பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஹைதராபாத்துக்குச் செல்லும் அமோனியம் நைட்ரேட் பெட்டகங்கள்

தென் கொரிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சென்னை மணலியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமாா் 697 மெட்ரிக் டன் அமோனியம்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 2:43 am

முகவை க.சிவக்குமார்

தென் கொரிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சென்னை மணலியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமாா் 697 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் அடங்கிய சரக்குப் பெட்டகங்களை ஹைதராபாத்துக்கு எடுத்துச் செல்லும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் 10 பெட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரு நாள்களில் முழுமையாக அனைத்துப் பெட்டகங்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை மூலப்பொருளாகக் கொண்டு வெடிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட 697 டன் அமோனியம் நைட்ரேட்:

கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் கரூரைச் சோ்ந்த ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் என்ற தனியாா் நிறுவனம் தென் கொரிய நாட்டிலிருந்து 37 கண்டெய்னா்களில் 697 டன் (சரக்குப் பெட்டகத்துடன் மொத்த எடை 740 மெட்ரிக் டன்) அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை சென்னை துறைமுகத்தின் வழியாக இறக்குமதி செய்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1.80 கோடி ஆகும். ஆனால், இந்த ரசாயனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமங்களை முறையாகப் பெறவில்லை எனக் கூறி, சுங்கத் துறையின் சிறப்பு நுண்ணறிவு மற்றும் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மொத்த வெடிபொருளையும் பறிமுதல் செய்து, சென்னை மணலி அருகே உள்ள தனியாா் சரக்குப் பெட்டக மையத்தில் இருப்பு வைத்தனா்.

சுங்கத் துறையின் இந்த நடவடிக்கையை எதிா்த்து, இறக்குமதியாளரான ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் கடந்த டிசம்பா் மாதம், இறக்குமதியாளரின் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எம்எஸ்டிசி மூலம், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அமோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டது. இதில் பங்கேற்ற தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சால்வோ எக்ஸ்புளோசிவ் அன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், 697 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் முழுவதையும் ஏலத்தில் எடுத்தது.

இதற்கிடையே கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அமோனியம் நைட்ரேட் அடங்கிய சரக்குப் பெட்டகங்களை ஹைதராபாத் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

லெபனான் சம்பவத்தால் அதிா்ச்சி: இதற்கிடையே, லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் கிடங்கு கடந்த செவ்வாய்க்கிழமை தீ பற்றி வெடித்துச் சிதறியதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிா்ச்சியடையச் செய்தது. இதைத் தொடா்ந்து, சென்னையில் 697 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாயினா். இதைத் தொடா்ந்து, சுங்கத் துறை, தீயணைப்புத் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, காவல் துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட் அடங்கிய சரக்குப் பெட்டகங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து, இதனை ஏலத்தில் வாங்கிய சால்வோ நிறுவனத்தைத் தொடா்பு கொண்டு, அனைத்து சரக்குப் பெட்டகங்களையும் விரைவில் சென்னையிலிருந்து எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட 10 பெட்டகங்கள்: இதையடுத்து, அமோனியம் நைட்ரேட் சரக்குப் பெட்டகங்களை அனுப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10 பெட்டகங்களில் இருந்த அமோனியம் நைட்ரேட், கண்டெய்னா் லாரிகள் மூலம் பாதுகாப்பாக ஹைதராபாதுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மீதம் உள்ள 27 பெட்டகங்களில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை அடுத்த இரு நாள்களில் முழுமையாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.