்றும் தகவல் வெளியானது. கோல்கொண்டா பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு நவாப்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கிருந்து கிடைத்த இந்த வைரம் பின்னர் நவாப்களிடமிருந்து திப்பு சுல்தான் வழியாக மைசூர் மஹாராஜா கைகளுக்குச் சென்று அவரால் திருப்பதி ஏழுமலையானுக்கு கொடையளிக்கப்பட்ட வைரமாக இருக்குமோ என்றொரு சந்தேகம் எழ எனக்கு வாய்ப்பிருந்தது. அதனால் தான் அதைத் தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்ள சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக் கொண்டிருக்கிறேன். என்கிறார் ரமண தீட்சிதலு.
அதுமட்டுமல்ல, கோயிலின் உட்பிரகாரத்தில் அமைந்திருக்கும் பங்காரு வாகிளி எனும் அறைவளாகத்தில் தான் சுவாமிக்கு திருவமுது சமைக்கப்படுகிறது. சுவாமிக்குத் தேவையான பிரசாதங்கள் பல்லாண்டுகளாக ஆகம முறைப்படி இங்கிருந்து தான் சமைக்கப்பட்டு மலையப்பருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. திடீரென இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தப் பிரசாத அறையை இடித்து புதிதாக மாற்றம் செய்ய முயற்சித்தார்கள். காரணம் பல்லாண்டுகளாக பல மன்னர்கள் திருப்பதி கோயிலுக்கு கொடையாக அளித்த பழம்பெரும் புதையல்கள் எல்லாம் அந்தப் பிரசாத அடுப்பின் கீழுள்ள சுரங்கத்தில் தான் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது என்பதால்... அதைக் கைப்பற்ற இப்படி முடிவெடுத்துக் காரியமாற்றி இருக்கிறார்கள். இதைப் பற்றி கேள்வியெழுப்பியதற்கு என்னை கட்டாய ஓய்வு கொடுத்து வெளியில் அனுப்பி விட்டார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு நாளொன்றுக்கு உண்டியல் மூலமாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் குவியும். அத்தனை காசும் ஏழை, எளிய மக்கள் தங்களது நம்பிக்கையின் மூலதனமாகக் குவித்தது. அதை இந்த அதிகாரிகள் இப்படி துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கலாமா? உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் சிபிஐ விசாரணை கோரிக் கொண்டிருக்கிறேன்.’ என்கிறார்.
ரமண தீட்சிதலு இப்படிக் கதறிக் கொண்டிருக்க; பல்லாண்டுகளாக அதே கோயிலின் ஆகம ஆலோசகராகப் பொறுப்பிலிருக்கும் சுந்தரவதன பட்டாச்சார்யா என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...
நான் 18 வருடங்களாக இந்தக் கோயில் பொறுப்பில் இருந்து சுவாமிக்கு பிரம்மோத்சவம் எல்லாம் செய்து வைத்திருக்கிறேன். கோயில் நகைகளைப் பலமுறை பார்த்திருக்கிறேன். பழம்பெரும் நகைகள் எல்லாம் அப்படியே பத்திரமாகத்தான் இருக்கின்றன. எல்லா நகைகளும் ஒவ்வொரு வருடமும் பிரம்மோத்சவத்துக்கு முன்னே வெளியில் எடுத்து முறையாகச் சுத்தி(சுத்தம்) செய்யப்படுகின்றன. சுத்தம் செய்வதென்றால் நகைக்காரர்களை அழைத்து வந்து தான் சுத்தம் செய்ய வேண்டும். அவர்களையும் அழைத்து வந்து இங்கேயே கோயிலுக்குள் வைத்து எல்லா நகைகளும் சுத்தம் செய்து எடுத்து வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அப்போது ஒவ்வொரு வருடமும் இருப்பு நகைகளுடன் புதிதாக வந்தவை எவை? சேதமானவை எவை என்று கணக்கிடப்பட்டு அத்தனையும் ஏட்டில் பதிக்கப்படுகின்றன. பெருமாளுக்கு சமர்பிக்கின்ற எல்லா கவசங்களும், நகைகளும் பங்காரு வாகிளி என்று சொல்லப்படக்கூடிய அறை வளாகத்துக்குள்ளே தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் பெருமாளுக்கு கவசங்களும், நகைகளும் சாற்றப்படும் போது அவைகுறித்து கணக்குகளை எழுதி வைக்க நகைப்பதிவு அதிகாரி ஒருவர் தனியாக இருக்கிறார். அவர் முறையாக எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டே தான் வருகிறார். இங்கு எதுவும் விடுபடுவதில்லை. அந்தக்காலத்தில் இருந்து இன்று வரை பெருமாளுக்கு கொடையளிக்கப்பட்ட அத்தனை நகைகளின் விவரங்களும் இங்கு பதிவு செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.
ரமண தீட்சிதலு கூறுகிறபடி இங்கே மடைப்பள்ளி பிரசாத அடுப்பின் கீழ் புதையல் எல்லாம் ஒன்றும் எடுக்கப்படவில்லை. அடுப்பின் அருகில் இருக்கும் சுவரானது நெய் அதிகம் குடித்ததால் அடிக்கடி வெடிக்கத் தொடங்கியது. அதிலிருந்து மண் கொட்டத் தொடங்கியதும் அதை இடித்து விட்டு வேறு சுவர் வைக்கலாம் என்று நான் தான் சொன்னேன். அதன்படி அதிகச் சூட்டைத் தாங்கும் விதமான செங்கற்களைக் கொண்டு புதிதாக சுவர் எழுப்பலாம் என்று முடிவு செய்து அதை மற்றும் இடித்து மாற்றினோமே தவிர அங்கே அடுப்புக்கு அடியில் பூமியில் எதுவுமே தோண்டப்படவே இல்லை. 600 டிகிரி வெப்பம் தாங்கக்கூடிய வகையிலான கெமிக்கல் பூசப்பட்ட செங்கற்களைக் கொண்டு சுவர் மட்டுமே மாற்றினோம். சாதா செங்கல் 100 ரூபாய் என்றால் இந்த செங்கல் 500 ரூபாய் விலை இருக்கும் அவ்வளவு தான். இங்கே வேறொன்றும் மாறவில்லை. மாற்றப்படவில்லை. ரமண தீட்சிதலு சொல்வதெல்லாம்... ஏதோ கோபத்தில் சொல்கிறாரோ என்னவோ?! அதையெல்லாம் நீங்கள் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்கிறார் சுந்தவதன பட்டாச்சார்யா.
ரோஜா நிற வைரம் குறித்த கேள்விக்கு சுந்தரவதன பட்டாச்சார்யாவின் பதில்...
ரோஜா நிற வைரம் குறித்து அவர் சொல்கிறார் போல் இங்கே பதிவில் தகவல்கள் இல்லை. சொத்து வாங்குகிற போது அது குறித்த தகவல் பதியப்பட்டிருக்க வேண்டும். மைசூர் மஹாராஜா கொடுத்த பிளாட்டின மாலையில் பதிக்கப்பட்டுள்ள ரோஜா நிற வைரத்தை கொடையளிக்கப்பட்ட நேரத்தில் குறிப்புகள் பதியப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்குப் பின் நகைகளின் பொறுப்பு மிராஸி அர்ச்சகர்களின் கைக்கு வந்தது. அவர்களும் அதைப் பற்றி எதுவும் பதிவு செய்திருக்க வில்லை. நான் இங்கே பொறுப்புக்கு வந்து 18 ஆண்டுகளாக நானும் அந்த வைரத்தைப் பார்த்ததில்லை என்றார்.
மைசூர் மஹாராஜா கொடுத்த ரோஜா நிற வைரத்தைப் பற்றி இத்தனை சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்க... மைசூர் அரண்மனையில் இருந்து மஹாராணி விடுத்த பிரஸ் நோட் ஒன்று மேலும் இந்த சர்ச்சையை இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடியதாக இருக்கிறதே தவிர குழப்பம் தீர்வதற்கான வழியை மட்டும் காணோம்.
மைசூர் தொல்லியல் துறை இயக்குனர் முனிரத்னம் ரெட்டி என்ன சொல்கிறார் என்றால்?
மைசூரு மஹாராஜா, திருப்பதி ஏழுமலையானுக்கு பல்லாண்டுகளுக்கு முன்பு அளித்த பிளாட்டின ஆரத்தில் பதிக்கப்பட்டிருந்தது வைரம் அல்ல அது மாணிக்கக் கல் என்பதே நிஜம். இதை மைசூரு மஹாராணி தனது பத்திரிகை குறிப்பு ஒன்றில் முன்னமே அறிவித்திருக்கிறார். அப்படியிருக்க திருப்பதி கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலுவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. என்கிறார் இவர்.
இதில் எவர் சொல்வது உண்மை?! அந்த மலையப்பரே இறங்கி வந்து சாட்சிக் கூண்டில் நின்று பதில் சொன்னால் தான் உண்மை நிரூபணமாகும்.
ருத்ராக்ஷம் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யங்கள்...
புராரி கூட்டுத் தற்கொலை விவகாரம்... தொடரும் சந்தேகத்திற்கிடமான மர்ம முடிச்சுகள்!
யார் இந்த கெளஹர் ஜான்? இந்த ஆர்மீனியப் பெண்ணுக்கு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பிப்பது ஏன்?
‘காலா’ வைப் புரிந்து கொள்ள பக்தியில் மூடத்தனம் இல்லாத மனம் வேண்டும்!