ஐஎன்எஸ் விக்ராந்த்' என்கிற இந்தியாவின் மிகப்பெரிய விமானம்தாங்கிக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் இயக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை பசிபிக் கடலில் கோலோச்சிய தங்களது விமானம்தாங்கிக் கப்பலுக்குப் போட்டியாக ஐஎன்எஸ் விக்ராந்த் வந்துவிட்டது என்பதில் சீனாவுக்கு கவலை மேலெழலாம். சீனாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சியும் ராணுவ பலமும் அதிகரிப்பதை விரும்பாத சில அண்டை நாடுகளுக்குக்கூட இது பொறாமையையும் எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடும். அதற்காக நாம் நமது ராணுவ பலத்தை அதிகரிக்காமல் இருந்துவிட முடியாது.
ஐஎன்எஸ் விக்ராந்த் போலவே மேலும் ஒரு விமானம்தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்கிற பெயரில் ரஷியாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம்தாங்கிக் கப்பல்கள் நமக்கு பலமும் பெருமையும் சேர்க்கும் என்றாலும், இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கப்பல்கள் தேவைதானா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
சுமார் 37,000 டன் எடையுள்ள, ஹெலிகாப்டர்கள் உள்பட 50 போர்விமானங்கள் நிறுத்தக்கூடிய, 260 மீட்டர் நீளமுள்ள, ஐஎன்எஸ் விக்ராந்த்-க்காக நாம் பெருமை கொள்ளக் காரணம், இந்தக் கப்பல் இந்தியத் தொழில்நுட்பத்தில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் என்பதுதான். நம்மைவிட மிகப் பெரிய விமானம்தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா (1லட்சம் டன்) சீனா (65,000டன்) இங்கிலாந்து (65,000 டன்) வைத்திருக்கின்றன.
இக்கப்பல், வழக்கமான வெள்ளோட்டங்களை முடித்து, கடற்படையில் சேர்க்கப்படுவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். இதில் ஏவுகணைத் தளம் உள்ளிட்ட பல போர்க்கருவிக் கட்டமைப்புகள் செய்யப்பட்டாக வேண்டும். இக்கப்பல் இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்தாங்கிக் கப்பல் தயாரிப்பு மற்றும் போர்க் கருவி கட்டமைப்பு ஆகிய அனைத்துக்கும் சேர்த்து இதற்கான மொத்த செலவு ரூ.3 லட்சம் கோடி என்று மதிப்பிடப்படுகிறது.
உலகளாவிய அளவில் பெரிய விமானக் கப்பல்கள் தயாரிப்பு என்பது குறைந்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ள 65,000 டன் எடைகொண்ட விமானம்தாங்கிக் கப்பல் தயாரிப்புக்கான செலவு சுமார் 7 பில்லியன் பவுண்ட். இந்த காலத்துக்கு இத்தகைய விமானம்தாங்கிக் கப்பல்கள் இங்கிலாந்துக்குத் தேவையில்லை என்று அங்கே உள்ளவர்கள் கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்- இன்றைய நாளில், போரின்போது இதன் பயன்பாடு மிகவும் குறைவு.
1920-களில் போர்விமானம் தாங்கிக் கப்பல்கள் நடைமுறைக்கு வந்தற்கு முக்கிய காரணங்கள் சில உண்டு. நெடுந்தொலைவு கடல்பரப்பின் மீது பறந்துபோய் பிற நாடுகளைத் தாக்கும் போர் விமானங்கள், வழியில் இறங்கி, எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் பறக்க வேண்டும். ஆனால் போர் விமானங்கள் தரையிறங்க சில நாடுகள் அனுமதி மறுக்கும் பட்சத்தில், நடுக்கடலில், கப்பலின் மேற்பரப்பிலேயே ஓடுதளம் அமைத்து, விமானங்களை இறக்கி ஏற்றவும், தாக்குதல் நடத்தவும்கூட இவை பயன்பட்டன.
ஆனால் இப்போது அத்தகைய நிலைமை இல்லை. போர் விமானங்கள் உலகையே வலம் வரக்கூடிய அளவுக்கு திட எரிபொருள் தொழில்நுட்பங்கள் உள்ளன. விமானங்கள் அனுப்பிதான் குண்டு போட வேண்டும் என்ற நிலைமை இன்றில்லை. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே 1000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை மிகச் சரியாகக் குறி வைத்துத் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. ஏவுகணையை இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்கவும், திசை மாற்றவும் முடியும். எதிராளி ஏவும் கணையின்மீது நேருக்கு நேர் மோதி அதைச் சிதைக்கவும் முடியும். இத்தகைய சூழலில் போர்விமானங்களின் பயன்பாடும் மாறுபட்டு உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் விமானம்தாங்கிக் கப்பல்களின் தேவை, கடல் நடுவே ஒரு ராணுவ முகாம்போல நிறுத்தப்படவும், கடல்பரப்பில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும்தான். போர் விமானப் பயிற்சிகளுக்கும் இந்த விமானம் தாங்கிக் கப்பல்கள் பெரிதும் உதவும். இன்றைய தேதியில் இவற்றின் பயன்பாடும் இந்த அளவுக்குதான்.
நம்மைப் போன்று, தாய்லாந்து, பிரான்சு, பிரேஸில், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளும் விமானம்தாங்கிக் கப்பல்களை வைத்துள்ளன. அவற்றின் அளவு சிறியது. நிறுத்தும் போர்விமானங்கள் எண்ணிக்கை குறைவு. ஜப்பானும் தென்கொரியாவும் ஹெலிகாப்டர்தாங்கிக் கப்பல்களை வைத்துள்ளன. இந்த சிறிய நாடுகள் இந்தக் கப்பலைப் பயன்படுத்துவது தங்கள் கடற்பரப்பை கண்காணிப்பதற்கு மட்டுமே. இதைப்போன்று, இந்தியாவுக்குத் தேவையானது சிறுஅளவிலான விமானம்தாங்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்தாங்கிக் கப்பல்கள் போன்றவைதான்.
சிறிய விமானம் தாங்கி, அல்லது ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பல்கள் ஐந்தாறு இருக்குமெனில், மும்பை, கொச்சி, தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா கடற்பகுதிகளில் நிறுத்தி வைத்து, கடலில் பாதுகாப்புப் பணிகளை செவ்வனே செய்ய இயலும்.
தீபகற்பமாகிய இந்தியாவைச் சுற்றிலும் கடல் விரிந்து கிடக்கிறது. ஒருபுறம் கப்பல் கடத்தப்படும் சம்பவங்கள், ஒருபக்கம் மீனவர்கள் எல்லை மீறியதாக அண்டை நாடுகளால் தாக்கப்படும் சம்பவங்கள். கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
மிகப்பெரும் விமானம் தாங்கிக் கப்பல் நிச்சயமாக நமக்குப் பெருமைதான். சந்தேகமே இல்லை. இருப்பினும் காலத்தின் மாற்றத்துக்கும் தேவைக்கும் ஏற்ப கடற்படையின் போர்க்கப்பல்கள் அமைய வேண்டும். காடு இருப்பவர் யானை கட்டி போரடிக்கலாம், கழனி இருப்பவர் மாடு வைத்து போரடிக்கலாம். இன்றைய இந்தியாவின் தேவை சிறிய விமானம்தாங்கிக் கப்பல்கள்தான்.
ஆனாலும் நமக்கு பெரிய விமானம்தாங்கிக் கப்பல்கள் ஒன்றொ இரண்டோ இருப்பதில் தவறில்லை. பாதுகாப்பு என்று வரும்போது பொருள்செலவை பார்க்கக்கூடாது. ஆகவே இது நம் கடற்படைக்கு பெருமை சேர்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.