தெரிந்தால்தான் என்ன?

குதிரைப் பந்தயம் போல ஏழை எளிய மக்களின் பணத்தை அபகரிக்கும் சூதாட்டமல்ல ஐ.பி.எல். போட்டிகள் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை.
Updated on
2 min read

குதிரைப் பந்தயம் போல ஏழை எளிய மக்களின் பணத்தை அபகரிக்கும் சூதாட்டமல்ல ஐ.பி.எல். போட்டிகள் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை. தங்கள் அபிமான விளையாட்டு வீரர்கள் அவர்களது திறமையினால் ஆடுகின்ற விளையாட்டைக் கோடிக்கணக்கான ரசிகர்களை நேரிலும், தொலைக்காட்சியின் மூலமாகவும் பார்த்து ரசிக்க வைப்பது என்பது வரை சரி. ஆனால், அந்த விளையாட்டை அடிப்படையாக வைத்து சூதாடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கடந்த சில வருடங்களாக ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறத் தொடங்கியது முதல், திரைமறைவில் இந்த அணிதான் வெற்றி பெறும், இந்த வீரர் இவ்வளவு ரன்கள் எடுப்பார், இந்தப் பந்து வீச்சாளர் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பது போன்றவற்றுக்கெல்லாம் பந்தயம் கட்டுகின்ற சூதாட்டமும் தொடங்கிவிட்டது. தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயையும், ஐ.பி.எல். குழுவினர் மற்றும் வீரர்களைத் தங்கள் வியாபாரத் தூதுவர்களாக்கிப் பெறுகின்ற வணிக ஆதாயத்தையும் விட, சூதாட்டத்தில் புரளும் பணம் பல மடங்கு அதிகம் என்பது 2013-இல் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின்போதுதான் தெரிந்தது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் எல். நாகேஸ்வர் ராவ், நிலய் தத்தா ஆகிய இரண்டு உறுப்பினர்கள் கொண்ட குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. இன்னார் இப்படி இப்படி விளையாட வேண்டும் என்று முன்கூட்டியே நிர்ணயிக்கும் "ஸ்பாட் பிக்சிங்', இன்ன போட்டியில் இன்ன அணி வெற்றி பெறும் என்பதற்கான பந்தயம் நடத்துவது ஆகியவை பற்றி விசாரணை நடத்திய முத்கல் குழு தனது 35 பக்க அறிக்கையைக் இந்த மாதம் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றம் 2013 ஐ.பி.எல். சூதாட்டத்துடன் தொடர்புள்ள விளையாட்டு வீரர்கள் அல்லாத நான்கு நிர்வாக ரீதியான அதிகாரிகளின் பெயர்களை மட்டும் வெளிப்படுத்தி இருக்கிறதே தவிர, அவர்களது நடவடிக்கைகள் பற்றிய முத்கல் குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிடவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கு பந்தயத்திலோ, "ஸ்பாட் பிக்சிங்'கிலோ தொடர்பில்லை என்று கூறும் அறிக்கை, சீனிவாசனும் நான்கு கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்கள் நடைமுறை விதிகளை மீறியது தெரிந்திருந்தும் மெளனம் காத்தனர் என்கிறது.

எந்த மாதிரியான நடைமுறை விதிகள் எந்த விளையாட்டு வீரரால் மீறப்பட்டது? அப்போது மெளனம் காத்ததால் ஐ.பி.எல். போட்டிகளின் மீதான நம்பிக்கைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படவில்லையா? அதுபற்றி அறிக்கை என்ன கூறியிருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸின் குழு நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பனுக்குப் பந்தயம் நடத்தியதில் தொடர்பு இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸின் இணை உடைமையாளர் ராஜ் குந்தரா சூதாட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும், பந்தயம் ஏற்றுக்கொள்ளும் புக்கிஸ் உடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறுகிறது. ஐ.பி.எல். ஒப்பந்தப்படி, விளையாட்டுப் போட்டிக்கு அவப்பெயர் ஏற்படுத்துபவர்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்படுகிறதே அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முத்கல் அறிக்கையின்படி பல விளையாட்டு வீரர்கள் இந்த சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. "நபர் 2' குருநாத் மெய்யப்பனுடன் தொடர்பில் இருந்தார், "நபர் 3' என்கிற விளையாட்டு வீரர் நடைமுறை விதிகளை மீறி இருக்கிறார் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன. யார் இந்த நபர்கள்? அந்த விளையாட்டு வீரர்களின் பெயர்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பது பற்றிய விளக்கம் தரப்படவில்லை.

விளையாட்டு வீரர்களின் பெயர்களை வெளியிடுவதால், கிரிக்கெட் விளையாட்டின் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குலைந்துவிடும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல. ஆடு, மாடு, குதிரை போலத் தங்களை ஏலத்தில் ஒவ்வொரு அணியும் விலைக்கு வாங்க ஏற்றுக் கொண்டபோதே கிரிக்கெட் வீரர்களின் மீதான மரியாதை போய்விட்டது. நம்பிக்கையும் குலைந்துவிட்டது. எனவே, கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருப்பதில் அர்த்தமில்லை.

கிரிக்கெட் விளையாட்டு நியாயமானதாகவும், முறையாகவும் நடக்க வேண்டுமானால் "ஸ்பாட் பிக்சிங்'கில் தொடர்புடைய வீரர்கள் அனைவரின் பெயரும் வெளிப்படுத்தப்பட்டே ஆக வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதுதான் உச்சநீதிமன்றத்தின் கடமையே தவிர, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com