உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பற்றியும் மக்களின் எண்ணம் பற்றியும்...
உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?
பி.டி.ஐ.
Published on
Updated on
3 min read

பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்து ஆட்சி அமைக்கப் போவது யார்? என்பதும் மக்களால் அடையாளம் காட்டப்பட்டு விட்டது. உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291, இந்தியா கூட்டணி 234, பிற கட்சிகள் 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன.

முந்தைய மக்களவையில் 303 இடங்களைப் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி இந்த முறை 63 இடங்கள் குறைந்து 240 இடங்களில் வென்றிருக்கிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளில் 3 இடங்களைப் பெற்றிருந்த தெலுங்கு தேசம் இந்த முறை 16 தொகுதிகளில் வென்றிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்ற கட்சிகள் யாவும் ஏற்கெனவே இருந்ததைவிடக் குறைவான இடங்களிலேயே – 13-ல் 6 குறைந்து 7-ல் சிவசேனை, 16-ல் 4 குறைந்து 12-ல் ஐக்கிய ஜனதா தளம், 6-ல் 1 குறைந்து 5-ல் சிராஜ் பாஸ்வான் கட்சி வென்றிருக்கின்றன.

உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவிருந்த வேட்பாளர்! நல்ல வேளை!!

மாறாக இந்தியா கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுமே முந்தைய மக்களவையில் இருந்ததைவிட  அதிகமான இடங்களிலேயே வெற்றி  பெற்றிருக்கின்றன. ஏற்கெனவே 23 இடங்களைப் பெற்றிருந்த திமுக, 22 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

52 இடங்களை மட்டுமே வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, 47 தொகுதிகளைக் கூடுதலாக வென்று தற்போது 99 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 5 இடங்களே வைத்திருந்த சமாஜவாதி கட்சியோ 32 இடங்களைக் கூடுதலாக வென்று 37 இடங்களைப் பெற்றிருக்கிறது. 22-லிருந்த திரிணாமுல் காங்கிரஸ், 29 இடங்களைக் கைப்பற்றி 7 இடங்களைக் கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது. சிவசேனையின் உத்தவ் பிரிவு 4 தொகுதிகளை அதிகமாக வென்று 9 ஆகப் பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.

பிற கட்சிகளைப் பொருத்தவரை, 12 இடங்களை வைத்திருந்த பிஜு ஜனதா தளமும் 10 உறுப்பினர்களை வைத்திருந்த பகுஜன் சமாஜ் கட்சியும் ஒற்றை இடத்தை வைத்திருந்த அதிமுகவும் ஒட்டுமொத்தமாக ஒன்றுமில்லாமல் காணாமலேயே போய்விட்டன. 18-லிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 14 குறைந்து 4, 2-லிருந்து 1 குறைந்து 1 ஆக சிரோமணி அகாலிதளம் வலுவிழந்துவிட்டிருக்கின்றன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது, குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் தன்னிடமிருந்த 62 தொகுதிகளில் 29 தொகுதிகளை இழந்த பா.ஜ.க. 33-ல் மட்டும்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது.

உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?
பாரதிய ஜனதாவுக்கு இடமில்லாத மாநிலங்கள்!

பதிலாக, கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சமாஜவாதி கட்சியோ தன்னுடைய பலத்தை வெறும் 5-லிருந்து 37 ஆக உயர்த்திக் கொள்ள, காங்கிரஸ் கட்சியோ ஒற்றை இடத்திலிருந்து ஆறாக உயர்த்தியிருக்கிறது. பத்து தொகுதிகளைப் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை 80 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு எல்லாவற்றையும் இழந்துவிட்டது.

மகாராஷ்டிரத்திலும் 23 தொகுதிகளை வைத்திருந்த பா.ஜ.க.வால் இந்த முறை 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனை (ஷிண்டே) பிரிவும் தேசியவாத (அஜித்) காங்கிரஸும் முறையே 7, 1 இடங்களையே பெற முடிந்திருக்கிறது.

ஓரிடத்தை மட்டுமே வைத்திருந்த காங்கிரஸ், இந்த முறை 13 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்த சிவசேனை (உத்தவ்) – 9, தேசியவாத காங்கிரஸ்  (சரத் பவார்) – 8 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் 22-லிருந்து 29-க்கு திரிணாமுல் காங்கிரஸ் உயர, பா.ஜ.க.வோ 18-லிருந்து 6-க்கு இறங்கியிருக்கிறது.

பிகாரில் பாரதிய ஜனதா – ஐக்கிய ஜனதா தளமும் மொத்தம் 9 தொகுதிகளை இழந்து, தலா 12 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளன.

2019-ல் 303 தொகுதிகளைத் தனித்தே வென்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றிருந்ததுடன் மகாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும்கூட பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் இதன் இருப்பு அடையாளப்படுத்தப்பட்டதால் - ஒருகாலத்தில் காங்கிரஸுக்கு இருந்ததைப் போன்ற - நாடு முழுவதற்குமான கட்சி என்ற தோற்றமும் எளிதில் உருவானது. ஆனால், இந்தத் தேர்தல் இவற்றையெல்லாம் உடைத்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த தோல்விதான் இந்தத் தேர்தல் முடிவுகளிலேயே மிகவும் முக்கியமானது. உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கை அசைத்துக்கொள்ள முடியாது என்ற பரவலான நம்பிக்கையை முறியடித்துப் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளை சமாஜவாதி – காங்கிரஸ் கூட்டணி பறித்துக்கொண்டுவிட்டது. கூட்டணிக்காகத் தனிப்பட்ட கௌரவத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சமாஜவாதி கட்சியுடன் இடங்களைப் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குத்தான் இந்த வெற்றியின் பெருமை சென்றடையும்.

உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?
வாக்குக் கணிப்பு பொய்த்துப்போவது முதல்முறையல்ல! ஏன்?

தவிர, கடந்த இரு முறையும் பெரும் பலத்துடன் வெற்றி பெற்றிருந்ததால் யாருடைய தயவையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய தேவையில்லாமல் எத்தகைய சட்டத்தை வேண்டுமானாலும் பாரதிய ஜனதாவால் நிறைவேற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த முறை என்ன செய்ய வேண்டுமானாலும் தெலுங்குதேசத்தையும் ஐக்கிய ஜனதா தளத்தையும் எதிர்பார்த்திருக்க வேண்டும்;  சந்திரபாபு நாயுடுவும் நிதீஷ் குமாரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்கள் இருவருக்குமே இடம் மாறுவதும் தடம் மாறுவதும் அவற்றுக்கான நியாயங்களை முன்வைப்பதும் புதிதல்ல. அரசியல்ரீதியிலான தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எல்லாவகையிலும் இவர்கள் முயற்சி செய்யக் கூடிய நிலையில், இன்றைய பலவீனம் காரணமாகப் பாரதிய ஜனதா கட்சி கேட்டுத்  தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நாடு முழுவதும் பிரசாரம் செய்துவிட்டு, தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில் – கடந்த 10 ஆண்டுகளாக நினைத்ததைச் செயல்படுத்திவந்த நிலை மாறி – மற்றவர்கள் நினைப்பதையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வென்றபோதிலும் பாரதிய ஜனதா கட்சி சங்கடத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்ட வருத்தம் இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளைப் போல அல்லாமல், வலுவான எதிர்க்கட்சிகளின் அணியாக உருவாகியுள்ள நிலையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் உற்சாகமாகக் காணப்படுகின்றனர்; பேட்டியளிக்கின்றனர்.

உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?
கோபம், வெறுப்பு பரிசாகக் கிடைத்தாலும்.. நீ : ராகுலுக்கு பிரியங்கா கடிதம்

இந்த முறை நாடு முழுவதும் மக்கள் ஒரே மாதிரியாக சிந்தித்து, ஒரே மாதிரியாக வாக்களித்திருப்பதாகக் கொள்ள முடியாது. தவிர, பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக இடங்களைக் கொடுத்திருந்தாலும் அறுதிப் பெரும்பான்மையைத் தரவில்லை. வலுவான எதிர்க்கட்சி அணியையும் முன்வைத்திருக்கிறார்கள்.

உள்ளபடியே மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்? அல்லது ஒட்டுமொத்தமாக இந்த மக்களவைத் தேர்தலையே – தலைவர்களை அடையாளம் காண்பதற்கான - சோதனை முயற்சியாக எடுத்துக்கொண்டுவிட்டார்களா? காலத்தால்தான் தீர்மானிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com