இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வோம், யார் பேசினாலும் அமைதியாக கேட்போம். ஆனால் வாக்களிக்கும் போது மட்டும் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம்', என்ற நிலைக்கு தமிழக வாக்காளர்கள் தயாராகி வருகிறார்கள். இதை அரசியல் கட்சிகள் புரிந்து வைத்திருக்கின்றன. அதன் விளைவுதான், ‘நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல', என்று போட்டி போட்டுக்கொண்டு தன்னிலை விளக்கம் கொடுத்துவருகிறார்கள் அரசியல் கட்சிகள்.