குழந்தைப் பருவத்தை தொலைத்து நிற்கிற இந்த அப்பாவி குழந்தைகளின் துயர நிலையிலிருந்து மீட்க உதவுங்கள்!

இந்தியாவின் பொறுப்புணர்வும், நேர்மைத்தன்மையும் கேள்விக்கு உட்படுத்த முடியாதது என்றாலும்
குழந்தைப் பருவத்தை தொலைத்து நிற்கிற இந்த அப்பாவி குழந்தைகளின் துயர நிலையிலிருந்து மீட்க உதவுங்கள்!
Published on
Updated on
5 min read

கொத்தடிமை தொழில்முறை என்பது குடும்ப அல்லது அவசர நிலைகளுக்காக முன்பணம் / கடன் வாங்கியிருக்கக் கூடிய வசதி குறைவான நபர்களிடமிருந்து கட்டாய வேலையை நிர்ப்பந்தத்தின் கீழ் பெறுகிற ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறையாகும். வாங்கிய கடனை ஃ முன்பணத்தை திரும்பச் செலுத்துமாறு செய்கின்ற போர்வையின் கீழ் இந்த கொத்தடிமை தொழிலாளர்கள் உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு ஒரு நாளுக்கு 18 மணிநேரங்களுக்கும் அதிகமாக கடுமையாக வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதுடன் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் கீழ் சிறை கைதிகள் போல வைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் ஒட்டுமொத்த குடும்பங்களுமே கொத்தடிமையில் சிக்கவைக்கப்படுகின்றன. கொத்தடிமையில் இருக்கும்போது பிறக்கும் குழந்தைகளும்கூட தங்களது பெற்றோர்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதற்காக அடிப்படை மனித உரிமைகளையும், கல்வி கற்பதற்கான வாய்ப்பையும் மற்றும் வழக்கமான குழந்தை பருவத்தையும் இழக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொடர்ந்து பல தலைமுறைகளாக இவர்கள் ஒடுக்கப்பட்டுவருவதால், அநேக நேரங்களில் தாங்கள் கொத்தடிமைச் சூழலின் கீழ் வாழ்ந்துவருகிறோம் என்ற உண்மையைக்கூட அறியாதவர்களாக தாங்கள் இருந்ததை பாதிக்கப்பட்ட இவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். வாங்கிய கடனை திரும்ப செலுத்தமுடியாத கடனாளியாக இருக்கிற குற்ற உணர்வு இவர்கள் மீது திணிக்கப்படுவதால், கடுமையான உழைப்பின்மூலம் கடன் கொடுத்த முதலாளிக்கு வேலை செய்ய தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக இவர்கள் நம்புகின்றனர். இந்த உழைப்பின்மூலம் முதலாளி கொழுத்த இலாபம் பெறும்போது, இவர்களுக்கு கிடைப்பதோ மிகச்சிறிய தொகை மட்டுமே. 

குழந்தை கொத்தடிமை தொழிலாளர்கள் உடல் ரீதியான மற்றும் உள ரீதியான தொந்தரவுகளையும், சித்தரவதைகளையும் எதிர்கொள்கின்றனர். தங்களது சக குழந்தை கொத்தடிமை தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படுகிற அடி, உதை மற்றும் வன்முறையை நேரடியாக காண்பது இவர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. அடி, உதை, தொந்தரவோடு அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டாலும் பதில்வினையாற்றத் தெரியாமல் அமைதியாக வாய்மூடி மௌனிகளாக இருக்க இவர்கள் கற்றுக்கொள்கின்றனர். பிறர் மீது நம்பிக்கை இல்லாமல் அவர்களிடமிருந்து விலகி ஒதுங்கி இருப்பவர்களாகவும் மற்றும் பிறரைக் கண்டு அச்சத்தில் உறைபவர்களாகவும் இக்குழந்தைகள் வளர்கின்றனர். எதிர்காலத்திற்கான எந்த நம்பிக்கையும் இல்லாமல் பயனோ, மதிப்போ இல்லாத வாழ்க்கையை இவர்கள் வாழ்கின்றனர். கொத்தடிமை தொழில்முறையில் சிக்கியுள்ள பல குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவும், நெருக்கடியும் அவர்கள் அடிக்கடி எதிர்கொள்கின்ற ஒரு எதார்த்தமாக இருக்கிறது. தங்களது பணியமைவிடங்களிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் விரும்பியபடி சென்று வருவதற்கு எந்த சுதந்திரமும் இவர்களுக்கு இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையை இவர்களது உடல்சார்ந்த, உளரீதியான மற்றும் அறிவு சார்ந்த முன்னேற்றம் என்பது சாத்தியமற்றதாகவே ஆகிவிடுகிறது. சுருங்கக்கூறின், அவர்களது அனைத்து உரிமைகளும் மற்றும் மனித நபர்களாக உணர்வுகளும், சுய மதிப்பும் மீறப்படுகின்றன மற்றும் அவர்களது கண்ணிய உணர்வு நசுக்கப்படுகிறது. 

கொத்தடிமையில் அவதிப்படுகிற இத்தகைய குழந்தைகளை பாதுகாக்கவும், விடுவிக்கவும் மற்றும் மறுவாழ்வளிக்கவும் தனது அரசமைப்பு சட்டத்தின்கீழ் இந்தியா ஏற்கனவே பல விதிகளை கொண்டிருக்கிறது. குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நீதி என்பது நமது அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றுள்ள ஒரு வெளிப்படையான வாக்குறுதியாகும். நமது அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சிறப்பான விதிமுறைகளின் அணிவரிசையை கவனியுங்கள்:

  • பிரிவு 21 உயிர்வாழ்வதற்கான மற்றும் விடுதலைக்கான உரிமைக்கு உத்தரவாதமளிக்கிறது;
  • பிரிவு 23 கடன் மூலம் ஏற்படும் கொத்தடிமை நடைமுறை மற்றும் அடிமைத்தனத்தின் பிற வடிவங்கள் செயல்படுத்தப்படுவதை தடைசெய்கிறது;
  • பிரிவு 24, 14 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பிற ஆபத்து நிறைந்த பணிகளில் வேலைக்கு ஈடுபடுத்தப்படுவதை தடைசெய்கிறது;
  • பிரிவு 21யு மற்றும் பிரிவு 45 ஆகியவை, 6 மற்றும் 14 வயதுக்கு இடைப்பட்ட பிரிவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்விக்கு வகை செய்வதாக உறுதியளிக்கிறது.

ஏற்கனவே கொத்தடிமையாக இருக்கிற குழந்தைகளோடு, கொத்தடிமையில் பாதிக்கப்படக்கூடிய நிலையுள்ள குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்கு நமது நாட்டில் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு பஞ்சமே இல்லை. 1976ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை (ஒழிப்பு) சட்டம் பொதுமக்களில் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் சுரண்டப்படுவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கத்தோடு கொத்தடிமை தொழில்முறை ஒழிக்கப்படுவதற்கு வகை செய்கிறது. 1986ம் ஆண்டின் குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் அனைத்து பணிகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதையும் மற்றும் வளரிளம் பருவத்திலுள்ள சிறார்களை ஆபத்தான பணிகள் மற்றும் செயல்முறைகளில் ஈடுபடுத்துவதையும் தடைசெய்கிறது. 2000ம் ஆண்டின் குழந்தைகளின் இளவர் நீதிமுறைச் சட்டம் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு), ஆபத்தான பணிகளில் ஒரு குழந்தையை பணியமர்த்துவதை அல்லது பணியமர்த்துவதற்காக கொள்முதல் செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குகிறது. இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 370ன்படி ஒரு குழந்தை மனித வணிகத்திற்காக கடத்தப்படுமானால், அத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் குறையாத கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் மற்றும் ஒரு குழந்தைக்கும் அதிகமான நபர்கள் கடத்தப்படும் குற்றம் செய்யப்படும்போது அதற்கான தண்டனை 14 ஆண்டுகளுக்கும் குறையாத காலஅளவிற்கு கடுங்காவல் தண்டனையாக இருக்கும்.

குழந்தை கொத்தடிமை தொழில்முறையை நேரடியாக அல்லது மறைமுகமாக தடைசெய்கிற பல சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியாவால் கையெழுத்திடப்பட்டு சட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட, குழந்தையின் உரிமைகள் மீதான சாசனம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இச்சாசனத்தின் பிரிவு 32(1) கீழ்வருமாறு குறிப்பிடுகிறது: 
'பொருளாதார சுரண்டலிலிருந்தும் மற்றும் ஆபத்தானதாக இருக்கக்கூடிய எந்த பணியை செய்வதிலிருந்தும் அல்லது குழந்தையின் கல்விக்கு இடையு+று செய்யும் நடவடிக்கையிலிருந்தும் அல்லது குழந்தையின் உடல்நலம் அல்லது உடல் ரீதியான, உளரீதியான, ஆன்மிக, நன்னெறி சார்ந்த அல்லது சமூக முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கிற அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான குழந்தையின் உரிமையை அரசு தரப்புகள் அங்கீகரிக்கின்றன.’ இத்தகைய சர்வதேச சாசனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மீது இந்தியாவின் பொறுப்புணர்வும், நேர்மைத்தன்மையும் கேள்விக்கு உட்படுத்த முடியாதது என்றாலும் கள அளவில் இது குறித்து அதிகளவில் செயல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியமாகும்.

இத்தகைய விரிவான சர்வதேச சாசனங்கள், ஒப்பந்தங்கள், அரசியலமைப்பு விதிமுறைகள், குற்றவியல் சட்டவிதிகள் மற்றும் சட்டங்கள் இருக்கின்ற போதிலும்கூட இத்தகைய கொடுமையான குற்றங்கள் ஏன் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்பது பதிலளிக்கப்பட முடியாத ஒரு புதிர் அல்ல. தங்களது குற்றத்திற்கு வெளிப்படையாக எந்த சவாலும் இல்லை என்பதால் குற்றமிழைப்பவர்கள் தண்டனை பெறாமலேயே அவர்களது குற்றங்களிலிருந்து எளிதாக விடுபடுகின்றனர். குற்றமிழைக்கிற தங்களது முதலாளிகளை கேள்வி கேட்பதற்கோ, எதிர்த்துப்பேசுவதற்கோ குழந்தைகளுக்கு திறனும், தைரியமும் இருப்பதில்லை. வாக்களிக்கும் உரிமைகள் இல்லாத கொத்தடிமைப்பட்டிருக்கும் குழந்தைகள் எந்தவொரு அரசியல் கட்சியின் சிறப்பு கவனத்தை பெறுபவர்கள் அல்ல. ஆகவே, ஒரு சில சமூக போராளிகள் மற்றும் சமூக நலன் அடிப்படையிலான நிறுவனங்களை தவிர்த்து எந்தவொரு நபரும் இந்த பிரச்சனையை அரசியல் ரீதியாக பேசுவதற்கோ, நீதிக்காக போராடுவதற்கோ விரும்புவதில்லை. இந்நாட்டில் பொது நீதி அமைப்பு முறையும் இந்த இளம் குழந்தைகளின் ஆதரவற்ற நிலையை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. நீதிமுறை அமைப்பில் தீர்வு காணப்படுவதற்கு மிக முக்கியமான திறன் மற்றும் அமைப்பு ரீதியான உள்ளமை இடைவெளிகள் இருக்கின்றன.  எடுத்துக்காட்டாக, இத்தகைய வழக்குகளில் விரைவாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்ய நடைமுறைப்படுத்தக்கூடியவாறு, குறைபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்த 21வது நூற்றாண்டிலும் குழந்தைகளை நவீன முறையில் அடிமைப்படுத்தும் முறை தொடர்ந்து நிகழ்வதை பொதுமக்களும், ஊடகங்களும் இன்னும் அறியாத நிலையிலேயே இருப்பதாக தோன்றுகிறது. ஊடகங்களின் கண்களில் இவைகள் தென்படுவதில்லை. குழந்தை கொத்தடிமை தொழில்முறை தங்களது மாநிலங்களில் இல்லவே இல்லை என்று பல மாநில அதிகாரிகள் திரும்பத்திரும்ப உறுதியாக மறுக்கின்றனர். அனைத்து மாநில அரசுகளுமே இதை பிற மாநிலங்களின் பிரச்சனை என்று கருதுகின்றன. 1980களின் மத்தியில் இந்தியாவில் ஹெச்ஐவி ஃ எய்ட்ஸ் முதன்முறையாக தோன்றியபோது இருந்த சூழலை இது எனக்கு நினைவு+ட்டுகிறது. தங்களது மாநிலத்தில் ஹெச்ஐவி என்ற ஆட்கொல்லி நோய் இருப்பதை இந்நாட்டிலுள்ள எந்த மாநிலமுமே ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. அப்போது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தான் ஹெச்ஐவி வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்த நோய்க்கு உரிய பதில் வினையாற்றும் அமைப்புகளை நிறுவுவதில் காலதாமதமும் மற்றும் பிரச்சனையை பற்றி அதிகளவில் அறநெறி சார்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விவாதங்கள் நிகழ்ந்தன என்ற போதிலும்கூட தமிழ்நாட்டைத் தொடர்ந்து பிற இந்திய மாநிலங்களும் இந்த வைரஸ் தங்கள் மாநிலங்களிலும் இருப்பதை ஒப்புக் கொள்ளத் தொடங்கின.

குழந்தை கொத்தடிமை தொழில்முறை விஷயங்களிலும்கூட தமிழ்நாடு மாநிலமானது ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுத்து அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னோடியாக மேற்கொள்வதன் மூலம் பிற மாநிலங்களும் இதனை பின்பற்றுமாறு வழிகாட்டலாம். உண்மையில், இந்தியாவில் அனைத்து குடிமக்களின் நீதி மற்றும் சுதந்திரம் குறித்து அக்கறை கொண்டிருக்கும் அனைவரின் பொறுப்பாகவும் இது இருக்கிறது. குழந்தை பருவத்தை தொலைத்து நிற்கிற இந்த அப்பாவி குழந்தைகளின் துயர நிலையையும், படும் கடும் சிரமங்களையும் அனைவருமே அறியுமாறு செய்வதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com