இலவசங்களை வாக்குறுதிகளாக்கி அரசுப் பணத்தில் ஆட்சிக்கு வந்த பின் வாரி வழங்குவது சரியா தவறா என்கிற கேள்வி சமீபகாலமாகப் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் இலவசங்கள், தற்போதைய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைப்படி லஞ்சம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேநேரத்தில் இத்தகைய இலவசங்கள் வாக்காளர்களை ஈர்க்கின்றன, ஜனநாயகத்தின் அடிப்படையை அசைக்கின்றன என்ற கருத்தையும் கூறியுள்ளது.
தேர்தல் நெறிமுறைகளில், வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பொருள் கொடுத்தால் அது லஞ்சம். இதில் ஈடுபடுவோரைக் கைது செய்ய முடியும். வேட்பாளரைத் தகுதியிழக்கச் செய்ய முடியும். ஆனால், என்னை வெற்றி பெறச் செய்த பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் மானியத்தைப் பணமாகப் போடுகிறோம்; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் என்று விலையில்லா பொருள்களாக வழங்குகிறோம் என்று சொன்னால் அது தேர்தல் வாக்குறுதி என்பதால் கண்டனத்திற்கோ தண்டனைக்கோ உட்பட்டது அல்ல.
தேர்தல் அறிக்கையைப் பொருத்தவரை, இந்த இலவசங்கள் அந்தக் கட்சியின் திட்டம். இத்திட்டத்தில், கட்சிக்கு வாக்களித்தவர் வாக்களிக்காதவர் என்ற பேதம் பார்க்கப்படுவதில்லை. பயனாளிகள் அனைவருக்கும் இது பொதுவானது. இதற்கான செலவு மக்கள் பணத்திலிருந்து செலவிடப்படும். தணிக்கைக்கு உட்பட்டது. இதுபோன்ற காரணங்களால் இது திட்டம் என்றாகிவிடுகிறது.
இதுபோன்று நிறைய திட்டங்களை ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சொல்லவே செய்கின்றன. ரூபாய்க்கு படியரிசி திட்டம் தொடங்கி, விலையில்லா ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர் உள்பட பலவும் திட்டங்கள்தான். இவை திட்டம் சார்ந்த விலையில்லா பொருள்களே தவிர, அவர்கள் அளித்த வாக்குக்கான விலை அல்ல என்று சட்டம் ஏற்றுக் கொள்கிறது. இவையெல்லாம் மனித பலவீனத்தின் மீது வீசப்படும் தூண்டிலா அல்லது மக்களின் நல்வாழ்வுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள்தான்.
÷உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் பொறுப்பை தேர்தல் கமிஷன் மீது சுமத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளுக்கான விதிமுறைகளை மத்திய தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும் என்று வழிமுறை காட்டியிருக்கிறது.
÷போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமநிலையில் வாக்காளர்களைச் சந்திக்கவும் தேர்தலில் போட்டியிடவும் வழிவகை செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம், எப்படியெல்லாம் பிரசாரம் செய்யலாம், நேரடியாக வாக்குக்குப் பணம் வழங்குதல், பொருள் வழங்குதல் போன்ற தவறான வழிமுறைகளைத் தடுப்பது இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் கடமைகளாக இருக்க முடியும். ஆனால், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதோ அல்லது தேர்தல் அறிக்கைக்கான விதிமுறைகளை வகுப்பதோ தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் இருக்க முடியாது.
÷அதேபோல, அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்பாடுகளையும் வரையறுப்பதற்கோ அதன்மீது கருத்து தெரிவிப்பதற்கோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்க முடியாது. இதை உணர்ந்துதான், "தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தன்னால் முடியாத வேலையை தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தியிருக்கிறது.
÷இலவசங்களை வாரி வழங்குவது வாக்காளர்களைக் கவர்வதாகும் அதன்மூலம் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையையே உலுக்குவதாகும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. இலவசங்கள் மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் கருதுமேயானால் அதை நேரடியாகவே கூறி தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது அரசுக்கு, இலவசங்களை வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் வாரி வழங்குவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கச் சொல்லி கருத்துத் தெரிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு பொறுப்பை தேர்தல் ஆணையத்தின் தலையில் சுமத்திவிட்டு, இலவசங்களை அறிவிப்பது தவறு என்றோ தேர்தல் குற்றம் என்றோ கூற முடியாது என்று தனது பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
÷மாறிவரும் சூழ்நிலையில் தேர்தல்கள் என்பதே கோடீஸ்வரர்களின் சூதாட்டமாக மாறிவிட்டிருக்கிறது என்பதை மனசாட்சி உள்ள எவருமே ஏற்றுக்கொள்வார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட்டு வெற்றி அடைய முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்திருக்கும் சொத்து மதிப்பு, அரசியல் என்பது கோடீஸ்வரர்களின் விளையாட்டு என்பதை நிரூபிக்கிறது.
÷இதற்கு என்னதான் முடிவு என்று யோசித்தால் தேர்தல் ஆணையமோ நீதிமன்றங்களோ தீர்வாகாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எத்தனை இலவசங்கள் அறிவித்தாலும் மயங்கிவிட மாட்டோம் என்பதைத் தேர்தல் முடிவுகளில் காட்ட வேண்டியவர்கள் வாக்காளர்கள்தான். மன்னராட்சியில், "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி'. மக்களாட்சியில் "மக்கள் எவ்வழி, மன்னன் அவ்வழி'. இலவசங்களை மக்கள் வெறுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட முடியும். சட்டத்தால் முடியாததை மக்களால் செய்து காட்ட முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.