அதிகரித்து வரும் அரசு மருத்துவமனை அலட்சியங்கள்! விழித்துக்கொள்ளுமா அரசு?

மருத்துவர்களின் அலட்சியத்தினால் உயிரிழப்பு சம்பவங்கள் நாடு முழுவதுமே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
அதிகரித்து வரும் அரசு மருத்துவமனை அலட்சியங்கள்! விழித்துக்கொள்ளுமா அரசு?

சென்னை அம்பத்தூர் மருத்துவமனையில் 9 வயது சிறுமிக்கு காதுக்கு பதில் தொண்டையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 'என் மகளுக்கு நடந்தது போன்று வேறு எந்தக் குழந்தைக்கும் நடக்கக்கூடாது; அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகம் சுகாதாரத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. மற்ற மாநிலங்களை முக்கியமாக, வட மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவே பல்வேறு சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏழை, எளிய மக்களும் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கிலேயே அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. 

சுகாதாரத் துறையில் முன்னிலையில் இருந்து வரும் தமிழகம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதில் தொடர்ந்து மூன்று முறை விருதினைப் பெற்றுள்ளது. 

ஆனால், கடந்த ஜூலை மாதம் நிதி ஆயோக் அமைப்பு சுகாதாரத்துறையில் முன்னிலையில் இருக்கும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டது. முன்னதாக, 3-ஆம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த முறை 9-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. நிதி ஆயோக் எடுத்துக்கொண்ட தரவுகள் தவறானது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளை விட மிகவும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மக்களே 'சர்டிபிகேட்' தருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பல விலைமதிப்புடைய மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட உயர்தர சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தரப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயன்பெறுகின்றனர்.  

இந்த சமயத்தில், ஒரு சில நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் சிறு அலட்சியத்தினால் மேற்குறிப்பிட்டது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்டெட்போர்டு மருத்துவமனையில்  அப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி காதில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், வேறு ஒரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய டான்சில் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் இந்த சிறுமிற்கு செய்துள்ளனர். அதாவது, சிறுமிக்கு காதில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதில் தொண்டையில் உள்ள தசைப்பகுதி அகற்றப்பட்டுள்ளது. 

தவறான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, சம்மந்தபட்ட மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். 'அலட்சியமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். காவல்துறையும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. நோயாளி தொடர்பான தகவல்கள் சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு தவறாக பகிர்ந்ததன் விளைவாகவே இந்தக் குழப்பம் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. 

இதேபோன்று, கடந்த ஆண்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில், அங்குள்ள ஊழியர்களின் அலட்சியத்தால் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னையிலும் மாங்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதால் தானும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஒரு செய்தி வெளியாகி தொடர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவத்துறையே அவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பது என்ன ஒரு கொடுமை? ஏற்கனவே அரசு மருத்துவமனை என்றாலே முறையான, சரியான சிகிச்சைகள் இருக்காது என்று மக்கள் நினைக்கும் சூழலில் இவையெல்லாம் அதற்கு எடுத்துக்காட்டாகத் தானே மாறுகின்றன.

இதுபோல, சமீபத்தில் கோவையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது குழந்தைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட்ட அடுத்த நாள் முழுவதும் குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. பின்னர் தொடைப்பகுதி வீங்க ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் தொடையில் இருந்து ரத்தம் கசிந்தது. இதன்பின்னர் குழந்தையின் தொடைப்பகுதியில் ஊசி உள்ளே இருந்தது தெரிய வந்தது. உடனே அதை அகற்றி விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். குழந்தைக்கு செவிலியர் தடுப்பூசி போட்டபோது ஊசி உடைந்து குழந்தையின் உடலில் சிக்கியுள்ளது. ஒரு ஊசி போடுவதில் கூட அலட்சியம் இருந்தால் எந்த நம்பிக்கையில் மக்கள் அரசு மருத்துவமனையை நாடுவார்கள்? 

ஒன்றல்ல, இரண்டல்ல இதுபோன்று தினமும் சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. 

நாடு முழுவதும் மருத்துவத்துறையில் அலட்சியத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. 2016ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் இது தொடர்பான வழக்குகளில் 11% வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். இதுபோன்ற புகார்கள் குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பெரிதாக  நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. 

மேலும், 2017ல் வெளியான தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 30 முதல் 40% வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும், மாதம் ஒன்றுக்கு 25 முதல் 30 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுபோன்ற அலட்சியங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் தான் காரணம் என்று பெற்றோர்கள் கூறுவது உண்மைதான். ஆனால் மற்றொரு விஷயமும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். அதாவது மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பற்றாக்குறை மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

உதாரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் பேர் சிகிச்சை பெற பதிவு செய்கின்றனர். முக்கியமாக திங்கட்கிழமை புதிதாக சிகிச்சை பெற பதிவு செய்பவரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. ஆனால், அதிகபட்சமாக 1500 மருத்துவர்கள் தான் இங்கு பணிபுரிகின்றனர். செவிலியர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. குறைந்தது 4000 செவிலியர்களாவது தேவைப்படும் பட்சத்தில் 800 செவிலியர்கள் தான் பணியாற்றுகின்றனர். 

மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர மருந்து வழங்குவது, ஸ்ட்ரெச்சரில் நோயாளியை அழைத்து வருவது என்ற ஊழியர்கள் 200 முதல் 300 என்ற எண்ணிக்கையிலே இருக்கின்றனர். ஆள் பற்றாக்குறை இருப்பதால் மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணியாளர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் செவிலியர்களின் உதவிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர். மேலும், பல நேரங்களில் ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகளுக்காக மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்குவதை நான் பார்க்கிறோம்.

ஒரு சில மருத்துவர்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாகவே பணியாற்றுகின்றனர். ஊரகப் பகுதிகளில் ஒரு சில அரசு மருத்துவர்கள் அந்த 8 மணி நேரத்தில் 2 மணி நேரம் மட்டும் நோயாளிகளை பார்த்துவிட்டு செல்கின்றனர். எனவே அரசு இதனை முறைப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பணியிடங்களை அரசு விரைந்து நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப சில லஞ்சம் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. தகுதியான மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட வேண்டும். 

மருத்துவர்களின் அலட்சியத்தினால் உயிரிழப்பு சம்பவங்கள் நாடு முழுவதுமே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மருத்துவர்கள், ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் எந்த ஒரு உடல்நலப் பிரச்னைக்கும் மருத்துவர்களை நம்பி இருக்கின்றனர். தன்னலமற்ற, ஒப்பிடமுடியாத சேவையை வழங்கும் மருத்துவர்கள் இனிமேல் இதுபோன்ற தவறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மருத்துவமனையில் தேவைப்படும் வசதிகளை அரசு செய்துகொடுக்க வேண்டும்.

இதுவரை மருத்துவத்துறையில்  அலட்சியங்களினால் தொடரப்பட்ட வழக்குகள் பல இன்னும் விசாரணைக்கு எடுக்காமலே இருக்கின்றன, இதுகுறித்தும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com