தேவை குதிரைப் பேரமல்ல, தேர்தல்!

செயல்படாமலும், கலைக்கப்படாமலும் தொடரும் தில்லி சட்டப்பேரவை பற்றிய தெளிவான முடிவை அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்குள் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

செயல்படாமலும், கலைக்கப்படாமலும் தொடரும் தில்லி சட்டப்பேரவை பற்றிய தெளிவான முடிவை அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்குள் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர்

ஷேர்சிங் டாகர், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஒருவரை விலைக்கு வாங்க முற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அமைக்கப் போகிறதா, இல்லை சட்டப் பேரவை கலைக்கப்பட்டு, தேர்தலுக்குத் தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரைக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால், கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகியது முதல், தில்லியில் துணைநிலை ஆளுநர் மேற்பார்வையில்தான் ஆட்சி நடந்து வருகிறது. துணைநிலை ஆளுநர், பாரதிய ஜனதாக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கோரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

துணைநிலை ஆளுநர், பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பது, கட்சித் தாவலை ஊக்கப்படுத்துவதாகவும், குதிரைப் பேரத்திற்கு வழிகோலுவதாகவும்தான் இருக்கும் என்கிற ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளின் கண்டனத்தில் அர்த்தமில்லை. ஆட்சி அமைக்கப்படுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகுதான் சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்திருப்பதை மறந்துவிடக் கூடாது.

தில்லி சட்டப்பேரவையில் இப்போதைய நிலையில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இல்லை. 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு எட்டு உறுப்பினர்களும் இருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், பாஜகவின் பலம், கூட்டணிக் கட்சியான அகாலிதளத்துடன் சேர்ந்து 29 ஆகக் குறைந்துவிட்டிருக்கிறது. சட்டப்பேரவையின் பலமும் 67 ஆக ஆகிவிட்டிருக்கிறது.

ஆட்சி அமைப்பதற்கு குறைந்தது 34 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாக வேண்டும். அது பாஜகவோ, ஆம் ஆத்மியோ எதுவாக இருந்தாலும், வேறு கட்சியிலிருந்து உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுத்தால் மட்டுமே ஆட்சி அமைக்கக் கோர முடியும். இது நிச்சயமாகக் குதிரைப் பேரத்திற்கு வழிகோலுகின்ற சூழ்நிலை என்பதில் சந்தேகமே இல்லை.

பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளில் எந்தவொரு கட்சியும் மற்ற கட்சியிலிருந்து ஆதரவு பெற்றாலோ, பெற முயற்சித்தாலோ அது நிச்சயமாக அந்தக் கட்சியின் மீதான நல்லெண்ணத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். இது தெரிந்ததால்தான் இவ்விரு கட்சிகளும் கடந்த ஆறு மாதங்களாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருக்கின்றன.

இந்தியத் தலைநகரான தில்லியில், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சி தொடர்ந்து முடக்கப்பட்டு இருப்பது சரியல்ல. அதிலும், பல சர்வதேசத் தலைவர்கள் அரசுமுறைப் பயணமாக வருகை தருகின்ற நிலையில், தில்லி அரசு செயல்படாமல் ஸ்தம்பித்துக் கிடப்பதென்பது, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது.

தீவிரவாதக் குழுக்களின் இலக்காக இருக்கும் இந்தியத் தலைநகரின் பாதுகாப்பு மிகமிக முக்கியமானது. இந்த நிலையில், அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் அதிகாரிகள் கையில் தொடர்ந்து ஒப்படைத்து வைத்திருப்பது புத்திசாலித்தனமல்ல.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கும்போது, சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டுத் தேர்தலை எதிர்கொள்ள ஏன் தயங்க வேண்டும்? கட்சித் தாவலை ஊக்குவித்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முற்பட்டால், அது பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, பாஜகவின் அரசியல் நேர்மையையும் கேள்விக்குறியாக்கிவிடும்.

சட்டப்பேரவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்கிற முறையில் கடைசியாக ஒருமுறை பாஜகவை ஆட்சி அமைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் கோருவதில் தவறில்லை. ஆனால், பாஜக அதையே சாக்காக எடுத்துக்கொண்டு, கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சி அமைக்க முற்படுமேயானால் அது தவறு.

சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, விரைவிலேயே தேர்தல் நடத்தப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தில்லியில் ஆட்சி அமைப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com