

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே சில நாள்கள் நடந்த சண்டையை உள்ளபடியே யார்தான் தடுத்து நிறுத்தியது? எப்படி நிறுத்தப்பட்டது?
மீண்டும் மீண்டும் தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, இப்போது திடீரென சீனாவும் களமிறங்கியிருக்கிறது – இந்தியா – பாகிஸ்தான் போரைத் தடுத்து நிறுத்தியதாக!
ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரைத் தாம் நிறுத்தியதாக - எத்தனையாவது முறை என்று உறுதியாகத் தெரியவில்லை, 70-வது முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது – சில நாள்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
புளோரிடாவிலுள்ள பாம் பீச்சில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சு நடத்திய அதிபர் டிரம்ப், ‘எட்டு போர்களை நிறுத்தியிருக்கிறேன்; எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டதா?’ என்று குறைப்பட்டுக் கொண்டார். தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் டிரம்ப்பும் அவருடைய ஆதரவாளர்களும் வலியுறுத்தியபோதும் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
‘இரு தரப்புடனும் இரவு முழுவதும் நடத்திய பேச்சின் முடிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக முழு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பதாக’ இவ்விரு நாடுகளுக்கும் முன்னதாக அதிபர் டிரம்ப்தான், கடந்த மே மாதம் 10 ஆம் தேதி சமூக ஊடகங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பின்னர்தான், தாக்குதல் நிறுத்தம் பற்றி இந்தியா அறிவித்தது.
ஆனால், இரு நாடுகளின் ராணுவ உயர் அலுவலர்களின் நேரடிப் பேச்சைத் தொடர்ந்து, சண்டை நிறுத்தப்பட்டதாகத் தொடர்ந்து இந்தியத் தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது. அரசு வட்டாரங்கள் மட்டுமே மறுத்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, தாக்குதலை நிறுத்த எந்த நாட்டுத் தலைவரும் (அமெரிக்கா, டிரம்ப் பற்றி எதுவும் குறிப்பிட்டுச் சொல்லாமல்) கேட்டுக்கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஜம்மு – காஷ்மீரிலுள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7 ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பரஸ்பர மோதல்கள் நடைபெற்றன.
போர் நிறுத்தப்பட்ட நாளிலிருந்தே கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா – பாகிஸ்தான் போரை, அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளிடையேயான போரைத் தாம்தான் நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் டிரம்ப் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதிபர் டிரம்ப் போலவே, இப்போது திடீரென சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியும் உலகளாவிய மோதல்களைத் தடுத்து அமைதியை ஏற்படுத்துவதில் சீனா பெரும் பங்காற்றிவருவதாகக் குறிப்பிட்டதுடன், இந்தியா – பாகிஸ்தான் இடையேயும் சமாதானம் ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று, டிச. 31, நடைபெற்ற ‘பன்னாட்டுச் சூழலும் சீனாவின் அயல் நாட்டு உறவுகளும்’ பற்றிய கருத்தரங்கில் பேசுகையில், ‘இரண்டாம் உலகப் போருக்குப் பின் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு மோதல்களும் பதற்றங்களும் ஏற்பட்டன. உலகளவில் அமைதியின்மையும் நிலவியது. மோதல்களைத் தவிர்த்து, அமைதியை ஏற்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை சீனா மேற்கொண்டது’ என்று குறிப்பிட்டார் வாங் யி.
இந்த ஆண்டில் சீனா சமரச முயற்சிகளை மேற்கொண்ட பதற்றமான பிரச்சினைகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமும் ஒன்றெனக் குறிப்பிட்டிருக்கிறார் வாங் யி.
‘பதற்றமான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மியான்மர் பிரச்சினை, ஈரான் அணு ஆயுதப் பிரச்சினை, பாகிஸ்தான் – இந்தியா இடையிலான பதற்றங்கள், பாலஸ்தீனம் – இஸ்ரேல், அண்மையில் கம்போடியா – தாய்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான சமரச முயற்சிகளை சீனா மேற்கொண்டது’ என்று தெரிவித்துள்ளார் வாங் யி.
ஆனால் தொடர்ந்து இப்போதும், இரு நாடுகளும் நேரடியாகப் பேசியே போரை நிறுத்தியதாகவும் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என்றும் இந்தியத் தரப்பில் (சோர்சஸ் – அலுவலக வட்டாரங்கள்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு முறை இதுபற்றிக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடியும் எந்த நாட்டையோ, தலைவரையோ குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாகவே விளக்கம் அளித்தார்.
புதிதாகப் புறப்பட்டுள்ள சீனாவின் மத்தியஸ்த தகவல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சகம், முறைப்படியான – அதிகாரப்பூர்வமான - திட்டவட்டமான மறுப்பு அல்லது விளக்கம் எதையும் தெரிவிக்கவில்லை. இப்போதும் சீனாவின் உரிமை கொண்டாடலையும் இந்திய அரசு வட்டாரங்கள்தான் மறுத்திருக்கின்றனவே தவிர நாட்டின் குறிப்பிட்ட உயர்நிலைத் தலைவர்கள் யாரும் அல்லர். இதுவரையிலும் வெளியுறவுத் துறை வட்டாரங்கள், பாதுகாப்புத் துறை வட்டாரங்கள், அரசு வட்டாரங்கள் என்றே பெரும்பாலான மறுப்புகள் வருகின்றன.
உண்மையிலேயே பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலை யார்தான் நிறுத்தியது? அமெரிக்க அதிபர் டிரம்ப்பா? வாங் யி சொல்வது போல சீனாவா? இந்திய அதிகாரிகள் தெரிவிப்பதைப் போல இரு நாடுகளுடைய ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு மூலம் மட்டும்தானா?
இந்தியா சொல்வதைப் போல, மூன்றாம் தரப்பு சமரசத்துக்கு இடமில்லை என்ற இந்திய நிலைப்பாடு, உண்மையானதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்துவந்திருக்கிறது.
இந்த விஷயத்தில் நிச்சயம் உண்மை என்ற ஒன்றிருக்கும். இந்தியா – பாகிஸ்தான் மோதல் எவ்வாறு முடிவுக்கு வந்தது? என்ன நடந்தது? என்பது தொடர்பாகக் குழப்பப்படும் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம் – குறைந்தபட்சம் இந்தியா – பாகிஸ்தான் இடையே நாங்கள்தான் சமரசம் செய்துவைத்தோம் என்று இன்னொரு நாடும் சொல்ல முனைவதற்கு முன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.