ஆம்னி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது; கட்டணத்தை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத இரண்டு கேள்விகள் எழுகின்றன:
தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் மக்கள் பயணம் செய்கிறார்கள். கட்டணமும் குறைவு. அப்படியிருந்தும் இரண்டு மடங்கு அதிகம் வாங்கும் ஆம்னி பேருந்துகளையும் மக்கள் விரும்புகிறார்களே, ஏன் என்பது முதல் கேள்வி.
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தில் அரசு தலையிட முடியாதா, இல்லை தலையிட விரும்பவில்லையா என்பது அடுத்த கேள்வி.
முதல் கேள்விக்கு விடை, தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளைப் பார்த்தாலே புரிந்துவிடும். மிகவும் அழுக்கான வாகனம். ஓடத் தொடங்கி சில மாதங்களேயான பேருந்துகளிலும்கூட, தலைசாய்க்கும் துணி உறைகள் அழுக்காக இருக்கும். ஏசி பேருந்து என்றால் துர்நாற்றம் வீசும். இந்த வாகனங்களைப் பழுதுபார்க்க வேண்டிய அனைவரும் தங்களை அரசு ஊழியர்களாகக் கருதிக்கொள்வதால், பேருந்து நாறிப்போகிறது. பேருந்து நிலையங்களும், அங்கே உள்ள கழிப்பறைகளும் தூய்மையாக இருப்பதில்லை.
மாறாக, ஆம்னி பேருந்துகளில் மிகச் சிலவற்றில் மட்டுமே இப்படிப்பட்ட நிலைமையைக் காண முடியும். மற்றபடி அனைத்து பேருந்துகளும் சுத்தமாக வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நடைக்கும் பேருந்தைப் பெருக்கி சுத்தப்படுத்துகிறார்கள். பல ஆம்னி பேருந்து அலுவலகங்களில் முன்பதிவு செய்த பயணிகள் அமர நாற்காலிகள் உள்ளன. தூய்மையான கழிப்பறைகளும் உள்ளன. இதற்குப் பயணிகள் கொடுக்கும் விலை மிகமிக அதிகம் என்பது உண்மைதான்.
எல்லோருக்கும் டீசல் விலை, விலைவாசி உயர்வு ஒன்றாக இருக்கும்போது, இவ்வளவு அதிகமாக கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் உயர்த்துகின்றனவே, அதில் அரசு தலையிட முடியாதா என்கிற கேள்வி நியாயமானது.
ஒரு தனியார் பேருந்து, ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உரிமம் வழங்கும்போது, அந்தப் பேருந்துக்கு அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு நடைக்குமான நேரம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலைக்குமான கட்டணம்
அரசுப் பேருந்துகளின் கட்டணத்துக்கு இணையாக நிர்ணயிக்கப்படுகிறது. இதை மீறி அதிக நடை இயக்கினாலோ அல்லது வேறு வழித்தடத்தில் சென்றாலோ, அதிகக் கட்டணம் வசூலித்தாலோ அந்தப் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.
ஆனால், ஆம்னி பேருந்துகள் மீது அவ்வாறு எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்க முடியாது. ஏனென்றால், ஆம்னி பேருந்துகள் சுற்றுலாப் பேருந்துகளுக்கான உரிமம் பெற்றவை. இவற்றின் இயக்கம், ஒரு குழுவினரை (ஒரு குரூப்) சென்னையிலிருந்து மதுரைக்கு அல்லது மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வது போன்ற, சுற்றுலாப் பேருந்து நடை போன்றதுதான்.
விழாக்காலப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க வேண்டுமானால், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முன் அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால், ஆம்னி பேருந்துகள் ஒரு குழுவை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஏற்றிச் செல்ல முடியும். தங்கள் தேவைக்கு ஏற்ப வழித்தடத்தை மாற்றிக்கொள்ள முடியும். கூட்ட நெரிசலைப் பொருத்து கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள முடியும். சில நிறுவனங்கள் ஒரே உரிமத்தை வைத்துக்கொண்டு பல பேருந்துகளை இயக்குகின்றன என்கிற குற்றச்சாட்டுகூட உண்டு.
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு தீர்மானிக்க வேண்டுமென்றால், அவற்றுக்கான வழித்தடம், புறப்படும் மற்றும் சென்று சேரும் காலம், வசூலிக்க வேண்டிய கட்டணம் ஆகியவற்றை நிர்ணயித்து அவை அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து - பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும்நிலையை உருவாக்க வேண்டும். அரசு அப்படிச் செய்ய முற்பட்டாலும் நீதிமன்றங்களை அணுகி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தடை உத்தரவு பெற்று விடக்கூடும்.
ஆம்னி பேருந்துகளைப் போல, சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு மக்களை ஊர்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கும் சேவையை தமிழக அரசு விரைவுப் பேருந்துகள் செய்யுமேயானால், மக்கள் இவ்வளவு பணம் கொடுத்து இவர்களை நாட வேண்டிய தேவையே இல்லை. ஆனால், ஆம்னி பேருந்துகள் கொழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, அரசு விரைவுப் பேருந்துகள் அனைத்தும் போக்குவரத்துக் கழக ஊழியர்களால் வேண்டுமென்றே குப்பையாக வைக்கப்படுகின்றனவோ என்று சந்தேகிக்கும் அளவுக்குத்தான் அரசு விரைவுப் பேருந்துகளின் நிலை இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.