Enable Javscript for better performance
can you live in chennai without knowing tamil?!|தமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா?- Dinamani

சுடச்சுட

  

  தமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா?

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 11th January 2018 06:21 PM  |   அ+அ அ-   |    |  

  tamil

   

  இப்படி ஒரு கேள்வி விவாத இணையதளமொன்றில் கேட்கப்பட்டிருந்தது. யோசித்துப் பார்க்கையில் ‘முடியும்’ என்று தான் தோன்றுகிறது. 

  சென்னையில் தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தாலும் கூட நிச்சயம் காலம் தள்ளி விட முடியும். ஏனென்றால் தமிழ் தான் பேசுவேன் என்று அடம்பிடிப்பவர்களைத் தவிர மற்ற ஏனையோரில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் அத்துப்படி. குறைந்த பட்சம் பட்லர் ஆங்கிலத்திலாவது ஆங்கிலம் மட்டுமே பேசிடப் பிரியம் கொண்டவர்கள் நிறைந்த ஊர் இது. அவர்களுடன் நீங்கள் தமிழில் பேசினாலும் கூட ஆங்கிலத்தில் தான் பதில் சொல்வார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்லியும், தொடரும் உரையாடலின் போது நீங்கள் தமிழில் பதில் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களை கொசுவைப் போலப் பாவித்து உங்களிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டு இதர பட்லர் ஆங்கில விற்பன்னர்களுடன் தங்களது கடலையைத் தொடர்வார்கள். ஆகையால் சென்னையைப் பொருத்தவரை தமிழ் பேசத் தெரியாதது ஒரு பெருங்குற்றமாக இங்கத்திய மக்களால் கருதப்படவில்லை. 

  புறநகர்ப் பகுதிகளில் கட்டட வேலைகளுக்கென வரும் வட இந்தியர்கள் தமிழ் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, அவர்களுக்காக ‘தோடா... தோடா இந்தி மாலும்’ சொல்லி ‘தஸ் அண்டா 60 ரூபீஸ்’ (10 முட்டை 60 ரூபாய்) என்று காக்டெய்லாக இந்தி பேசி பொருட்களை விற்பது நம்மூர் மளிகைக் கடை அண்ணாச்சிகளுக்கு பிரமாதமான வேலை இல்லை. பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் தமிழ் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, பிழைப்புக்காக நாம் இந்தி தெரிந்தாற் போல காட்டிக் கொள்ள முயல்வதும் இங்கு வாடிக்கையே! அங்கே மட்டுமா? தெருவுக்கு ஐந்தாறு அழகு நிலையங்கள் வந்த பின், அங்கே வேலைக்கென வந்து நிற்பவர்களில் பாதிக்குப் பாதி வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவர்களே! அந்தப் பெண்களுக்கு தமிழ் கொஞ்சிக் கொஞ்சி இத்தனூண்டாக வருமென்றாலும், அதைக் கேட்டுக் கொள்ள தமிழ் கூறும் நல்லுலகில் பெண்களுக்குப் போதிய அவகாசங்களோ, சகிப்புத் தன்மைகளோ இருந்ததில்லை. ஆம், நம்மூர் பார்லர்களில் பெரும்பாலான நாரீமணிகளும் ஸ்டைலாக ஆங்கிலம் பேசி பதிலுக்கு அந்த வடகிழக்கு இந்தியப் பெண்கள் தரும் உடைந்த ஓட்டை உடைசல் ஆங்கிலத்தைக் காதாரக் கேட்டு மகிழ்ந்து கொள்கிறார்கள்.

  பெருநகர ஷாப்பிங் மால்களில் தமிழ் பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அங்கே தொட்டதற்கெல்லாம் ஆங்கிலம் மட்டுமே?! அதுமட்டுமல்ல, யோசித்துப் பாருங்கள் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன் அலைவரிசைக்கான கஸ்டமர் கேர் சேவை தொடங்கி, டி.வி, கட்டில், ஃப்ரிஜ், ஏ.சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கஸ்டமர் சேவை, இந்தியாவின் A டூ Z வரையிலான அனைத்துத் தகவல்களையும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பெறத்தக்க வகையில் இயங்கும் ஜஸ்ட் டயல் மொபைல் சேவை, என எல்லாவிதமான சேவைகளையும் நீங்கள் இணைய வழியாகவோ அல்லது அலைபேசி வழியாகவோ பயன்படுத்த வேண்டுமெனில் உங்களுக்கு குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் ஒன்று சொல்ல நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள எல்லாமே குழப்படியாக முடிந்து உச்சபட்ச டென்சனில் அலற வைக்கக் கூடியவை இவை. சுருக்கமாகச் சொல்வதெனில் நாம் பயன்படுத்தும் அலைபேசிச் சேவைகளும், வங்கி கஸ்டமர் கேர் சேவைப் பிரிவுகளும் எல்லாவகையிலும் நம்மை ஆங்கிலம் பேச நிர்பந்திக்கக் கூடியவையாக மட்டுமே நீடித்து வருகின்றன.

  ஆகையால், இங்கே பிழைப்புக்கென வந்தவர்கள் எவராயினும் மொழி தெரியாவிட்டாலும் கூட காலத்தை ஓட்ட முடியும் என்ற நிலையே இங்கே நீடிக்கிறது.

  ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தமிழ்நாடு உறுதியுடன் இருக்கிறது. அது என்னவென்றால்; அயலகத்திலிருந்து இங்கே பெட்டியைக் கட்டிக் கொண்டு பிழைக்க வரும் எவரையும் தமிழகம் எப்போதும் தனது மொழியால் அச்சுறுத்த விரும்பியதில்லை. மாறாக அவர்களை அரவணைத்துக் கொள்ளவே இந்தப் புண்ணிய பூமி விரும்பி இருக்கிறது. விரும்புகிறது. இங்கே தமிழரற்ற பிற மாநிலத்தார் நினைவு கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம்... தமிழ்நாட்டில் தமிழ் பேசத் தெரியாவிட்டால் கூட மக்கள் சகித்துக் கொள்வார்கள். ஆனால், பிழைப்புக்காக இங்கே வந்து விட்டு, தமிழர்களை இரண்டாம் தரமாகக் கருதி இழிவாகப் பேசினால் மட்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. ஆகவே, தமிழ் தெரியாத யார் வேண்டுமானாலும் சென்னையில் வந்து தங்கள் குப்பையைத் தாராளமாகக் கொட்டிக் கொள்ளலாம். தகைமைசால் சென்னை வாழ் மக்கள் அதைச் சகித்துக் கொள்வார்கள். ஆனால், ஒருபோதும் அவர்களது தன்மானத்தைச் சீண்டிவிடாதீர்கள். தாங்கிக் கொள்ளவே மாட்டான் தமிழன்! நீங்கள் அன்பைக் கொடுத்தால் பதிலுக்குப் பன்மடங்காக அன்பைக் கொட்டத் தெரிந்த தமிழர்களுக்கு நீங்கள் வஞ்சத்தைப் பரிசளித்தால் பதிலுக்கு வஞ்சத்தைத் தரமாட்டார்கள் மாறாக உங்களை அஃறிணை லிஸ்டில் சேர்த்து விட்டு பொருட்படுத்தாது போய்க் கொண்டே இருப்பார்கள். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai