அவசரப்படுவானேன்

மத்திய அமைச்சரவை இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ஒரு முடிவு சென்ற கூட்டத்தில் தள்ளிவைக்கப்பட்ட விவகாரம். இன்னொரு முடிவு - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய வேண்டிய விவகாரம். இரண்டிலும் அவசரப் போக்கைக் கையாண்டுள்ளது மத்திய அமைச்சரவை.
Updated on
2 min read

மத்திய அமைச்சரவை இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ஒரு முடிவு சென்ற கூட்டத்தில் தள்ளிவைக்கப்பட்ட விவகாரம். இன்னொரு முடிவு - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய வேண்டிய விவகாரம். இரண்டிலும் அவசரப் போக்கைக் கையாண்டுள்ளது மத்திய அமைச்சரவை.

முதல்முடிவு இயற்கை எரிவாயு விலையைப் பொருத்தது. இயற்கை எரிவாயுவுக்கு விலையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைத்திருந்தது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் வற்புறுத்தலைவிட, "ரிலையன்ஸ்' நிறுவனத்தின் வற்புறுத்தலே அதிகம். அவர்கள்தான் இதில் அதிகம் பயன் அடைபவர்கள்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பியபோது, "தான் மிரட்டப்படுவதாக' மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். "யாரும் மிரட்டவில்லை' என்று பிறகு அவரே மறுத்தார். இந்நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரத்தில் எந்தவிதமான முடிவும் காணப்படாமல், தள்ளி வைத்தார்கள்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குப் பலன் இருக்கிறது என்று கருதிய வேளையில், வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சரி. இந்த அனுமதி ரங்கராஜன் கமிட்டியின் "பார்முலா'வில் அமையுமா? அல்லது, மொய்லி வகுத்ததைப் போல, முதலாண்டு இரட்டிப்பாக்கப்பட்டு, அதாவது 4 டாலரிலிருந்து 8 டாலராக உயர்த்தி, அடுத்த ஆண்டு தொடங்கி படிப்படியாக உயர்த்தி 15 டாலருக்கு - அதாவது ரிலையன்ஸ் கேட்ட தொகை - உயர்த்திக் கொடுக்கும் "மொய்லி-ரிலையன்ஸ்' "பார்முலா'வா? மத்திய அமைச்சரவை இதைத் தெளிவுபடுத்தாமல், இயற்கை எரிவாயுவுக்கு இரட்டிப்பு விலையை அனுமதித்துள்ளது.

இரண்டாவது முடிவு, "நிலக்கரி ஒழுங்காற்று ஆணையம்' தொடர்பானது. நிலக்கரி விலை மற்றும் அவற்றைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய, "நிலக்கரி ஒழுங்காற்று ஆணையம்' அமைக்கப்பட வேண்டும் என்றும், இதற்கும் இந்திய நிலக்கரிக் கழகத்துக்கும் (சி.ஐ.எல்.) எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் ஒரு கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, பிறகு இந்த ஆணையத்தை அமைப்பதுதான் முறையாக இருந்திருக்கும்.

"நிலக்கரி ஒழுங்காற்று ஆணைய வரைவு மசோதா' தயாரிக்கப்பட்டு பயனாளிகள், தொழிற்துறையினர், வல்லுநர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்ட பின்னர் மசோதாவில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தத் திருத்தங்கள் என்ன என்பதில் தெளிவு இல்லாத நிலையில் ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஒழுங்காற்று ஆணைய மசோதா நிறைவேற்றப்படாத நிலையில், ஒரு செயலாணை மூலம் இந்த ஆணையம் நடைமுறைக்கு வந்துவிடும் என்று அமைச்சரவை கூறியுள்ளது. இந்த ஆணையத்தின் கீழ், நிலக்கரிச் சுரங்க வயல்கள் வராது என்பதையும் அரசு தெளிவுபடுத்துகிறது. அதாவது, நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு எப்போதும் போல, நிலக்கரி அமைச்சகத்திடமே இருக்கும் என்று பொருள்.

உள்நாட்டு நிலக்கரி விலை நிர்ணயிக்கப்படும் விதம் குறித்து, அதன் பயனாளிகளான அனல் மின்நிலையங்கள், தேனிரும்பு தொழிற்கூடங்கள், சிமென்ட் தொழிற்கூடங்கள் ஆகியவை குறை கூறிவந்தன. நிலக்கரியின் தரத்துக்கும் விலைக்கும் தொடர்பில்லை என்பதுதான் அவர்களது முதன்மையான கருத்தாக இருந்து வருகிறது. விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் "இந்திய நிலக்கரிக் கழகத்திடம்' இருப்பதால்தான் இந்த நிலைமை என்று மற்றவர்கள் குறை கூறினர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள், நிலக்கரி உற்பத்தியைப் பெருக்கவும், அனைவருக்கும் நிலக்கரி சீரான விலையில் கிடைக்கவும் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினர்.

இந்தியாவின் தேவை சுமார் 600 மில்லியன் டன் நிலக்கரி. ஆனால் சுமார் 85 மில்லியன் டன் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவில் பரவலாக இருக்கின்றன. 2011-இல், அறிவியல்முறையில் மேற்கொள்ளப்பட்ட தோராய கணக்கின்படி இந்தியாவில் 2,93,497 மில்லியன் டன் நிலக்கரி புதைந்துகிடக்கிறது. ஆனால் இவற்றை எடுப்பதில் மாநில-மத்திய அரசுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஆகியன தடையாக உள்ளன. இவற்றை எடுத்துக் கொண்டுவரும் போக்குவரத்து வசதிகளும் பெரிய பிரச்னை. இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் ஆணையம் அமைக்கப்படுவது என்பது அவசியம்தான்.

இந்திய நிலக்கரியில் 70 விழுக்காட்டைப் பயன்படுத்தும் அனல் மின்நிலையங்கள் நிலக்கரி விலையில் இருக்கும் மாறுபாடுகளை சுட்டிக்காட்டி வருகின்றன. அதிக சாம்பல் இருக்கும் நிலக்கரிக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலக்கரியை எரித்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மதிப்புக்கும், நிலக்கரிக்குக் கொடுக்கப்படும் விலைக்கும் தொடர்பில்லை. இழப்புதான் அதிகமாக இருக்கிறது என்று குறைகூறி வருகின்றன. இதற்காகவும் ஆணையம் கட்டாயத் தேவைதான்.

ஆனால், இத்தனைக் காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் பரிந்துரைகள் இப்போது அவசரஅவசரமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றனவே, அதுவும் செயலாணை மூலம், அதுதான் ஏன் என்று புரியவில்லை.

இயற்கை எரிவாயுவுக்கு இரட்டிப்பு விலை நிர்ணயித்து தனியாரை வாழ வைப்பதைப்போல, நிலக்கரி விலையைக் குறைத்து நிர்ணயித்து தனியாரை வாழ வைக்கத்தான் இந்த ஆணையம் பயன்படுமோ? பிறகு ஏன் இந்த அவசரம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com