ருத்ராக்‌ஷம் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யங்கள்...

இந்த போலி ருத்ராக்‌ஷங்களை  ‘பத்ராட்சம்’ என்கிறார்கள். இந்த பத்ராட்சங்களில் சாயமேற்றி அவற்றை போலி ருத்ராக்‌ஷங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.
ருத்ராக்‌ஷம் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யங்கள்...

மூணாறுக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த ஸ்பைஸ் கார்டன் எனுமிடத்தில் ருத்ராக்‌ஷ மரங்களைப் பார்வையிட்டோம். எங்களுடன் கைடாக வந்த இளைஞர் பிஎஸ்ஸி பாட்டனி படித்தவராம். அவர் அந்த கார்டனில் இருந்த அத்தனை விதமான மரம், செடி கொடி வகைகளைப் பற்றியும் அதனதன் அறிவியல் பெயர்களுடன் தெளிவாக விளக்கினார். ருத்ராக்‌ஷத்தின் பலவிதமான வடிவங்களை அங்கே அவர்களது விற்பனை அங்காடியில் மாதிரிக்கு வைத்திருந்தார்கள். ருத்ராக்‌ஷத்தில் 1 முதல் 21 முகங்கள் வரை உண்டு என்று அப்போது தெரிந்தது.

ருத்ராக்‌ஷம் எப்படி தயாராகிறது என்றால்?

இந்த ருத்ராக்‌ஷ மரங்களில் விளையும் காய்கள் முற்றியதும் அவற்றைப் பறித்துக் கீறினால் உள்ளே விதைகள் கிடைக்கும். இந்த விதைகளை அவற்றில் இருக்கும் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1 முக ருத்ராக்‌ஷம் முதல் 21 முக ருத்ராக்‌ஷங்கள் வரை வகை பிரிக்கிறார்கள். இவற்றில் சில வகையான ருத்ராக்‌ஷ விதைகள் அடிக்கடி விளையக் கூடியவையாகவும், சிலவகை ருத்ராக்‌ஷங்கள் அபூர்வமாக விளையக்கூடியவையாகவும் இருக்கின்றன. ருத்ராக்‌ஷ காய்களைக் கீறி வெளியில் எடுக்கப்படும் விதைகளை முதலில் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கழுவுகிறார்கள். பின்னர் அவற்றை ஈரம் போக நன்கு துடைத்து உலர்வாக்கி 40 நாட்கள் நல்லெண்ணெயில் ஊற வைக்க வேண்டுமாம். 

ஏனெனில், ருத்ராக்‌ஷம் மனித உடல் போன்ற நுண் உணர்வுகளைக் கொண்டது என்பதால், அவற்றின் மேல் தோல் மிகவும் சென்ஸிடிவ்வாக இருக்குமாம். அவற்றை நல்லெண்ணெயில் ஊற வைக்காமல் அணியும் போது மிக விரைவில் மேல் தோல் சிதிலமடையக் கூடும். எனவே ருத்ராக்‌ஷ விதையின் மேல் தோலைக் கடினமாக்கி ருத்ராக்‌ஷத்தின் பலனை முழுமையாக அடையும் பொருட்டு ருத்ராக்‌ஷ விதைகள் நல்லெண்ணெயில் ஊற வைத்து எடுக்கப்பட்டு, நன்கு துடைக்கப்பட்டு மாலையாகக் கோர்த்து அணியப்படுகிறது என்பது ஐதீகம்.

ருத்ராக்‌ஷத்தை மாலையாகக் கோர்க்கும் போது அவற்றை தங்கம், செம்பு அல்லது சிவப்பு நிறப் பருத்தி நூலில் கோர்த்து அணிய வேண்டும்.

போலி ருத்ராக்‌ஷங்களை எப்படிக் கண்டறிவது?

ருத்ராக்‌ஷத்தில் தற்போது போலிகள் நிறைய வந்து விட்டன. காரணம் போலிச்சாமியார்களும், போலி பக்தியாளர்களும், தெரு முக்குகள் தோறும் பெருகி விட்ட சிறு, குறுங்கோவில்களும் தான். ருத்ராக்‌ஷ மரங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் மாத்திரமே ருத்ராக்‌ஷ மரங்கள் அதிகமுள்ளன. அங்கே விளையும் விதைகளைக் கொண்டு மொத்த தமிழகத்தின் ருத்ராக்‌ஷத் தேவையைப் பூர்த்தி செய்து விட முடியுமா என்ன? அதனால் இடையிடையே போலி ருத்ராக்‌ஷங்களும் நிறையவே பெருகி விட்டன. ருத்ராக்‌ஷங்களின் இயல்பைப் பற்றி அறியாதவர்களுக்கு எது நிஜம்? எது போலி? என்றே உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலி ருத்ராக்‌ஷங்கள் தற்போது அதிகளவில் பல்கிப் பெருகி விட்டன. இந்த போலி ருத்ராக்‌ஷங்களை  ‘பத்ராட்சம்’ என்கிறார்கள். இந்த பத்ராட்சங்களில் சாயமேற்றி அவற்றை போலி ருத்ராக்‌ஷங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

மாலையில் இருப்பது ருத்ராக்‌ஷமா? பத்ராட்சமா? எப்படிக் கண்டறிவது?

  • ருத்ராக்‌ஷம் நீரில் மூழ்கும், பத்ராட்சம் நீரில் மூழ்காது, மிதக்கும்.
  • ருத்ராக்‌ஷம் வெந்நீரில் வெடிக்காது, பத்ராட்சம் வெடிக்கும்.
  • ருத்ராக்‌ஷங்களை கல்லில் உரசிச் சோதிக்கும் போது தங்க நிறக்கோடுகள் கல்லில் பதிந்தால் அவை நிஜ ருத்ராக்‌ஷங்கள் என்று அர்த்தம். 
  • அதுமட்டுமல்ல ருத்ராக்‌ஷத்தை இரு செம்பு நாணயங்களின் நடுவே வைத்தால் மின் காந்த விசை காரணமாக ருத்ராக்‌ஷம் நாணயங்களை விட்டு விலகிச் செல்லும் நோக்கில் சுழலும்.

இப்படியான வழிமுறைகளில் நாம் ஒரிஜினல் ருத்ராக்‌ஷத்தைக் கண்டறியலாம்.

ருத்ராக்‌ஷங்களைப் பராமரிப்பது எப்படி?

  • ருத்ராக்‌ஷங்களைப் ரெகுலராகப் பயன்படுத்தும் போது அவற்றின் மீது சோப், ஷாம்பு, கிரீம்கள், ஸ்ப்ரேக்கள், முகப்பெளடர்கள் போன்ற ரசாயனப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.
  • பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும்.
  • பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும்.
  • பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும்.
  • பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம்.
  • இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். 
  • மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.

ருத்ராக்‌ஷத்தின் மருத்துவ குணங்கள்...

  • ஐந்து முக ருத்திராக்‌ஷம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய  இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். 
  • ருத்திராக்‌ஷம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல  நிவாரணி.
  • இதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை கண் இமைகள் மீது தடவிக்கொண்டால் நிம்மதியான உறக்கம்  வரும். 
  • இந்த ருத்திராக்‌ஷத்தைத் தூளாக்கி, துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். 
  • தண்ணீரில் இதைப் போட்டு சில மணிநேரம் ஊற வைத்து பிறகு ருத்திராக்‌ஷத்தை நீக்கிவிட்டு தண்ணீரை உட் கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணமாகும்.
  • புராணங்கள் எடுத்துரைப்பதற்கு மேல் மருத்துவத்துறை இதன் நற்குணங்களை மிகவும் புகழ்கின்றது. 
  • ருத்திராக்‌ஷத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் முதலிய நோய்கள் கூட தணியும் என்று அண்மையில் வெளிவந்துள்ள சில ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
  • பித்தம், தாகம், விக்கல் போன்றவை மாறுவதற்கு ருத்திராக்‌ஷம் நல்லது என்று ஆயுர் வேதம் கூறுகின்றது. 
  • கபம், வாதம்,தலைவலி முதலிய பல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ருத்திராக்‌ஷம் மருந்தாகும் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது.
  • ருசியை விருத்தியடையச் செய்யும் என்று ருத்திராக்‌ஷத்தைச் சிறப்பித்து நிரூபித்திள்ளனர். 
  • இது சில மன நோய்களுக்கும் சாந்தமளிக்கும் என்று கண்டுள்ளனர்.
  • மேலும் பல மருந்துகளிலும் ருத்திராக்‌ஷம் ஒரு சேர்வைப் பொருளாகும். 
  • கண்டகாரி, திப்பலி என்பவையுடன் ருத்திராட்சை சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். 

இப்படி ருத்ராக்‌ஷத்தில் தேடத்தேட ஒளடத குணங்கள் ஏரளமாக இருக்கின்றன என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com