குப்பையோ குப்பை!

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, குப்பைக் கூளங்களை மதுரவாயல் அருகே கூவம் ஆற்றின் கரையில் கொட்டுவதற்குத் தடை விதித்திருக்கிறது.
Updated on
2 min read

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, குப்பைக் கூளங்களை மதுரவாயல் அருகே கூவம் ஆற்றின் கரையில் கொட்டுவதற்குத் தடை விதித்திருக்கிறது. சமீப காலமாக சென்னை மாநகராட்சி தாற்காலிகக் குப்பைக் கிடங்காக கூவம் ஆற்றின் கரையைப் பயன்படுத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவின் மீது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூவம் ஆற்றின் கரையோரமாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, அதன் பின்னணியில் புதிதாகக் குப்பைக் கிடங்கு உருவானபோது மறைந்தது. மதுரவாயலை ஒட்டிய பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டிருக்கும் இன்றைய நிலையில், இந்தத் தாற்காலிகக் குப்பைக் கிடங்கிலிருந்து ஏற்படும் துர்நாற்றமும், அதை எரிய விடுவதால் ஏற்படும் புகை மாசும் சுற்றுப்புறச் சூழலைப் பெரிதளவு மாசுபடுத்துகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

சென்னை மாநகரைப் பொருத்தவரை குப்பை என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறி விட்டிருக்கிறது. 65 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சென்னையில் நாள்தோறும் 5,000 டன் அளவுக்குக் குப்பை சேர்கிறது. இந்தக் குப்பைகளைக் கொட்டக் கொடுங்கையூரிலும், பெருங்குடியிலும் இரண்டு குப்பைக் கிடங்குகள் உள்ளன. 90% குப்பைகள் இந்தக் குப்பைக் கிடங்குகளைத்தான் தஞ்சம் அடைகின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நாளொன்றுக்கு 2,900 டன்னாக இருந்த குப்பையின் அளவு, இப்போது 4,500 டன்னையும் கடந்து ஏறத்தாழ 5,000 டன் அளவுக்கு அதிகரித்து விட்டிருக்கிறது. சென்னை மாநகரத்திலுள்ள 15 மண்டலங்களில் குறைந்தது 85 டன்னிலிருந்து 530 டன் வரை மண்டலத்துக்கு மண்டலம் மாறுபட்டு குப்பை சேர்கிறது. இதில் 70% குடியிருப்புகளிலிருந்தும், 16% வியாபார நிறுவனங்களிலிருந்தும் சேர்கின்றன.

50 லட்சம் மக்கள் தொகையுள்ள கொல்கத்தாவில் தினசரி 6,000 டன்னும், 2 கோடி மக்கள்தொகையிலுள்ள மும்பையில் 7,000 டன்னும் குப்பைகள் சேர்கின்றன. அந்த நகரங்களும் சென்னையைப் போலவே குப்பைகளைக் கையாள வழி தெரியாமல் தவிக்கின்றன. ஆனால், சென்னை அளவுக்குப் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடக்கும் அவலம் அங்கே இல்லை.

சென்னை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள்தான். மும்பையில் பாதியளவு மட்டுமே மக்கள்தொகையுடைய சென்னையில், அந்த மாநகரத்தைவிட அதிகமான நெகிழிக் கழிவுகள் குப்பையில் சேர்கின்றன. மும்பையில் தினசரி 421 டன் நெகிழிக் கழிவு என்றால், நமது சென்னையில் இது 429 டன் குப்பையாகச் சேர்கிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சென்னையின் மிகப்பெரிய குறை, நாம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் குப்பைத் தொட்டிகளில் போடாமல் இருப்பது. அப்படி ஒரு வழக்கத்தை சென்னைவாசி களுக்குக் கற்றுத் தரவோ, பழக்கவோ சென்னை மாநகராட்சி முனைந்து செயல்படாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம்.

குப்பைகளை எப்படிக் கையாள்வது என்பதை இல்லத்தரசிகளுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயசேவைக் குழு போன்ற அமைப்புகளின் உதவியுடன் கற்றுத்தந்து சுகாதாரத்தைப் பேணுவதில் மாநகராட்சி நிர்வாகம் அக்கறையோ, முனைப்போ காட்டாமல் இருப்பதன் விளைவுதான் இது.

எந்தவித வரம்போ, கட்டுப்பாடோ இல்லாமல் தெருவோர தாற்காலிக உணவகங்கள் மூலைக்கு மூலை செயல்படுகின்றன.

அரசின் "அம்மா' உணவகங்கள் வந்தும்கூட இந்த மாலைநேரக் கையேந்திபவன்களின் புற்றீசல் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் இல்லை. சுகாதாரம் பேணப்படாத இந்தத் தெருவோரத் தாற்காலிக உணவகங்களால் ஏற்படும் தொற்றுநோய் அபாயம் ஒருபுறம் இருக்க, இவர்கள் தெருவில் கொட்டும் இறைச்சிக் கழிவுகள் பாதாளச் சாக்கடைகளிலும் அடைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. தெரு நாய்களின் அதிகரித்த தொல்லைக்கும் இவைதான் காரணம்.

வீடுகளில் உருவாகும் கழிவுகளில் 70% உரமாக்கத் தகுந்தவை. இவற்றிலிருந்து உயிரி எரிபொருள் (பயோ காஸ்) தயாரிப்பு கூட சாத்தியம். கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களிலுள்ள குப்பைக் கிடங்குகளில் நெருப்பு வைத்து சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி, சுற்றிலும் வாழும் மக்களை அவஸ்தைக்கு உள்ளாக்குவதை விடுத்து, அந்தக் குப்பையிலிருந்து எரிசக்தி உருவாக்கும் திட்டம் பற்றிய யோசனை இல்லாமல் இருப்பது, வேதனையிலும் வேதனை.

சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் ரூ.400 கோடிக்கும் அதிகமாகக் குப்பை சேகரிப்புக்கு செலவழிக்கிறது. என்ன பிரயோஜனம்? சேகரித்த குப்பையை சேமித்து வைத்து சந்தோஷப்படவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com