அசத்தும் ஆசிரியை, 80 வயதில் ரூ.1 கோடி நன்கொடை
அசத்துகிறார் ஆசிரியை.. திருமணம் செய்து கொள்ளவில்லை. இக்கணம் வரை சிக்கனமாகவே வாழ்ந்து சேமிக்கிறார். சேர்த்த பணத்தை செலவு செய்கிறார். எப்படித் தெரியுமா?


அசத்துகிறார் ஆசிரியை.. திருமணம் செய்து கொள்ளவில்லை. இக்கணம் வரை சிக்கனமாகவே வாழ்ந்து சேமிக்கிறார். சேர்த்த பணத்தை செலவு செய்கிறார். எப்படித் தெரியுமா?
அக்கம்பக்கத்தில் விசாரித்து உறுதி செய்துகொண்ட பிறகு அந்த சின்னஞ்சிறிய வீட்டின் முன்னே படகு போன்ற காரை நிறுத்துகிறார் ஓட்டுநர். "இதுதாங்க ஐயா நீங்க தேடி வந்த வீடு" என்று பின் இருக்கையில் ஆடம்பரத்தையே ஆக்கிரமித்த உடலோடு அமர்ந்திருந்த தன் முதலாளியிடம் சொல்லுகிறார்."யாரு வீடுங்கய்யா இது?"
"நான் படித்த ஆசிரியையுடைய வீடு இது.
இன்னைக்கு இவ்வளவு வசதி வாய்ப்புகளோடு நான் இருப்பதற்குக் காரணமானவர்களில் இவரும் ஒருவர்" என்று சொல்லியபடியே வீட்டுக்குள் நுழைகிறார் காரில் வந்த முதலாளி.
"அம்மா என்னைத் தெரியுதா? நான் உங்ககிட்ட படித்த மாணவன். இப்போ வசதிகளோடு நல்ல நிலைமையோடு இருக்கிறேன். அதற்கு நீங்களும் ஒரு காரணம். என் பையனுக்குத் திருமணம். அழைப்பிதழ் கொடுக்க வந்தேன். நீங்கள் அவசியம் வரவேண்டும்" என்றுச் சொல்லி ஆடம்பரமான அழைப்பிதழை மிக எளிமையான தோற்றத்தில் இருக்கும் அந்த ஆசிரியையிடம் கொடுக்கிறார் வந்தவர். ஆசிரியை மகிழ்ச்சியோடு அழைப்பிதழை பெற்றுக்கொள்கிறார்.
இதையும் படிக்கலாமே.. காந்திக்கே கறார் காட்டிய தமிழர் ஜே.சி. குமரப்பா!
"அம்மா.. நீங்க சிரமப்பட வேண்டாம். திருமணத்தன்று உங்களுக்கு என்னுடைய காரை அனுப்பி வைக்கிறேன். அதில் வந்து கலந்துகொண்டு, அதிலேயே திரும்பி வந்து விடலாம்" என்று வந்தவர் சொல்லிக்கொண்டே போக, ஆசிரியை சட்டென்று "ஐயோ அதெல்லாம் வேண்டாம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுகிறேன்" என்கிறார்.
"ஏன் அம்மா என்னிடம் இப்போது பத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் இருக்கின்றன. அதில் ஒன்றைத்தான் அனுப்பப் போகிறேன். இதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. தயவுசெய்து மறுக்காதீர்கள்" என்று மன்றாடுகிறார் வந்தவர். ஆசிரியையோ "அதற்காக எல்லாம் மறுக்கவில்லை. நான் எந்த இடமாக இருந்தாலும் எளிமையாக பேருந்தில் தான் சென்று வருவது வழக்கம். சிக்கனமாக வாழ்வது தான் எனக்குப் பிடிக்கும். என்னை சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். நான் வந்து சேர்கிறேன்" என்று சொல்கிறார்.
"ஆட்டோ அனுப்பட்டுமா?" என்று கேட்கிறார் வந்தவர். அதற்கும் மறுக்கிறார் ஆசிரியை."உங்களுக்கு இப்போது வயது 80-க்கும் மேலே இருக்கும்.மேலும் எந்தத் துணையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறீர்கள். எனவே வாகனத்தில் வருவதுதான் பத்திரமானது" என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார் வந்தவர்.
ஆனால் ஆசிரியையோ விடாப்பிடியாக எல்லாவற்றையுமே மறுத்துப் பேசுகிறார். "இதுவரை நான் எல்லா இடங்களுக்கும் பேருந்திலும் அதுவும் கிடைக்காவிட்டால் நடந்தும் சென்றே வருகிறேன். எந்த சங்கடமும் நேர்ந்ததில்லை. இன்றைக்கு நீங்கள் காரோ ஆட்டோவோ அனுப்பி என்னை சொகுசுக்கு உள்ளாக்கினால், நாளை என் உடம்பு அதையே தேடத் துவங்கிவிடும். என் லட்சியமான சிக்கனம் என்னை விட்டுப் போய்விடும். எனவே என்னை வற்புறுத்த வேண்டாம். வந்துவிடுகிறேன்" என்று சொல்லிய ஆசிரியை, அதேபோல அந்தத் திருமணத்திற்குப் பேருந்தில் பயணித்துச் சென்று கலந்து கொண்டு வந்தார். யார் இவர்? ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறார்?
மேற்கு வங்கத்தின் பஹுயாட்டி பகுதியில் 350 சதுர அடியில் எளிமையான வீட்டில் வசித்து வருபவர் சித்ரலேகா மாலிக். ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கொல்கத்தாவில் வேலை பார்த்தவருக்கு இப்போது மாத ஓய்வு ஊதியமாக மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. அதற்காக ஆடம்பரமாக வாழ்ந்து விடவில்லை. எங்கு சென்றாலும் பயணிப்பது பேருந்துகளில். அதுவும் இல்லாவிட்டால் நடைப்பயணம். வீட்டு வேலைகளைப் பார்க்க வேலையாட்கள் எவரும் கிடையாது. திருமணம் செய்து கொள்ளாததால் தனிமையில்தான் வாழ்கிறார். சிக்கனத்தைத் தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்கும் இவருக்குக் கை நிறைய ஓய்வூதியம் கிடைக்கிறது. அதேநேரத்தில் செலவும் குறைவு. எனவே மாதாமாதம் கணிசமான தொகையை சேமிப்பு செய்கிறார். இந்த அபரிதமான சேமிப்பை சித்ரலேகா என்ன செய்கிறார்?
"முறையான கல்வி எல்லோரையும் மாற்றும். பொறுப்புமிக்க ஆசிரியரால் எதையும் மாற்ற முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு 80 வயதாகிறது. 2002 முதல் கடந்த 19 ஆண்டுகளாக பல கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளேன். இதெல்லாம் என் ஓய்வூதிய பணத்தினாலும், அதையும் சிக்கனமாக சேமித்ததாலுமே சாத்தியமாயிற்று" என்கிறார் சித்ரலேகா.
ஏழ்மையான குடும்பத்தில் பள்ளி ஆசிரியரின் மகளாகப் பிறந்தவர் தான் சித்ரலேகா. "பிறருக்குக் கொடுத்துப் பழகு... உனக்கு சந்தோசமும் மனதிருப்தியும் உண்டாவதை நீயே உணர்வாய்..." என்று சிறுவயது முதலே சொல்லிச் சொல்லி வளர்த்தார் அப்பா மகளை. சின்னஞ்சிறு வயதிலிருந்தே சக மாணவிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தன் தேவைகளை குறுக்கிக் கொண்டு வழங்கிவரத் துவங்கினார் சித்ரலேகா.
பின்னர் ஆசிரியையாக கல்விப் பணியில் ஈடுபட்ட போதும் இந்த உதவும் குணம் இவரோடு சேர்ந்தே வந்ததால் திருமணம் பற்றிய சிந்தனையே இல்லாமல் போயிற்று. ஆசிரியையாக பணியாற்றிய காலத்தில் பல கல்வி நிறுவனங்கள் தங்கள் வசதிகளை மேம்படுத்த நிதி இல்லாமல் தவிப்பதை கண்கூடாகப் பார்த்தவர் சித்ரலேகா. நன்றாகப் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் வசதி இல்லாத காரணத்தால் கல்வியைத் தொடரமுடியாமல் திண்டாடியதையும், ஒரு கட்டத்தில் படிப்பையே நிறுத்தியதையும் கண்டு கண்கலங்கி பல இரவுகள் தூக்கம் இல்லாமலே தவித்திருக்கிறார் சித்ரலேகா.
அப்போது அவர் எடுத்த முடிவு தான்.. 'வாழ்க்கையில் ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனமாக வாழ்ந்தால் நிறைய காசை சேமிக்க முடியும். அதைக்கொண்டு கல்வித் தேவைகளுக்கு உதவி செய்ய முடியும். எனவே வாழ்நாள் முழுவதும் சிக்கனமாக வாழ்ந்து பிறருக்கு உதவி செய்வோமே!'
2018-ஆம் ஆண்டு இவர் படித்த ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.56 லட்சம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். பணி ஓய்வின் போது கிடைத்த ரூபாய் 31 லட்சத்தை தன்னுடைய பெற்றோரின் நினைவாக ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.
''ஆடம்பரப் பொருள்களையும் அதிக வசதிகளையும் தவிர்க்கும்படி நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றி எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என்னுடைய தினசரித் தேவைகளுக்கு அதிகம் செலவாவதில்லை. அதனால் என்னால் கூடுதலாகச் சேமிக்க முடிகிறது.
மாதாமாதம் வரும் 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தைக் கொண்டே கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர்களுக்கு நன்கொடை வழங்குகிறேன்'' என்று ஆச்சரியப்படுத்துகிறார் சித்ரலேகா மாலிக்.
நாமெல்லாம் சேமிப்பதையும் சேமிப்பதை ஆடம்பரமாகச் செலவு செய்வதையும் போதை போல வைத்திருக்கிறோம்..
ஒரு முடிவுக்கு, தெளிவுக்கு வருவோம்..
சேமிப்போம்.. சேமிப்பில் கொஞ்சமாவது
செலவழிப்போம், மற்றவர்களின் கல்விப் பாதைக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...