கோப்புப்படம்
கோப்புப்படம்

அறிவியல் ஆயிரம்: குழந்தையின் தோலைப் போல வயதானோர் தோலில் மாற்றங்களா?

வயது வந்தவரின் தோலைப் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல மீண்டும் உருவாக்க முடியும் என்பதை வாஷிங்டன் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. 

ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பைத் தற்போது அறிவியல் உலகம் அறிந்திருக்கிறது. பொதுவாக மனிதருக்கு வயதானது என்றால்/முதுமை துவங்கிவிட்டதென்றால், அனைத்து உறுப்புகளின் செல்களின் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வரும்.

இப்போது அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் 2020, செப்டம்பர் 29 அன்று ஒரு புதிய கண்டுபிடிப்பை 'இ-லைப்' (eLife) இதழில் வெளியிட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு, வயது வந்தவரின் தோலைப் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல மீண்டும் உருவாக்க, ஒரு மரபியல் காரணி (genetic factor) உதவுகிறது என்பதே. 

புதிதாக அடையாளம் காணப்பட்ட மரபணு காரணி என்பது வயது வந்தோரின் தோல் புதிதாகப் பிறந்த குழந்தையின் தோலைப் போல தன்னைச் சரிசெய்ய அனுமதிக்கிறது. இந்த கண்டுபிடிப்பினால், காயம், சிகிச்சை போன்றவற்றை சரிசெய்யவும்  மற்றும் தோலில் ஏற்படும் முதுமைத் தன்மை ஆகியவற்றைத் தடுப்பதற்கான தன்மைகளைக் கொண்டுள்ளது என்பதுதான்.

மயிர்க்கால்கள் உருவாவதைக் கட்டுப்படுத்தும் குட்டி எலிகளின் தோலில் இந்தக்  காரணியை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர். வயது வந்த எலிகளில் இது செயல்படுத்தப்பட்டபோது, அவற்றின் தோலில் வடு இல்லாமல் காயங்களைக் குணப்படுத்த முடிந்தது. இவ்வாறு புதிதாக சீரமைக்கப்பட்ட தோல்கூட ரோமங்களையும் மற்றும் மயிர்க் கூச்செறியும்போது ஏற்படும் சிறு புடைப்புகளை உருவாக்கும் என்பதே. 

இந்தத் தகவல் 2020, செப்டம்பர் 29 அன்று இ-லைப் இதழில் வெளியிடப்பட்டது. இந்த  ஒரு ஆய்வில், குட்டி எலிகளின் தோலில் உள்ள ஒரு மூலக்கூறு சுவிட்ச் போல செயல்படும் என்ற உண்மையை, ஒரு காரணியை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதன் முதல் வாரத்தில் மயிர்க்கால்கள் உருவாகும்போது அவற்றை இந்த சுவிட்ச் கட்டுப்படுத்துகிறது. பின்னர் இந்த சுவிட்ச் பெரும்பாலும் தோல் உருவான பிறகு அணைக்கப்பட்டு விடுகிறது; வயது வந்தோர்  திசுக்களில் நிரந்தரமாக அணைக்கப்படும். ஆனால், வயதுவந்த எலிகளில் உள்ள சிறப்பு என்னவெனில் இந்த மரபணு காரணியைச் செயல்படுத்தப்பட்டபோது, அவற்றின் தோல் வடு இல்லாமல் காயங்களைக் குணப்படுத்த முடிந்தது.

சீர்திருத்தப்பட்ட தோல்கூட ரோமங்களை உள்ளடக்கியது மற்றும் கூஸ் புடைப்புகளை (goose pumps) உருவாக்கக் கூடும், இது வயது வந்த மனிதர்களின் வடுக்களில் இழக்கப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் (WSU's School of Molecular Biosciences) பிரிவில் பணிபுரியும் உதவிப் பேராசிரியரான ட்ரிஸ்கெல் (Driskell) கூறுகையில், "இளம், பிறந்த குழந்தைகளின் தோலின் இயல்பான திறனைப் போல் இது மீண்டும் வயதான பழைய சருமத்திற்கும் மாற்ற முடிந்தது” என்கிறார்.

மேலும், "இந்த வகையான மீளுருவாக்கம் சாத்தியம் என்பதை நாங்கள் கொள்கை அடிப்படையில் காட்டியுள்ளோம், பாலூட்டிகளில், பிற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில்  அவற்றின் மீளுருவாக்கத் திறன் அறியப்படவில்லை. ஆனால், இருவாழ்விகளான சாலமண்டர்கள் போன்றவற்றில்  முழு உறுப்புகளையும் மீண்டும் வளர்க்கவும், சருமத்தை மீண்டும் உருவாக்கவும் முடிகிறது. இந்த ஆய்வு என்பது நம் மனித இனத்தின் துவக்க கால வளர்ச்சியைப் அறிவதன் மூலம் மனித மீளுருவாக்கம் செய்வதற்கான ரகசியத்தைக் கண்டறியலாம் என்றும் கூறுகிறது.

நாம் இன்னும் உத்வேகத்திற்காக மற்ற உயிரினங்களைப் பார்க்க முடியும், ஆனால் நம்மைப் பார்ப்பதன் மூலம் மீளுருவாக்கம் பற்றியும் அறியலாம்" என்று கூறினார்.

நாம் வளர்ந்து வரும்போது, நம் வாழ்க்கையில் ஒரு முறை புதிய திசுக்களை உருவாக்குகிறோம். வளர்ந்து வரும் மற்றும் வயது வந்தோருக்கான தோலில் மரபணுக்கள் மற்றும் செல்களை ஒப்பிட்டுப் பார்க்க ட்ரிஸ்கலின் குழு, ஒற்றை செல் ஆர்.என்.ஏ வரிசை முறை (single cell RNA sequencing) என்ற புதிய நுட்பத்தைப் பயன்படுத்தியது. தோலை வளர்ப்பதில், அவர்கள் ஒரு டிரான்ஸ்கிரிப்ஷன் (transcription) காரணியைக் கண்டறிந்தனர் - டி.என்.ஏ (DNA) உடன் பிணைக்கும் புரதங்கள் மற்றும் மரபணுக்கள் இயக்கப்படுகிறதா அல்லது அணைக்கப்படுகிறதா என்பதைப் பாதிக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் காணப்பட்ட காரணி, லெஃப்1 (Lef1) என அழைக்கப்படுகிறது, இது பாப்பில்லரி ஃபைப்ரோபிளாஸ்ட்களுடன் (papillary fibroblasts) தொடர்புடையது, அவை பாப்பில்லரி டெர்மீஸில் செல்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இது மேற்பரப்புக்குக் கீழே தோலின் ஒரு அடுக்கு, இது சருமத்திற்கு அதன் இறுக்கமான பளபளப்புத் தன்மையையும், இளமைத் தோற்றத்தையும் தருகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வயதுவந்த எலிகளின் தோலின் சிறப்புப் பெட்டிகளில் லெஃப்1 காரணியைச் செயல்படுத்தியபோது, இது குறைவான வடுவுடன் காயங்களை மீண்டும் உருவாக்கும் தோல்களின் திறனை மேம்படுத்தியது, மேலும், கூஸ் புடைப்புகளை உருவாக்கக்கூடிய புதிய மயிர்க்கால்களையும் வளர்த்தது.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் மைக்கேல் லாங்கக்கரின் பணியைக் கற்றுக்கொண்டபின், சருமத்தை சரிசெய்யும் திறனுக்காக பாலூட்டிகளின் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களைப் பார்க்க ட்ரிஸ்கலுக்கு முதலில் யோசனை வந்தது. மனித கருப்பையில் அவசரகால உயிர்காக்கும் அறுவை சிகிச்சையைச் செய்தபோது, அந்த குழந்தைகள் பிறக்கும்போது அவர்களுக்கு அறுவைச் சிகிச்சையில் எந்த வடுக்களும் இல்லை என்பதை லாங்கக்கரும் அவரது சகாக்களும் கவனித்தனர். 

எலிகளின் மீதான இந்த சமீபத்திய கண்டுபிடிப்பு மனித சருமத்தில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும், ஆனால் இது ஒரு அடித்தள அடிப்படை முன்னேற்றமாகும் என்றும் ட்ரிஸ்கெல் கூறினார்.

தேசிய சுகாதார நிறுவனங்களின் புதிய மானியத்தின் ஆதரவுடன், சருமத்தை சரிசெய்ய லெஃப்1 மற்றும் பிற காரணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு தொடர்ந்து செயல்படும். இந்த ஆராய்ச்சிக்கு மேலும் உதவ, டிரிஸ்கெல் ஆய்வகம் மற்ற விஞ்ஞானிகளுக்கு skinregeneration.org-இல் அணுக ஆர்.என்.ஏ. வரிசை தரவுகளுக்கான திறந்த, தேடக்கூடிய வலை வளத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்தக் காரணி மனிதனில் செயல்பட நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை இதற்காக செய்ய வேண்டும். எதிர்காலத்தில் விரைவில்  இதுவும் சாத்தியப்படும் என்பதே உண்மை. 

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com