சறுக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே அனைவருக்கும் வங்கிக் கணக்கு, தூய்மை இந்தியா, எம்.பி.க்கள் கிராமங்களைத் தத்தெடுத்து மேம்படுத்துதல் போன்ற திட்டங்களைத் தொடங்கி அனைவரது பாராட்டுதல்களையும்...
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே அனைவருக்கும் வங்கிக் கணக்கு, தூய்மை இந்தியா, எம்.பி.க்கள் கிராமங்களைத் தத்தெடுத்து மேம்படுத்துதல் போன்ற திட்டங்களைத் தொடங்கி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரும் விவகாரத்தில் அதன் செயல்பாடு ஏற்புடையதாக இல்லை.

மக்களவைத் தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணம் தொடர்பான விவரங்கள் கிடைத்தவுடன் அதைப் வெளியிட்டு, அதில் தொடர்புடையவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்போம் என பாஜக வாக்குறுதி அளித்தது. கருப்புப் பணத்தை மீட்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம் என்றும் சூளுரைத்தது. தனது தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு

வந்தால், வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை உடனடியாக வெளியிடுவதுடன், ஆட்சிக்கு வந்த நூறு நாள்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு லட்சம் கோடி டாலர்களுக்கும் அதிகமான கருப்புப் பணத்தைக் கொண்டு வருவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கருப்புப் பண விவகாரத்தில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் உறுதிபடத் தெரிவித்தார். ஆனால், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 627 பேர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கடந்த ஆட்சியிலேயே அரசுக்குக் கிடைத்துவிட்ட நிலையில், அதை முழுமையாக வெளியிடுவதில் ஜேட்லி தயக்கம் காட்டி வந்தார்.

இந்தப் பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டால், பிற நாடுகளுடன் செய்து கொண்ட ரகசியக் காப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகிவிடும் என்றும், இனி அந்த நாடுகளிடமிருந்து கருப்புப் பணம் தொடர்பான விவரங்களைப் பெற முடியாமல் போய்விடும் என்றும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வைத்த அதே வாதத்தை, நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் கூற முற்பட்டதுதான் வேடிக்கை. வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருமே கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கருத முடியாது என்றும், வரி ஏய்ப்பு செய்துள்ளனரா என்பதைக் கண்டறிந்து வழக்குத் தொடுப்பதற்கான பூர்வாங்க ஆதாரம் கிடைக்கப் பெற்றவர்களின் பெயர்களை மட்டுமே வெளியிட முடியும் என்பதும், முந்தைய அரசைப் போலவே நரேந்திர மோடி அரசும் முன்வைக்கும் வாதம்.

மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி தொடுத்த வழக்கில், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசின் இந்த நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருப்பதோடு, வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவரது பெயர்களையும் ரகசிய உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த அதிரடி உத்தரவுக்குப் பிறகு 627 பேரின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கருப்புப் பணத்தை மீட்கும் விஷயத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்காமல் தடுமாறவே செய்கிறது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜேட்லியின் செயல்பாடு அமைந்துள்ளது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள பெருநிறுவனங்களின் முதலாளிகள், நமது அரசியல் கட்சிகளுக்கு அவற்றின் செல்வாக்குக்கு ஏற்ப பெருமளவு நன்கொடைகளை வாரி வழங்குகின்றனர். அதனால்தான், இத்தகைய பெருநிறுவனங்களின் சட்டவிரோதச் செயல்களை அம்பலப்படுத்துவதில் அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது. இதற்கு பாஜகவும் விதிவிலக்கல்ல என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் செயல்பாடு.

மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கருப்புப் பணத்தை மீட்கும் விஷயத்தில் ஜேட்லியின் செயல்பாட்டை மோடி அரசுக்கு ஏற்பட்ட சறுக்கலாகத்தான் கருத வேண்டியுள்ளது. கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் பாஜக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்தச் சறுக்கலிலிருந்து மீள முடியும்; மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com