அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மாற்றம், முன்னேற்றம், சம்பந்தன்!

32 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் அறிவிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசியலின் காலக் கட்டாயம். தமிழர்களை அரவணைத்துச் சென்றாக வேண்டும் என்ற புரிதலின் வெளிப்பாடு.

Updated On :4 செப்டம்பர் 2015, 8:06 pm

32 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் அறிவிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசியலின் காலக் கட்டாயம். தமிழர்களை அரவணைத்துச் சென்றாக வேண்டும் என்ற புரிதலின் வெளிப்பாடு.
 முன்பு அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, தமிழீழப் பிரச்னையில் பதவி விலகிய பிறகு, தற்போது அதே பதவிக்குத் தமிழர் ஒருவர் வந்திருப்பதால் மீண்டும் பழைய நிலை முற்றிலுமாகத் திரும்பிவிட்டதாகக் கருத முடியாது. இன்னும் அத்தகைய பக்குவப்பட்ட அரசியல் இலங்கையில் உருவெடுத்துள்ளதாக உறுதிபடச் சொல்ல இயலாது.
 பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களையும், அதிபர் சிறீசேனாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி 95 இடங்களையும் பெற்றதால், அடுத்த நிலையில் 16 இடங்களைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்குப் தனிப் பெரும்பான்மை கிடைத்திருந்தாலோ அல்லது கூடுதலாகத் தேவைப்படும் இடங்களை ஜனதா விமுக்தி பெரமுனா பெற்றிருந்தாலோ இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்காது என்பது உறுதி. ஆகவே, இந்தப் பதவி அரசியல் கட்டாயம் என்றாலும்கூட, தமிழர்களுக்கு அனுசரணையானது. ஆதரவானது.
 இதனை ஏற்று மகிழாத தமிழர்களும், தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் இருக்கவே செய்கிறார்கள். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதால் ஏதும் ஆகிவிடப் போவதில்லை என்ற ஊடகக் கருத்துரைகள் இப்போதே வந்துகொண்டிருக்கின்றன.
 வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் வந்தபோதும் இதேபோன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தமிழ் அமைப்புகளுக்குத் தமிழீழம் மட்டுமே மனநிறைவு தரக்கூடும். ஆகவே, இத்தகைய சிறு அரசியல் ஆதரவுச் சூழல்களை, அடையாளங்களால் திருப்திப்படுத்தும் உத்தியாகவே அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் காரணங்கள் இல்லாமலும் இல்லை.
 இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழர் ஒருவர் ஏற்கப்பட்டுள்ளதால் தமிழர்களுக்கு ஆதரவான சூழல் அமைந்துவிடும் என்றோ அவரால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடும் என்றோ கூறிவிட முடியாது. அதேநேரத்தில், ஒன்றுமே இல்லாமல் இருந்த நிலை மாறி தமிழர்களின் குரலையும் மனக்குமுறலையும் தேவைகளையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
 இலங்கை அதிபராக மைத்ரிபால சிறீசேனா பதவியேற்ற பிறகு, 19-ஆவது அரசியல் சாசனத் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிபருக்கு இருந்த பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இரண்டு முறை தொடர்ந்து அதிபராக இருந்தவர் மீண்டும் போட்டியிட முடியாது என்பதும், அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவரின் வயது 30-லிருந்து 35-ஆக உயர்த்தப்பட்டிருப்பதும் மட்டுமன்றி, பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் இடம் மாறியுள்ளன. பல கவுன்சில்கள், பதவி நியமனக் குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த அதிகாரங்களை செயல்படுத்த முனையும்போது அதில் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால், எல்லாக் கட்டங்களிலும் சம்பந்தன் இடம் பெறுவார். அவருடைய தனித்த எதிர்ப்போ, மாற்றுக் கருத்தோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. ஆனால், பதிவு செய்யப்படும்.
 ஆட்சியாளர்களின் அடிமனதைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு தமிழருக்குக் கிடைத்திருக்கிறது. தமிழர் ஒருவரை வைத்துக் கொண்டு, அவர் முன்பாக வெளிப்படையாகத் தமிழ் இனத்தை மனம்போன போக்கில் விமர்சிக்க முடியாது. சாலையில் உள்ள வேகத் தடை போக்குவரத்தைத் தடுக்க உதவாது. ஆனால், வேகத்தைத் தடுக்கும். அரசு முடிவுகளில், தமிழருக்கு ஆதரவான சூழலை உருவாக்கும் வல்லமை சம்பந்தனிடமோ தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ இல்லை என்றாலும்கூட, தமிழர்களுக்கு எதிரான முடிவுகளில், மறைமுகமான அரசியல் கண்ணிகள் வைக்கப்படும் வேளையில், அவர் ஒரு வேகத் தடையாக இருப்பார்.
 82 வயது சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் 22 ஆண்டுகள் செயலாற்றியவர். அவர் ஒன்றுபட்ட, பிளவுபடாத இலங்கையில் தமிழர் உரிமை காண வேண்டும் என்ற கருத்துள்ளவர். மிதவாதி.
 இந்தியாவுக்கு அண்மையில் வந்திருந்த சம்பந்தன், சென்னையில் பேட்டியளித்தபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இலங்கைக்கு அதிக நன்மை செய்ய முடியும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தவர். இலங்கைத் தமிழருக்காக மத்திய அரசு தலையிட்டு, 13}ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அன்றைய தினம் ராஜபட்ச உறுதி கூறியபடி அமல்படுத்த உதவ வேண்டும் என்று கோரியவர். தமிழர் பகுதியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அப்பகுதியில் மறுகுடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்படுபவர்.
 இன்றைய மிக அடிப்படைத் தேவை மீள் குடியமர்த்தல்தான். அண்மையில் நடைபெற்ற தேர்தலில், யாழ்ப்பாணத்தில் ஏழு இடங்களில் ஐந்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால், வன்னியில் ஆறில் நான்கு இடங்கள், மட்டக்களப்பில் ஐந்தில் மூன்று இடங்கள், திருகோணமலையில் நான்கில் ஓரிடமும், அம்பாறையில் ஏழில் ஓரிடமும் பெற்றுள்ளது.
 மீள்குடியேற்றம் தாமதப்படுமேயானால், சிங்களக் குடியேற்றம் மேலதிகமாக நடைபெறும் என்றால், தமிழர்களின் அரசியல் மெல்ல மெல்ல வலுவிழந்து போகும். சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர்களின் மீள் குடியமர்த்தலை உறுதிப்படுத்தும் பெரும் கடமை சம்பந்தனுக்கு காத்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.