அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

சுகாதாரக் குறியீடு!

நல்லரசின் இலக்கணம் என்பதே கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் என்பது மாறி, சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட 1991 முதல், இவற்றையெல்லாம் தனியாரிடம் தாரை வார்ப்பதுதான் சரியான நிர்வாகம் என்கிற மனப்போக்கு நிலைபெற்றுவிட்டது.

Updated On :28 செப்டம்பர் 2015, 7:52 pm

நல்லரசின் இலக்கணம் என்பதே கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் என்பது மாறி, சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட 1991 முதல், இவற்றையெல்லாம் தனியாரிடம் தாரை வார்ப்பதுதான் சரியான நிர்வாகம் என்கிற மனப்போக்கு நிலைபெற்றுவிட்டது. கல்வி, சுகாதாரம் போன்றவை அரசுக்கு வருவாய் ஈட்டித் தராத செலவினங்கள் என்பது போன்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது.
 மருத்துவ வசதி மேம்பாடு என்பது அரசுத் தரப்பில் ஏற்படுவதற்கு பதிலாகத் தனியார் துறையில் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசு அறிவிக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், காலப் போக்கில் மருத்துவ வசதிகளைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான வழிமுறைகளே தவிர, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதாகத் தோன்றவில்லை.
 தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளையும் உள்படுத்துவது, அவற்றின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும்கூட, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வசதிகளும், சிகிச்சையும் தனியார் மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு ஈர்ப்பதாகத் தெரியவில்லை.
 சமீபத்தில் வெளியாகி இருக்கும் "தேசிய சுகாதாரக் குறியீடு 2015', எந்த அளவுக்கு மருத்துவ வசதியில் இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகிறது. இந்தியாவின் இப்போதைய மக்கள்தொகை 127 கோடி. இந்த மக்கள்தொகைக்கு, தனியார், அரசு எல்லாவற்றையும் சேர்த்தும்கூட இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை வெறும் 20,306 மட்டுமே!
 இந்த 20,306 மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு நம்மிடம் இருக்கும் படுக்கை வசதி 6,75,000தான். அதிலும் வேதனை என்னவென்றால், இந்திய மக்கள் தொகையில் 70% பேர் வாழும் கிராமப்புறங்களில், சிகிச்சை பெற மொத்த படுக்கை வசதியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே காணப்படுகிறது. 30% பேர் வாழும் நகர்ப்புறங்களில்தான் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி காணப்படுகிறது. இதற்குத் தனியார் மருத்துவமனைகள் நகர்ப்புறங்களில் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்தப்படவும், படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதிகரித்துவரும் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ற அளவுக்கு, பெரும்பாலான மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் விரிவாக்கம் செய்யப்படுவதில்லை.
 2012-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி 50,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்கிற நிலைமை இப்போது 61,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்று மாறியிருப்பதிலிருந்து, விரிவாக்கம் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்றபடி அமையவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. இன்றைய நிலவரப்படி, 1,833 பேருக்கு ஒரு படுக்கை என்பதாகத்தான் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் படுக்கை வசதி காணப்படுகிறது.
 மருத்துவ வசதிக்காகச் செலவிடப்படும் தொகையில் மத்திய அரசின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. மாநில அரசுகள்தான் ஏறத்தாழ 67% செலவு செய்கின்றன. இதன் விளைவாக, அதிக வருவாயுள்ள அல்லது திறமையான நிர்வாகத்துடன் கூடிய மாநிலங்களுக்கும், குறைந்த வருமானமும், தொலைநோக்குப் பார்வை இல்லாததுமான மாநிலங்களுக்கும் இடையே மருத்துவ வசதிகளை வழங்குவதில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில் 2,50,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனையும், கேரளத்தில் 27,500 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனையும் இருக்கின்றன. அரசு மருத்துவமமனைகள் அதிகம் இல்லாததால் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவனைகள் 80% வெளிநோயாளிகளுக்கும், 60% உள்நோயாளிகளுக்கும் மருத்துவ சேவை வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
 உலக அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (ஜி.டி.பி.) மிகக் குறைவாக சுகாதாரத்திற்குச் செலவிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. சீனாவில் 2.9%, பிரேசிலில் 4.1%, அமெரிக்காவில் 8% என்று சுகாதாரத்திற்காக செலவிடும் நிலையில், நமது செலவழிப்பு விகிதம் வெறும் 1.16% மட்டுமே.
 2022-ஆம் ஆண்டுக்குள், மருத்துவம் சார்ந்த மனிதவளத்தின் தேவை இரட்டிப்பாகி 74 லட்சம் பேர் உருவானால் மட்டுமே, ஓரளவுக்கு மக்களின் சுகாதார எதிர்பார்ப்புகளை நாம் ஈடுகட்ட முடியும் என்பதுதான் நிஜ நிலைமை. மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தால் மட்டும் போதாது. கிராமப்புறங்கள்வரை, மக்களுக்குத் தரமான, முறையான மருத்துவ வசதிகள் போதுமான அளவில் குறைந்த செலவில் கிடைப்பதையும் உறுதிப்படுத்தியாக வேண்டும். அதற்கு அரசு மருத்துவமனைகள் பலப்படுத்தப்படுவதும், பொதுமக்களுக்கு அதன் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்படுவதும் அவசியம்.
 மருத்துவ வசதிகளில் பின்தங்கி இருக்கும்வரை, இந்தியா வளர்ச்சி அடைகிறது என்று பெருமிதம் அடைவதில் அர்த்தமில்லை.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.