ரஜினி இவ்வளவு விளக்கிய பிறகும், சில நிர்வாகிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். அப்போது ரஜினி, "நீங்கள் வற்புறுத்தி நான் அரசியலுக்கு வந்து, எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால், எனக்கு ஒன்றுமில்லை. நான் உயிருக்குப் பயப்படவில்லை. வயதானவரை அழைத்து வந்து இப்படிச் செய்துவிட்டார்கள் என்று என் மீது வேண்டுமானால் கருணைப் பார்வை வரலாம். உங்கள் மீது பழி வந்துவிடும். அதேசமயம், உங்களை அரசியலுக்கு அழைத்து வந்து எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்குப் பிறகு என்ன நிலை என்ற கேள்வி எழுகிறது. உங்களை நடுத்தெருவில் விடவும் நான் விரும்பவில்லை' என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த உறுதிக்குப் பிறகு நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்த முடியாமல் சோக நிலைக்குப் போய் உள்ளனர். அதற்குப் பிறகு, "அரசியல் குறித்து நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறோம்' என்று ரஜினிக்கு அனைவரும் உறுதி அளித்துள்ளனர். அதை ரஜினியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.