இந்த ஆண்டு மழையின் அளவு குறைவாக இருந்தும்கூட, தேசிய அளவில் நெல் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்திருக்கிறது. நெல் மட்டுமல்ல, பருத்தி சாகுபடியின் பரப்பளவும் கடந்த ஆண்டை விட அதிகம்.
மத்திய விவசாய அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி குறுவை சாகுபடிப் பரப்பளவு (1,019.26 லட்சம் ஹெக்டேர்) கடந்த ஆண்டு சாகுபடிப் பரப்பளவைவிட (1,044.69 லட்சம் ஹெக்டேர்) குறைவுதான் என்றாலும், நெல் சாகுபடியின் அளவு அதிகரித்திருப்பது மிகப் பெரிய ஆறுதல். இந்த ஆண்டு மழையின் அளவு, தற்போதைய நிலவரப்படி, நமது தேவையைவிட 11% குறைவாக இருந்தும்கூட, நெல் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்திருக்கிறது.
செப்டம்பர் 26ஆம் தேதி வரையிலான நிலவரத்தை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டின் 374.27 லட்சம் ஹெக்டேரைவிட இந்த ஆண்டுக்கான நெல் சாகுபடி 374.87 லட்சம் ஹெக்டேராக அதிகரித்திருக்கிற அதே நேரத்தில், ஏனைய தானிய விதைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளின் சாகுபடிப் பரப்பளவு குறைந்திருக்கிறது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த 2013-14 ஆண்டைவிட குறுவை சாகுபடிக்கான மொத்த உற்பத்தி அளவு 7% குறைவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. முழுமையான விவரங்கள் அடுத்த ஆண்டுதான் கிடைக்கக் கூடும். அதிக அளவில் நெல் சாகுபடி செய்யும் உத்தரப்பிரதேசமும், ஹரியாணாவும் மழையின் அளவு குறைவாக இருந்ததால் இந்த ஆண்டை வறட்சி ஆண்டாக அறிவித்திருக்கின்றன. அப்படி இருந்தும் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி அதிகரித்திருப்பதுதான் அமைச்சகத்தை வியப்படையச் செய்திருக்கும் புள்ளிவிவரம்.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், தானியங்களின் சாகுபடிப் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவது கவலையளிக்கும் பிரச்னை. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் முனைப்புக் காட்டி குறைந்தபட்சம் எண்ணெய் வித்துகள், பருப்புகளின் சாகுபடிப் பரப்பளவு அதிகரிக்கவும், விளைச்சல் அளவு அதிகரிக்கவும் ஆவன செய்யாமல் போனால் அது ஒட்டுமொத்த உணவுப் பொருள்களின் விலைவாசியைக் கணிசமாக உயர்த்தி, மக்கள் மத்தியில் பரவலான அதிருப்திக்கு வழிகோலும்.
அகில இந்திய அளவிலான நிலைமை இதுவென்றால், தமிழகத்தின் நிலைமை மெச்சும்படியாக இல்லை. உணவுப் பொருள்களின் விலைவாசி 2011-12 உடன் ஒப்பிடும்போது 4.7% அதிகரித்து 12.1% உயர்ந்திருக்கிறது. நமது அரிசித் தேவை 92.63 லட்சம் டன் என்றால் 2013-14இல் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி 69.61 டன் மட்டுமே. பருப்பு வகைகளை எடுத்துக் கொண்டாலும் தமிழகத்தின் தேவையான 10.01 லட்சம் டன்னில், நமது உள்ளூர் உற்பத்தி வெறும் 4.05 லட்சம் டன் மட்டும்தான்.
கடந்த ஆண்டு தமிழக உணவுப் பொருள் உற்பத்தி அளவு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. 2011 உடன் ஒப்பிடும்போது 101.52 லட்சம் டன்னிலிருந்து 56.05 லட்சம் டன்னாகச் சரிந்து 45% வீழ்ச்சியை எதிர்கொண்டது நமது விவசாய உற்பத்தி. அரிசி உற்பத்தி 46% சரிவைச் சந்தித்தது. இப்போது, அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்திருக்கிறோம். ஆனால், அது மட்டுமே ஆறுதலாகிவிடாது.
10ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2002-07) விவசாய நிலத்தின் பரப்பளவும், உற்பத்தி அளவும் அதிகரித்தன. அதுவே 11வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் விளைநிலப் பரப்பளவில் 5.76% சரிவையும், ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவில் 2.65% குறைவையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை.
தமிழக வேளாண்மைத் துறை அதிகாரிகளின் தகவலின்படி, 1970இல் 70 லட்சம் ஹெக்டேராக இருந்த விளைநிலப் பரப்பளவு இப்போது 45 லட்சம் ஹெக்டேராகக் குறைந்து விட்டிருக்கிறது. விளைநிலங்களின் அளவு குறைந்தது மட்டுமல்ல. சராசரியாக ஒரு ஹெக்டேருக்குக் கிடைத்திருக்க வேண்டிய விளைச்சலின் அளவும் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.
இன்றைய மழையின் அளவு, தண்ணீர், தட்பவெப்ப நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 6 டன் நெல் விளைய வேண்டும். ஆனால், அது வெறும் 3.9 டன்னாக மட்டுமே காணப்படுகிறது.
ஒருபுறம் விளைநிலங்கள் வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறன. இன்னொருபுறம், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. விளைச்சலை அதிகரிக்கப் பல வழிமுறைகள் இருந்தும் அதில் நாம் போதிய கவனம் செலுத்தாமலே இருக்கிறோம். கூட்டுறவுப் பண்ணை முறை இதற்கு விடையாக இருக்கக் கூடும். வேளாண்மையில்தான் நமது வலிமை அடங்கி இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

