தெலங்கானா என்கவுன்டர்: ஒருவேளை உங்களுக்கு கோவைச் சம்பவம் நினைவுக்கு வந்திருக்கலாம்!

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி, கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலங்கானா என்கவுன்டர்: ஒருவேளை உங்களுக்கு கோவைச் சம்பவம் நினைவுக்கு வந்திருக்கலாம்!

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி, கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இன்று இந்த செய்திதான் தலைப்புச் செய்தியாகியுள்ளது. சட்டம் மறுத்தாலும், மக்கள் ஏனோ இந்த தீர்வை பெரிதும் ஏற்கிறார்கள். இப்போது, சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதை நிச்சயம் வலியுறுத்தினாலும், அதை விட சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டியது கால மாற்றத்தின் அவசியமாகியுள்ளது.

தெலங்கானா என்கவுன்டர் சம்பவம் பற்றி அறிந்ததும் பலராலும் கோவையில் நடந்த சம்பவத்தை நினைவு கூராமல் இருந்திருக்க முடியாது.

2010ம் ஆண்டு, சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியதும், குற்றவாளிகளில் ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, பரவலாக பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டதும் பலருக்கும் நினைவிருக்கலாம்.

இதுதான் அந்த சம்பவம்..

கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், 2010, அக்டோபர் 29-இல் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி - அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகளைக் கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை போலீஸார் 2010, நவம்பர் 9-இல் வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது, கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதால், என்கவுன்ட்டரில் மோகன கிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார். மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012, நவம்பர் 1-இல் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மனோகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2014, செப்டம்பர் 20-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

குற்றவாளியை தூக்கிலிடுவதற்கான சட்ட நடைமுறைகள் நடந்து வந்த நிலையில், குற்றவாளியை தூக்கிலிட இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனோகரனை டிசம்பா் 2-ஆம் தேதி தூக்கிலிட கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கோவை மகளிா் சிறப்பு நீதிமன்றம் கடந்த நவம்பா் 18-ஆம் தேதி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, மனோகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘ஆளுநருக்கு கருணை மனு அனுப்பிவைக்க 6 வார கால அவகாசம் கோரி தமிழக அரசு, சிறைத்துறையிடம் மனு அளித்துள்ளேன். அந்த மனுவை கருத்தில் கொள்ளாமல், தூக்குத்தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என கோரியிருந்தாா். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனோகரனைத் தூக்கிலிட கோவை மகளிா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, மனோகரனின் மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

எனவே, 2010ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com