இன்று உழைப்புச் சுரண்டலுக்கான சர்வதேச மனிதக்கடத்தல் மற்றும் மனித வணிக எதிர்ப்பு தினம்!

இத்தனை ஆண்டுகளில் ஒருவர் கூட தண்டனை பெற்றிராத இந்த பூதத்தொழிலில் கோடிகோடியாய் லாபம் புரளுகிறது. தமிழகக் குழந்தைகளின் உழைப்பு உறிஞ்சப்பட்டு வஞ்சகமாக கொள்ளை லாபமடிப்போரைத் தடுப்பார் யாருமிலர். 
இன்று உழைப்புச் சுரண்டலுக்கான சர்வதேச மனிதக்கடத்தல் மற்றும் மனித வணிக எதிர்ப்பு தினம்!

வெளிச்சம் உமிழ்கின்ற இருட்டு...

இன்று சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கான மனித வணிக எதிர்ப்பு தினம்!

இந்த நாளில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக துக்ககரமான விஷயம் என்னவெனில், உலகம் முழுவதிலுமிருந்தும் உழைப்புச் சுரண்டலுக்காக கடத்தப்பட்டும், பெற்றொர் சம்மதத்தோடு முகவரி அறிவிக்காது அழைத்துச் செல்லப்படும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதும், அதை முற்றிலும் தடுப்பதற்கான வழிகளைத் தேடி நமது அரசுகள் மலைத்து நிற்கும் அவலத்தையும் தான்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஜனநாயக நாட்டில் மக்களின் ஏழ்மை நிலையை, அறியாமையை, அறுவடை செய்யும் உழைப்புச் சுரண்டலுக்கான மனிதக்கடத்தல் ‘வேலைவாய்ப்பு’ எனும் வெளிச்ச பிம்பத்தால் சுரண்டல் எனும் இருட்டை உமிழ்கிறது. 14 வயதிற்கும் குறைவான சிறுவர்கள், 18 வயதிற்கும் குறைவான வளரிளம் பிள்ளைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எந்த வேறுபாடுமின்றி எண்ணற்றோர் இந்த மாயக்களத்தால் ஈர்க்கப்பட்டு மீட்பாரின்றி வாழ்வைத் தொலைத்து நிற்கின்றனர். 

ஏழ்மை நிறைந்த கிராமங்களில் கல்வி வளமற்ற வறியோர் வாழும் பகுதிகளைக் குறிவைத்து இந்த உழைப்புச் சுரண்டலுக்கான இடைத்தரகர்கள் நுழைந்து 5000, 10,000 ரூபாய் என முன்பணம் கொடுத்து வடஇந்தியாவில் உன் மகன்களுக்கு பெரிய சம்பளம் கிடைக்கும்; நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என மாய வித்தை காட்டி, குழந்தைகளை அழைத்துச் சென்று முறுக்குக் கம்பெனியிலும், உணவகங்களிலும் பல முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து கமிஷன் பெறும் சட்ட விரோத தொழில் அபாரமாகத் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது. இத்தனை ஆண்டுகளில் ஒருவர்கூட தண்டனை பெற்றிராத இந்த பூதத்தொழிலில் கோடிகோடியாய் லாபம் புரளுகிறது. தமிழகக் குழந்தைகளின் உழைப்பு உறிஞ்சப்பட்டு வஞ்சகமாக கொள்ளை லாபமடிப்போரைத் தடுப்பார் யாருமிலர். 

மொழி தெரியாத, பழக்கமில்லாத, பாதுகாப்பற்ற சூழலில் வடஇந்திய தொழிற்கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்ததமிழ்ச் சிறுவர்கள் சம்பளமின்றி, தங்கும் வசதியின்றி, ஓய்வின்றித் தங்கள் பிஞ்சு உடலை மனத்தோடு சேர்த்து உருக்குலைக்கிறார்கள். யாரிடமும் புகார் சொல்ல முடியாத அனாதைகளாய் குழந்தைகள் அங்கே! போதாக்குறைக்கு அவ்வப்போது அடிஉதைகள் வேறு! 

எங்கே தன் மகன் இருக்கிறான்? என்று கூடத் தெரியாமல் ஏஜெண்டின் பேச்சை நம்பி அனுப்பி மகன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்று கூட அறியமுடியாமல் ஆயிரமாயிரம் பெற்றோர்கள் இங்கே. அடிமாடுபோல் வேலை... வேலை... வேலை எனக் கட்டாயப் படுத்தப்பட்டு வேலை வாங்கப்படும் சிறுவர்களுக்கு இனி யார் எங்களை வந்து காப்பாற்றப் போகிறார்கள்?! இனி எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா?! எனும் நம்பிக்கை அற்றுப்போகாமல் வேறு என்ன செய்யும்?

‘அப்பன் கடன் வாங்கியிருக்கிறான், அதைத் தந்து தீர்க்கும் வரை நீ அடிமையாக வேலை பார்க்க வேண்டும்’ என அடிப்படை உரிமைகளை காற்றில் பட்டமாய் பறக்கவிட்டும், கடனுக்கு அடமானமாய் குழந்தைகளின் உழைப்பு எனக் குற்றவுணர்வோடு வெளியே சொல்ல வலுவில்லாமல், வழியுமில்லாமல் கூனிக்குறுகி வலியைத் தாங்கி வாழ்ந்துவரும் இந்த கூட்டத்திற்கு, உழைப்புச்சுரண்டல் தண்டனைக்குரிய குற்றம் என அறுதியிட்டு கூறும் அரசியல் அமைச்சகச் சட்டம் ஷரத்து 23-ம் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 370  - ம் எங்கே வந்து உதவும்?

இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 370 மனித வணிகம் எனும் உழைப்புச்சுரண்டலை ஆயுள் தண்டனைக்குரிய குற்றம் என வரையறுக்கிறது. 

உழைப்புச் சுரண்டலுக்காக ஒருவர் மற்றொருவரை கட்டாயப்படுத்தியோ, ஆசைவார்த்தை காட்டியோ, இணங்கவைத்தோ, அச்சுறுத்தியோ, வேலைக்கு அமர்த்துவது அல்லது போக்குவரத்துச் செய்வது அல்லது தங்கவைப்பது, பெறுவது, மாற்றுவது ‘கொடும் தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடப்படுகிறது. இதைக் கண்காணிப்பதற்காகவே ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு எனும் காவல் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இவையனைத்தும் இருந்தும் இந்த பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வாழ்வில் இன்னும் வசந்தம் வீசவில்லையே? அதுஏன்?

சூர்யா எனும் இச்சிறுவன் தற்போது மீட்கப்பட்டு தச்சுவேலை கற்று வருகிறார்

2013ம் ஆண்டில், வெறும் ரூ.1000 முன்பணம் கொடுக்கப்பட்டு விஜய், சூரியபிரகாஷ் எனும் சிறார்கள் வட இந்திய முறுக்குக் கம்பெனிக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அடமானமாக அழைத்துச் செல்லப்பட்டனர். உணவு தயாரிப்பில் சேர்க்கும் வண்ணத்தை அளவுக்கு அதிகமாக சமோசாவில் சேர்த்ததற்காகக் கோபத்தில் விஜய்யின் காலில் கொதிக்கும் எண்ணெயை அந்த முதலாளி ஊற்றி விட மிக மோசமாக புண்ணாகித் தப்பித்து வந்த விஜய்யைப் பார்த்து அவனது பெற்றோர் அச்சத்தாலும், அதிர்ச்சியாலும் வாயடைத்து நின்றனர். அவனோடு சென்ற சூரியபிரகாஷின் நிலைஅறியாத பெற்றோர் ஏஜெண்ட் மூலம் தொடர்பு கொண்டபோது அவனைக் காணோம் என பதில் வந்தது. ஆட்கொணர்வு மனு மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் சூரியபிரகாஷ் விடுவிக்கப்பட்ட போது அவனுக்குவயது 17. 

மிகக் குறைந்த ஊதியத்திற்காக மிகமோசமான சூழ்நிலைகளில் சிக்குண்டிருக்கும் சிறார்கள் அவர்கள் பணிபுரிகின்ற இடங்களில் துன்புறுத்தலுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் அந்த இடத்தை விட்டு வெளியே எங்கும் செல்வதற்கும் அவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பலகாரக் கடையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் 15 மணிநேரம் வேலை செய்து வந்த 15 வயதான மாரிமுத்து என்ற சிறுவனுக்கும் இப்படித் தான் நடந்தது. அவனது கால்களில் கொதிக்கும் எண்ணெயை அவனது முதலாளி கொட்டியதற்குப் பிறகு விஜயைப் போலவே மாரிமுத்துவும் அங்கிருந்து தப்பி ஓடி இரயிலில் பயணச்சீட்டு கூட இல்லாமல் பயணித்து மதுரைக்கு வந்து சேர்ந்தான்.

இது குறித்து மதுரைக் காவல்துறையில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டும், இக்குற்றச்செயல் வேறுமாநிலத்தில் நடந்தது எனும் சட்டச்சிக்கலால் இவ்வழக்கு சின்னா பின்னமானது. 

இத்தகைய நிகழ்வுகள் அசாதாரணமானவையல்ல என்பது வருத்தத்திற்குரியது.

உழைப்புச் சுரண்டலுக்காக கொத்தடிமைகளாக்கித் தந்திரமாக வடஇந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த சுமார் 120 இளம் சிறார்களைக் கண்டுபிடிப்பதற்காகத் தமிழ்நாட்டுக் காவல்துறை சிபி-சிஐடி அதிகாரிகளும்  இந்த இளம் சிறார்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக மதுரை நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்குச் சென்று மீட்டனர். தண்டிக்கப்படுவோம் என்ற அச்சஉணர்வு குற்றவாளிகளுக்கு இல்லாததே இந்த குற்றச்செயல்கள் தொடர்ந்து பரவலாக நிகழ்வதற்கான ஒரு முக்கியகாரணமாகும். 

இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நமக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை அளிப்பது போல 2017-ம் ஆண்டுஆகஸ்டு 16ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது 'கொத்தடிமைத் தொழிலாளர்கள் அல்லது கட்டாய மாற்றம் செய்யப்படும் குழந்தைதொழிலாளர்கள் மீது நெருக்கமான கண்காணிப்பை வைத்திருப்பதற்காக 'விதி, ஒழுங்குமுறை அல்லது சட்டமியற்றல் வரைவு வடிவத்தை 3 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலத் தொழிலாளர் நலத்துறையின் செயலருக்கு உத்தரவிட்டது. 1986ம் ஆண்டின், குழந்தைத் தொழிலாளர் (தடைமற்றும் ஒழுங்கு) சட்டம் மற்றும் 1979ம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையிலான புலம் பெயர் தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகள் ஆகியவற்றின் கீழ், ஒரு பதிவேட்டைப் பராமரிப்பது சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதைப்போல் பிற பிராந்தியங்களில் வேலை செய்வதற்காகக் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்கிற இளம்சிறார்கள் குறித்த எந்தபதிவேட்டையும் தொழிலாளர் நலத்துறை பராமரிக்கவில்லை எனும் நிலையில் நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது. 

மத்தியஅரசின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடுஅமைச்சகத்தால் ஒரு புதியமசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மனிதவணிகம் (தடைசெய்தல், பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2017-ன்படி மனிதவணிக உழைப்புச்சுரண்டல் குற்றத்தில் ஈடுபடும் அனைவருக்கும் கடும் தண்டனை விதிக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. 

எனினும், ஒவ்வொருமுறையும் உயர்நீதிமன்றங்களின் தலையீட்டால் மட்டுமே நடவடிக்கை என்றில்லாமல் தாமாக முன்வந்து தவித்துக்கொண்டிருக்கும் சிறார்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத்தக்க நடவடிக்கை எடுக்க அரசு இயந்திரங்கள் முனைப்புக் காட்டும் முன்னேற்றம் ஏற்படட்டும், என இந்தச் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கான மனித வணிக எதிர்ப்பு தினத்தில் சபதமேற்போம்!

கட்டுரையாளர் - டேவிட் சுந்தர் சிங் (வழக்கறிஞர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com