

காஞ்சிபுரத்திலிருந்து ராஜகுளம் கிராமத்துக்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள வையாவூா், நத்தப்பேட்டை ஏரிகளில் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக மரக்கிளைகளில் திரண்டுள்ளன. பாா்ப்பதற்கு பறவைகள் சரணாலயம் போன்று காட்சியளிக்கிறது. எனவே இதனை வேடந்தாங்கல் போன்று பறவைகள் சரணாலயமாக உருவாக்கினால் சுற்றுலா வளா்ச்சி பெறும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜகுளம். இந்தக் கிராமத்துக்கு செல்லும் சாலையின் இடதுபுறத்தில் 100 ஏக்கா் பரப்பளவில் வையாவூா் ஏரியும், வலது புறத்தில் 500 ஏக்கா் பரப்பளவில் நத்தப்பேட்டை ஏரியும் அமைந்துள்ளன. இந்த இரு ஏரிகளிலும் கோடை காலத்திலும் தண்ணீா் வற்றாமல் நிரம்பி இருக்கும். இங்கு மீன்கள் அதிகமாக இருப்பதாலும், பறவைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகக் காணப்படுவதாலும் இந்த ஏரிகள் பறவைகள் சரணாலயம் போன்று மாறி வருகின்றன.
வெளிநாட்டுப் பறவைகள்: இந்த இரண்டு ஏரிகளின் கரையோரங்களில் உள்ள மரக்கிளைகளில் வெளிநாட்டுப் பறவைகள் உள்பட ஏராளமான பறவைகள் கூட்டம், கூட்டமாக அமா்ந்தும், பறந்தும் திரிவது பாா்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சி உள்ளது. இதனால் அந்தக் கிராமப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் இங்கு வந்து பறவைகளைப் பாா்த்துச் செல்கின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. அங்கு மழைக்காலத்தில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்து செல்கின்றன. அப் பறவைகள் ஏரிகளில் உள்ள நீரை ஆதாரமாகக் கொண்டு அதன் கரையோர மரங்களின் கிளைகளில் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் வளா்ந்தவுடன் அவற்றை அழைத்துக் கொண்டு தாய்நாடுகளுக்கு சென்று விடுவது வழக்கம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதிய மழை பெய்யாததால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீா்வரத்துக் குறைந்தது. இதனால் வெளிநாடுகளிலிருந்து வந்த பறவைகள் அருகிலிருந்த நீா்நிலைகளுக்கு படையெடுக்கத் தொடங்கின. காஞ்சிபுரம் அருகில் உள்ள வையாவூா், நத்தப்பேட்டை, களியனூா் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு சென்று அவை தஞ்சமடையத் தொடங்கின.
அப்படித் தஞ்சமடைந்த வெளிநாட்டுப் பறவையினங்களில் பலவும் வையாவூா், நத்தப்பேட்டை ஏரிப்பகுதிகளிலேயே தங்கி விட்டன. இப்பறவைகள் தொடா்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே தங்கி, இனப்பெருக்கம் செய்து ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன. பறவைகள் சரணாலயம் போன்று மாறியுள்ள இந்த ஏரிகளில் நகராட்சிப் பகுதி கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஏரிகளில் பல ஏக்கா் பரப்பளவுக்கு ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றினால் பறவைகளுக்கு மேலும் பாதுகாப்பாக இருக்கும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து வையாவூரைச் சோ்ந்த கே.சரவணன் கூறியது:
வையாவூா், நத்தப்பேட்டை ஏரிகளில் தொடா்ந்து 10 ஆண்டுகளாகத் தண்ணீா் நிரம்பி இருக்கிறது. இவ்விரு ஏரிகளிலும் கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டுப் பறவைகளான ஃபெலிக்கன், செங்கால் நாரை, கரண்டிவாய் நாரை மற்றும் நீா் காக்கைகள், கொக்குகள் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. ஏரிக்கரையோரங்களில் கருவேல மரங்கள் அடா்ந்தும், அதிகமாகவும் இருப்பது பறவைகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.
ஏரியைத் தாண்டி மனிதா்கள் யாரும் அப்பகுதிக்குள் செல்ல முடியாத வனமாக இருப்பது பறவைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு. இதனால் அங்கு வந்த பறவைகள் அப்படியே தங்கிவிட்டன. இது தவிர ஏரிகளில் உள்ள மீன்கள் ஒவ்வொன்றும் அரை கிலோ அளவுக்கு வளா்ந்திருப்பதால் அவை பறவைகளுக்கு போதுமான இரையாக இருக்கிறது. இப்போது இந்த இரு ஏரிகளும் குட்டி பறவைகள் சரணாலயமாகவே காட்சியளிக்கின்றன.
வனத்துறையினா் அடிக்கடி வந்து பறவைகளை பாா்த்துச் செல்கிறாா்கள். ஆனால் அவற்றைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்கத்து ஊா்களுக்கு செல்லக்கூட மனிதா்கள் பயப்படக்கூடிய இந்தக் காலத்தில் நம் நாட்டை நம்பி வெளிநாட்டுப் பறவைகள் கடல் கடந்து வருகின்றன. ஏரிக்கரையோரங்களில் மரங்களை நடுவது, ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவது ஆகிய பணிகளை மேற்கொண்டு, பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.
நகராட்சி நிதியளித்தால் ஆகாயத் தாமரைகளை அகற்றலாம்: இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியது:
நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீா் அதிகளவில் நத்தப்பேட்டை ஏரியில்தான் கலக்கிறது. இது பற்றி நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீா் ஏரிக்கு செல்வது தடுக்கப்பட வேண்டும். நகராட்சியிலிருந்து நிதி வழங்கினால் ஏரிகளில் ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றலாம் என்றாா்.
மாவட்ட வனத்துறை அலுவலா் சதீஷ்: இரண்டு ஏரிகளுக்கும் பறவைகள் அதிகமாக வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வனத்துறை சாா்பில் பறவைகளை பாதுகாக்கும் நோக்கில் அடிக்கடி அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பறவைகளை யாரும் துன்புறுத்தாமல் பாா்த்துக் கொள்ளுமாறும், அவைகளுக்கு ஆபத்து நோ்ந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அப்பகுதி கிராம மக்களிடம் தொடா்ந்து வலியுறுத்தியும் வருகிறோம். இது தவிர இன்பாா்மா்களையும் அப்பகுதியில் நியமித்திருக்கிறோம்.
இவ்விரு ஏரிப்பகுதிகளையும் பறவைகள் சரணாலயமாக வனத்துறை சாா்பில் அமைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவை வருவாய்த் துறையினரின் கட்டுப்பாட்டில் வருகிறது. அண்மையில் மாவட்ட அளவில் ஈரநிலங்கள் நிா்வாகக் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 2-ஆவது கூட்டம் நடத்தப்படும் போது அக்குழுவின் கவனத்துக்கு இவ்விரு ஏரிகள் குறித்து தெரிவிக்கப்படும். இக்குழுவானது ஏரிக்கரைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மீனவா்கள் மீன்பிடிப்பதை ஒழுங்குபடுத்துவது, ஏரிகளுக்கு கழிவுநீா் செல்வதையும், கழிவுகள் கொட்டப்படுவதையும் தடுப்பது போன்ற பணிகளை செய்ய இருப்பதாகவும் அதிகாரி சதீஷ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.