Enable Javscript for better performance
ஜெர்மனியில் இந்திரதனுஷ் விழா- Dinamani

சுடச்சுட

  
  59879965_1032008567002787_3977187901334093824_o

   

  "ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க" என்ற பழமொழி வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் பொருந்தும். ஊரிலிருக்கும் அப்பா, அம்மா, உடன் பிறப்புகள் என்று எத்தனை பேர் பசியை ஆற்றுகிறார்கள்! அவர்களுக்கென்று ஒரு விழா!! அதுவும் நம் இந்திய தூதரகம் முன்னின்று நடத்தியது என்றால் அதன் சிறப்பை என்னவென்று சொல்ல!

  பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதரகமும், ஜெர்மனியின் Eschborn நகரமும் இணைந்து கடந்த சனிக்கிழமை (11.05.2019) இந்திரதனுஷ் விழாவை ஜெர்மன் வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
  இந்திய நடனம் மற்றும் இசை, இரண்டையும் அடி நாதமாக வைத்து "Wir Lieben das Leben" என்ற ஸ்லோகத்தை ("நாங்கள் வாழ்வை நேசிக்கிறோம்") பிரதானமாகக் கொண்டு இந்திரதனுஷ் விழா கொண்டாடப் பட்டது.

  'Friends of India' குழுவைச் சேர்ந்த திரு.கமல் வரவேற்புரை வழங்க, பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திருமதி.பிரதிபா பார்க்கர் முன்னுரை வழங்கினார்கள். இவர் பேசும் போது"இந்தியாவில் 23 மொழிகள் பேசுகின்ற பலதரப்பட்ட மக்கள், இனம், மதம் என்று வேறுபட்டாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்று பட்டு வாழ்கிறோம்" என்று குறிப்பிட்டார். மேலும், Eschborn நகர நிர்வாகிகளுக்கு, இந்த மாதிரி ஒரு நிகழ்வை நடத்த தங்களுடன் இணைந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததோடு, "கதக், ஒடிசி, குச்சிப்பிடி, தமிழ்நாட்டின் பரதநாட்டியம் என்று இந்தியாவின் பிரபல நடனங்களை, அவை தோன்றிய மாநிலத்தின் பெயரையும் சேர்த்து பட்டியலிட்டதோடு அவை அனைத்தும் உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கு அரங்கேறவிருக்கின்றன" என்றார்.

  அவரைத் தொடர்ந்து, Eschborn நகர சபை முதன்மை உறுப்பினர், திரு.தாமஸ் எபெர்ட் அவர்கள் பேசும் போது" இங்கு 120 நாடுகளிலிருந்து வெளிநாட்டவர்கள் வந்து வேலைசெய்கின்றனர். அவர்களுக்கு எப்போதும் பக்க பலமாய் இருப்போம்" என்றார்.Eschborn நகர மேயர் திரு. மத்தியாஸ் கீகெர் அவர்கள், விடுமுறை நிமித்தம் வெளியூர் சென்றிருந்ததால் அவர் பேசிய வீடியோவை ஸ்கிரீனில் ஒளிபரப்பினார்கள். அவர் பேசும் போது, 
  " இந்தியர்களை நாங்கள் மிகவும் முக்கியமானவர்களாக பார்க்கிறோம், என் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு உண்டு" என்றார்.

  அதைத் தொடந்து, இந்திய தூதரக அதிகாரி திருமதி.பிரதிபா பார்க்கர் மற்றும் Eschborn நகர சபை முதன்மை உறுப்பினர், திரு.தாமஸ் எபெர்ட் இருவரும் குத்துவிளக்கு ஏற்றி வைக்க, விழா ஆரம்பமானது.

  ஜெர்மன் பெண்மணி ஒருவர், இந்தியாவுக்கு வந்து இந்திய கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்து கொள்வது போலவும், அவருக்கு இந்திய பெண்மணி ஒருவர் ஒவ்வொரு கலைநிகழ்ச்சிகளும் விளக்குவது போலவும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

  முதலில் சிறுவர் சிறுமியரின் யோகாசனம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்த, அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நடனங்கள் அரங்கேற, வந்திருந்த அனைவருமே உற்சாக வெள்ளத்தில்!

  நல்ல சகுனமாம் மங்களவழக்கில் ஒலிக்கும் சங்கு ஓசையுடன் ஆலய மணியோசையும் ஒலிக்க, தலையில் முளைப்பாரி ஏந்தி நம் தமிழ் பெண்கள் மேடை ஏறிவர எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அதுவரை, புரியாத பாஷையில் பாடல்களை கேட்ட காதுகளுக்கு எம் தமிழ் மொழி தேனாய் தித்தித்தது. ஏழு பெண்களும்

  "கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க" என்று பாடி, நாடும் மனிதமும் வளரவேண்டும் என்றதோடு பெண் முன்னேற்றமும் வேண்டும் என்று புதுமை பெண்களாய் கும்மி பாட்டுக்கு நடனமாடி தொடங்கி வைத்தனர். அடுத்து இரண்டு பொய்க்கால் குதிரைகள் மேடையின் கீளேழ அட்டகாசமாய் ஆட்டம் போட, மேடையில் ஒயிலாட்டம் தூள் பறக்க, உற்சாகத்தில் பார்வையாளர்கள் இருக்கையின் நுனிக்கு வந்து விட்டனர்.

  ஜல்லிகட்டை ஞாபகப் படுத்தும் விதமாக பாடலை நடனத்தில் இணைத்தது மிகச் சிறந்த புத்திசாலித்தனம்! பாராட்டுக்கள்!! மெரினா ஞாபகம் வந்து போனது. புலி வேஷம் கட்டி ஆடுபவர்களைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இங்கு தான் நேரில் பார்த்தேன். இரண்டு பேரும் தெறிக்க விட்டுட்டாங்க! தப்பாட்டம் ஆடியவர்களின் நடனத்தில் அப்படி ஒரு நேர்த்தி! இவங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும்! லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்று சொல்வார்களே! அது மாதிரி மயிலாட்டம் ஆரம்பமானதும் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அந்த இசை! அய்யோ !! கேட்டுக்கொண்டே இருக்கலாம்!. ஏன் இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டார்கள் என்று மனம் ஏங்கியது.

  கொடுக்கப்படட 10 நிமிடத்தில் தமிழகக் கலைகளை அற்புதமாக மேடையில் அரங்கேற்றிய அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பயிறுவித்தவருக்கும் வாழ்த்துக்கள்!.

  மேலும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு " மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது சுதந்திரப் போராட்டம்" என்ற தலைப்பில் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. கைவினைப் பொருட்கள், இந்திய உணவு வகைகள் என்று கண்களுக்கும், செவிகளுக்கும் மட்டுமல்லாமல் வயிறுக்கும் விருந்து! மொத்தத்தில் அன்றைய நாள் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் அனைவருக்குமே கொண்டாட்டம் தான்!

  புகைப்படங்கள்: திரு. சந்தோஷ் பட்டா (Knowhow Photography) 
  மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai